April 04, 2009

நாட்டியப் பேரொளி



போன வாரம் எம்.ஜி.ஆர் - பத்மினி நடித்த மன்னாதி மன்னன் படத்தைப் பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஒரு காட்சி வரும். பத்மினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடனப் போட்டி. நடனமாடிக்கொண்டே காலால் சிங்கத்தை வரைய வேண்டும். அதுவும் கீழே பார்க்காமல்! ஆனால் அதிர்ஷ்டவசமாக (எம்.ஜி.ஆருக்கு) பத்மினி கீழே விழுந்துவிடுவார். அதனால் அவர் தோற்றதாக அறிவித்துவிடுவார்கள் கலா அக்கா போன்ற நடுவர்கள். அதன்பின் படத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு பத்மினியைப் பற்றி பேச ஆரம்பித்தோம். அப்பொழுது தெரிந்து கொண்ட தகவல்களையும் பின்னர் வலையில் தேடித் தெரிந்துகொண்ட தகவல்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

{}

தமிழ் சினிமா தன் வளர்ச்சியில் எத்தனையோ நடிகைகளைக் கண்டிருக்கிறது.  அழகு, நடிப்பு, நடனம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மிகச்சிலர். அவர்களில் முதன்மையான இடத்தில் திகழ்ந்தவர் பத்மினி.  

1932 ஆம் ஆண்டு ஜூன் 12 தேதி, திருவனந்தபுரத்தைச் சார்ந்த தங்கப்பன் பிள்ளை- சரஸ்வதி அம்மாளின் இரண்டாவது புதல்வியாக பிறந்தார் பத்மினி. இவருக்கு மூத்தவர் லலிதா, இளையவர் ராகினி. ராஜ குடும்பத்தில் பிறந்த பத்மினி தமிழ் சினிமா உலகின் முடிசூடாராணியாகவே விளங்கினார். சிறுவயதிலேயே பரதம், கதகளி மோகினியாட்டம் போன்ற நடனங்களைக் கற்றுத்தேர்ந்த பத்மினியின்  அரங்கேற்றம் பத்து வயதில் நடைபெற்றது. 

{}

1948ல் வெளிவந்த 'கல்பனா' என்ற இந்திப் படத்தில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் வெளிவந்த படம் தமிழில்! 'கன்னிகா' (1947)  என்ற படத்தில் தனது சகோதரி லலிதாவுடன் (சிவ மோகினி நடனம்) திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டில் வெளிவந்த 'வேதாள உலகம்' படத்தில் வரும் பாம்பாட்டி நடனம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இந்த சகோதரிகளின் நடனம் எல்லா படங்களிலும் இடம்பெற ஆரம்பித்தது. 

'மணமகள்' என்ற படத்தில் முழுமையான கதாநாயகி வேடத்தில் நடிக்க ஆரம்பித்த பத்மினி, நடிப்பிலும் தானொரு பேரொளி தான் என்று நிரூபித்தார். அதற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்த படங்களில் சில தில்லானா மோகனாம்பாள், மங்கையர் திலகம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி போன்றவை.

இவர் நடிகர் திலகத்துடன் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'பணம் (1952)'. இதன் பிறகு இந்த ஜோடி கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்து திரையுலகில் கோலோச்சியது. அவற்றில் சில தூக்கு தூக்கி, தில்லானா மோகனாம்பாள், உத்தம புத்திரன், வியட்னாம் வீடு, புதையல், திருவருட்செல்வர் ஆகியவை. உத்தமபுத்திரன் படத்தில் வரும் "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" என்னும் படகு பாடலை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியுமா என்ன? 

மக்கள் திலகத்துடன் மதுரை வீரன், ராணி சம்யுக்தா, ராஜராஜன், மன்னாதிமன்னன் போன்ற பல படங்களிலும் காதல் மன்னனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன், வஞ்சிக்கோட்டை வாலிபன், ஆதிபராசக்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.  

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி-வைஜெயந்தி மாலா போட்டி நடனமும் (கண்ணும் கண்ணும் கலந்து) இடையில் வரும், பி எஸ் வீரப்பா அவர்களின் "சபாஷ்! சரியான போட்டி" என்ற வசனம் வெகு பிரசித்தம். உண்மையிலேயே அது சரியான போட்டி தான். சிங்கமும் புலியும் மோதிக்கொள்வது போல! அந்த பாடலைப் பார்த்தால் குந்தவைக்கும் நந்தினிக்குமான கல்கியின் ஒப்பீடு நினைவுக்கு வருவதாக நண்பர் கூறுவார். 

