நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் ஒன்றை இந்தியா அமைக்க இருப்பதையும் அதை இயற்கை ஆர்வலர்கள் எதிர்த்து வருவதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்பதற்கு டொரினோ மாதிரி இருக்கிறதே, அது என்ன நியூட்ரினோ என்று வலையில் தேடிப்பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன.
இப்போதைக்கு நியூட்ரினோ என்பது ஒரு மின்சுமை இல்லாத, ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாக பயணிக்கக்கூடிய மிகச்சிறிய (மிக மிக மிகச் சிறிய) துகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த துகள் சூரியனில் நடைபெறுகிற அணுப்பிளவு/இணைவு போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையாகக் கிடைக்கிறது. இது தவிர, இது அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்களைக் கொண்டு அணுவைத் தாக்குவதாலோ இவற்றைப் பெற முடியும். ஒவ்வொரு வினாடிக்கும் 50 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1000 பில்லியன்) நியூட்ரினோ துகள்கள் நம் உடம்பில் பாய்கிறது.
இருக்கட்டும். இந்த துகளால் என்ன நன்மை? இந்த துகளின் சிறப்பு என்ன? ஏன் நியூட்ரினோ ஆய்வகம் இந்தியாவில் அதுவும் நீலகிரி வனப்பகுதியில் அமைக்கப்படுகிறது?
மற்ற துகள்கள் (உம் : ஃபோட்டான்) வளிமண்டலத்திலுள்ள மாசுக்களால் (முக்கியமாக மின்காந்த அலைகளால்) வலுவிழக்கக்கூடும். அதனால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால் நியூட்ரினோ, எந்த ஒரு பொருளாலும்/துகளாலும் பாதிக்கப்படாமல் ஊடுருவிச் செல்லவல்லது. இதுவே இதன் சிறப்பு. அதனால் தொலை தூர ஆராய்ச்சிகளுக்கு இந்த துகளைப் பயன்படுத்தலாம். பிரபஞ்சம் உருவான விதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். தவிர சூரியனின் "கோர்" பகுதியை ஆராயவும் இது உதவுமாம். மேலும் பல மகத்தான பயன்களைத் தரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆனால் இந்த நியூட்ரினோக்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. லிட்டர் லிட்டராக வெள்ளை-ஸ்பிரிட் (அல்லது நீர் அல்லது கனநீர்... ) தேக்கப்பட்ட ராட்சதத் தொட்டிகள் மூலமாகப் பிடிக்கலாம். அதற்கு நிறைய இடம் தேவை. நிறைய மாசடையாத இடம். அதற்குத்தான் நீலகிரி. திட்டம் என்னவென்றால், 1.3 கி.மீ ஆழத்துக்குத் மலை உச்சியில் தோண்டி ஆய்வகம் அமைக்கப்போகிறார்கள். அது தவிர ஒரு இரண்டரை கி.மீ தூரத்துக்கு மலையடிவாரத்திலிருந்து அந்த ஆய்வகத்திற்கு குகை மாதிரி தோண்டப்போகிறார்கள். பிற்பாடு, ஜப்பான் அமெரிக்காவிலிருந்தெல்லாம் நியூட்ரினோக்களை கடலடியில் அனுப்பி, நீலகிரியில் பெற்றுக்கொள்ளும் திட்டமும் இருக்கிறதாம் (அடங்கொன்னியா).