ஹிந்தியில், மேரா நாம் ஜோக்கர் போன்ற ஒரு சில படங்களிலும் தாய்மொழி மலையாளத்தில் சினேகசீமா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர இந்தி-ரஷ்ய மொழிப் படமான பர்தேசியிலும் நடித்திருக்கிறார். 

பத்மினியின் புகழ்பெற்ற பாடல்களில் மற்றொன்று திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி" என்ற பாடல். பரதத்தின் அபிநயம் பிடிக்கும் பொற்சிலைகளுடன் இவரும் ஒரு உயிருள்ள சிலையாக தோன்றியிருப்பார். 

இத்தகைய ஒரு நடிகைக்கு அம்மன் வேடம் கொடுக்காமல் இருப்பார்களா நம்மவர்கள்? ஆதி பராசக்தி மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் பார்வதி வேடமிட்டு நடித்தார். அதிலும் சரஸ்வதி சபதம் படத்தில் நாரதராக வரும் சிவாஜியை உருட்டி மிரட்டியிருப்பார்.

பெரும்பாலும் பரதம் சார்ந்த நாட்டியங்களையே ஆடி வந்த பத்மினி கழைக்கூத்தாடியாக 'ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா (அமரதீபம்) ' என்றும் ஆடிப்பாடியிருக்கிறார். நடனம் ஆடத் தெரியாத பெண்ணாகவும் ஒரு படத்தில் (சித்தி) நடித்திருப்பார்.

{}

திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே, 1961ஆம் ஆண்டு மே மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு "பத்மினி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்தார். 

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த பத்மினி பல வெற்றிப்படங்களில் நடித்தார். அவற்றில் ஒன்று தான் காலத்தால் அழியாத காவியமான தில்லானா மோகனம்பாள். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நாவலை படமாக்கியிருப்பார்கள். முழுப்படம் கூட தேவையில்லை. "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" பாடல் ஒன்றே போதும் பத்மினியின் திறமையச் சொல்ல! பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தல்!  "அழகர் மலை அழகா இந்த சிலை அழகா" எனும்போது கொடுப்பாரே ஒரு போஸ், இன்றும் எங்கள் ஊர் பெருசுகளுக்கு இந்த பாடலைப் பார்த்தால் கண்ணில் ஒரு மின்னல் வந்து மறையும். அப்புறம் அந்த நலந்தானா பாடல். பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நலம்தானா என்று அவர் கண்கள் விசாரிக்கும்.

{}

1981 ஆம் ஆண்டு செப்டெம்பரில் பத்மினியின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தவர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் டைரக்டர் பாசிலின் வேண்டுகோளுக்கு இணங்கி 'பூவே பூச்சூடவா' படத்தில் நடித்தார். ஓரிரு படங்களில் (ஆயிரம் கண்ணுடையாள்) நடித்த பின்  உடல் நிலை காரணமாக திரையுலகில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று அமெரிக்கா திரும்பினார். 

2003 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு தமிழ் நடுவம் நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன் அவர்கள் பாடலுக்கு அபினயம் பிடித்து ஆடினார் பத்மினி. அதுவே அவரின் கடைசி நடன நிகழ்ச்சி. சிறிது காலத்தில் இந்தியா திரும்பி, சென்னையில் வசித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு திரையுலகத்தினர் நடத்திய கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! 

{}

பத்மினி -  சில விருதுகள்:

*  1957 ஆம் ஆண்டில் "சிறந்த க்ளாசிக்கல் டான்சர்" விருது (Moscow Youth Festival).
*  1954, 1959, 1961 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் "சிறந்த நடிகை" விருது (Film Fans Association)
* 1965 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "கலைமாமணி" விருது
* 1968 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "சிறந்த நடிகை" விருது (தில்லானா மோகனாம்பாள்) 
* 1985 ஆம் ஆண்டு "ஃபிலிம்ஃபேர்" விருது (பூவே பூச்சூடவா).
*  சோவியத் அரசு பத்மினி உருவ ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்தது.

{}

2006 செப்டெம்பர் 24 ல் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் பத்மினி. தேவலோகத்தில் இருந்து தற்காலிகமாக பூமிக்கு வந்திருந்த ஒப்பற்ற பேரொளி விண்ணுலகம் மீண்டது. தமிழ்த் திரையுலகம் உள்ளவரை ஒரு மோகனாங்கியாக, ஒரு சம்யுக்தாவாக, ஒரு வெள்ளையம்மாவாக, ஒரு பாட்டிம்மாவாக என்றென்றும் வாழ்ந்திருப்பார்!

{}

உங்கள் விமர்சனங்களையும் மேலதிக தகவல்களியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும். :) 

அயன் - ஒரு கலக்கல் காக்டெயில்

நிறைய புத்திசாலித்தனத்துடன் எடுக்கப்பட்ட ஒரு பக்கா கமெர்ஷியல் படம். கள்ளக்கடத்தல் தாதா தாஸ் (பிரபு). அவரிடம் வேலை பார்க்கும் படித்த புத்திசாலி இளைஞன் தேவா (சூர்யா). அவர்களை வீழ்த்திவிட்டு நம்பர் ஒன்னாக வரத்துடிக்கும் இன்னொரு கள்ளக்கடத்தல் ஆசாமி கமலேஷ் (ஆகாஷ்தீப் ஷேகல்). இவர்கள் இடையே நடக்கும் விறுவிறு போராட்டம் தான் அயன். 

படமே, நாயகன் "ஆண்டவன் ஆட்டம்" என்ற படத்தின் திருட்டு டி.வி.டி கடத்தும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது. அதை சாமர்த்தியமாக பறிக்கிறான் வில்லன். அதற்க்கப்புறம் வைரம் கடத்த காங்கோ செல்கிறான் நாயகன். அங்கும் அவரிடம் இருந்து வைரத்தைப் பறிக்க சதி நடக்கிறது. அதையும் அதற்கப்ப்புறம் வரும் அனைத்து சதிகளையும் சாகசமாக முறியடிக்கிறான் நாயகன். பிறகு வில்லனை போட்டுக்கொடுக்கும் இன்ஃபார்மராக மாறுகிறான். எதிர்பார்த்த மாதிரியே வில்லனை அழித்து தனது அம்மா ஆசைப்படி ஒரு அரசாங்க வேலையில் அமர, படம் சுபம்.

ஆங்கில நாவல்களில் வருமே! நாயகனுக்கு ஒரு ஆபத்து வரும், மாட்டப்போகிறான் என்று நினைப்போம், ஆனால் அதற்கு முன்னரே ஏதாவது ஒரு மாற்று யோசனை செய்திருப்பான் அதனால் தப்பித்துவிடுவான். இது போல தான் படம் முழுக்க! கடத்தல்களுக்கு உபயோகப்படுத்தப்படும் யுக்திகளை நன்கு யோசித்துச் செய்திருக்கிறார்கள். நாவலாசிரியர் சுபா அவர்களுக்குப் பாராட்டுக்கள்! 

சூர்யா, அசத்தலான் நடிப்பும், டைமிங்க் காமெடியுமாகப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். காதலில் கரைவதாகட்டும், அன்பில் நெகிழ்வதாகட்டும், கோபத்தில் திமிறுவதாகட்டும் சூர்யா சூர்யா தான்! விமான நிலையத்தின் உள்ளே ஆங்கிலத்தில் புலமை காட்டிவிட்டு வெளியே வந்த உடன் சென்னைத் தமிழில் கலாய்க்கிறார்.

பிரபுவுக்கு இது ஒரு நல்ல படம். குறைந்த நேரமே வந்தாலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார். அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி கலகலப்பு. நேர்மை தவறாத சுங்க இலாகா அதிகாரியாக வரும் பொன்வண்ணன், சூர்யாவைப் கையும் களவுமாக பிடிக்க முயலும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சூர்யாவின் நண்பனாக முக்கிய வேடத்தில் விஜய் டி.வி. ஜெகன் நடித்திருக்கிறார். 

இவர் தங்கை தமன்னா. இடையிடையே வந்து சூர்யாவைக் காதலித்துவிட்டுப் போகிறார். வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி வேடம் தான். அழகாக இருக்கிறார்.