மலைப்பாக இருக்கிறது. ஒரு மலையையே குடையப்போகிறார்களா? தோண்டப்பட்ட மண்ணை என்ன செய்யப்போகிறார்கள்? ஆய்வகம் பாதுகாப்பானதா? கதிரியக்க அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? தவிர ஆய்வகம் அமைக்க கட்டுமானப் பொருட்கள் எவ்வளவு தேவைப்படும்? குறைந்த பட்சம் இரும்பு 1 லட்சம் டன், சிமெண்ட் ஒரு 35,000 டன், இவை தவிர அலுமினியம், எஃகு லொட்டு லொசுக்கு என ஒவ்வொன்றையும் அங்கு கொண்டு சேர்க்க எவ்வளவு நேரம் தேவைப்படும்? கிட்டத்தட்ட ஒரு லட்சத்து என்பதாயிரம் ட்ரக்கு சவாரி தேவைப்படும் என ஒரு கணக்கு சொல்கிறது. கட்டுமானம் மட்டும் நான்கு வருடத் திட்டம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 130 சவாரி. எவ்வளவு கார்பன் மாசு வெளிப்படும்? இதெற்கெல்லாம் புதிதாக சாலை ஏதாவது போடப்படுமா? இதையெல்லாம் விட முக்கியமாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடம் முதுமலை வனவிலங்கு காப்பகத்துக்கு மிக அருகில் உள்ளது. அங்குள்ள விலங்குகள் பாதிக்கப்படுமே? இப்படி ஒவ்வொரு காரணத்துக்காகவும் இந்த மலையை அழிக்க ஆரம்பித்தால்...? தமிழகம் பெரிதும் நம்பியிருக்கும் தென்மேற்குப் பருவ மழையின் மூலமான மேற்குத் தொடர்ச்சி மலையின் கதி என்ன? இவை எல்லாம் தான் இயற்கைப் பாதுகாவலர்களின் கேள்விகள்.
இதற்கு விஞ்ஞானிகள் கூறுவதெல்லாம், "இது அணு ஆராய்ச்சிக்கூடம் இல்லை. அதனால் கதிரியக்க பயம் தேவையில்லை" என்பது தான். மற்ற கேள்விகளுக்குப் பதிலில்லை.
எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்கப்படவேண்டும், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், ஏற்கெனவே மனித மாசால் பாதிக்கப்பட்டுள்ள மலைகளின் அரசி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்...
டிஸ்கி 1: உண்மையில், இந்த இடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னமே தெரிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் இசைவு தெரிவிக்காத காரணத்தால் திட்டம் இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.
டிஸ்கி 2 : ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்
டிஸ்கி 3 : இப்படி எல்லாம் யோசித்தால் அறிவியல் எப்படி வளரும் என்று கேட்பவர்களும் ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
9 கருத்து:
//அது தவிர ஒரு இரண்டரை கி.மீ தூரத்துக்கு மலையடிவாரத்திலிருந்து அந்த ஆய்வகத்திற்கு குகை மாதிரி தோண்டப்போகிறார்கள். பிற்பாடு, ஜப்பான் அமெரிக்காவிலிருந்தெல்லாம் நியூட்ரினோக்களை கடலடியில் அனுப்பி, நீலகிரியில் பெற்றுக்கொள்ளும் திட்டமும் இருக்கிறதாம் (//
இது மாதிரி பண்ணறதால நிலநடுக்கமும் வர வாய்ப்பு உண்டு.
// இது மாதிரி பண்ணறதால நிலநடுக்கமும் வர வாய்ப்பு உண்டு. //
Yup. Thanks or coming and the info Ammini
உக்காந்து யோசிப்பியோ....? இல்ல இசுகூலுல காப்பியடிக்குற மாதிரி எங்காச்சும் சுட்டியா...?
எப்புடியோ...அழகான நல்ல தகவல்....!! திருந்தீட்டடா மாப்ள.....!!
நன்றி மாம்ஸ். எல்லாம் சேகரித்த தகவல்களை வைத்து எழுதியது தான்.... சுட்டதெல்லாம் இல்லை.
மகேஷ்.
நன்றி அறிமுகத்துக்கு. நல்ல தமிழில் நிறைய ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பு அறிவியல் கட்டுரைகள் எழுதி சுஜாதா மாதிரி வர ப்ராப்திரஸ்து.
@ செந்தழல் ரவி
நன்றிங்க....
//சுஜாதா மாதிரி வர ப்ராப்திரஸ்து.//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?
விவரமான பதிவிற்கு நன்றி
மேற்கு தொடர்ச்சி மலை முக்கியமா அல்லது நியூட்ரினோ முக்கியமா என்பதை அரசாங்கம் யோசிக்கவேண்டும்.
வாங்க ராசா...
Post a Comment