எம் எஸ் சரவணனின் கேமரா சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறது. காங்கோ சண்டைக் காட்சிகளில் கூடவே பயணிக்கிறது. பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. "பள பளக்கிற" பாட்டிற்கு அரங்கமே அதிர்கிறது. அந்த பாட்டில் சூர்யா, கஜினி, வாரணம் ஆயிரம், பேரழகன் பட கெட்டப்புகளில் வருவது அழகு. "விழி மூடி யோசித்தால்" பாட்டு கலக்கல். 

இரைச்சல் இல்லாத பிண்ணனி இசை காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது. ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. இசை ரசிக்க வைக்கிறது. 

ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு ஒரு பெரிய பலம். படம் அவ்வளவு வேகம். (சில காட்சிகள் சீக்கிரம் மறந்துவிடும் அளவுக்கு வேகம்). 

படத்தின் ஆடை தேர்வுகளில் இளமை துள்ளுகிறது. வில்லன் மட்டும் மனதில் ஒட்ட மறுக்கிறார். வட இந்திய முகம் வேண்டும் என்பதற்காக இவரைத் தேர்வு செய்திருப்பார்கள் போல.

காங்கோவில் வரும் சேசிங் சண்டைக்காட்சி "கேசினோ ராயல்" படத்தை நினைவுபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறது. பள பளக்கிற பாடலின் நடன அசைவுகள் "ஏத்தி ஏத்தி" பாடலுடையதப் போன்றே இருக்கின்றன. 

படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றினாலும் வலுவான திரைக்கதை மூலம் அந்த குறையை மறைத்து ஒரு நல்ல விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த்.

அயன் - அயர்ன் செய்ய்ப்பட்ட அழகிய சட்டை :)

April 01, 2009

ரகசியமாய்!

கவிதாயினி ஜேன் மார்ட்டினாவைத் தெரியுமா?  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞர் இவர். இவரின் ஒவ்வொரு கவிதையும் காதல் பேசும். நட்பைச் சொல்லும். அவர் கவிதைகளில் நான் ரசித்த இரண்டை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

காதல்
******
உன்னை அறியாமல் நீயும்
என்னை அறியாமல் நானும்
நம்மை அறியாமல் நம்மை ரசித்தோம்,
ரகசியமாய்! 

நட்பு
*****
சருகாய் உலர்ந்து உதிர்ந்தாலும்
தாங்கும் நிலமாய்
நண்பர்கள்.

எப்படி இருக்கு?

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! ஜேன் மார்ட்டினாவைப் பற்றிய தவறான தகவல்களைத் தந்ததற்காக மன்னிக்கவும். :) அவர் இங்கிலாந்தில் வாழவுமில்லை. நான் அவரது கவிதையை மொழிபெயர்க்கவுமில்லை. அவர் எனது அலுவலகத் தோழி! அவர் எழுதிய கொலைவெறி கவிதைகள் தான் இவை என்று சொல்லியிருந்தால் முதலிலேயே அப்பீட் ஆகி இருப்பீர்கள். அதற்காகத்தான் இந்த டகால்டி. 

அவர் சில கவிதைகளைத் தந்து கருத்து கேட்டார். (யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டாங்க! :( ). "எனக்கு கவிதைகளை எல்லாம் விமர்சிக்கத் தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று சொல்லியிருக்கிறேன். 

அதனால் உங்கள் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும், நமீதா சின்னத்... இல்லை இல்லை, பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

March 31, 2009

அயன்




அப்படி இப்படியென்று முக்கால்வாசி படம் பார்த்தாயிற்று! 

முழுக்க முழுக்க சூர்யா படம். ஜிலீர் சிரிப்பும், துடிப்பான நடிப்பும் அதகள ஆக்ஷனுமாய் கலந்துகட்டி கலக்கியிருக்கிறார்.  ஒரு கோபக்கார, நடுத்தர வர்க்க இளைஞன் தேவா (சூர்யா). அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் யுவதி சீமா (தமன்னா). இவர்கள் மத்தியில் தொழிலதிபர் சந்தனபாண்டியன் (பிரபு). இவர்களைப் பற்றிய கதை தான் அயன்.  திரையுலகுக்கு புதிய கதை எல்லாம் இல்லை. எல்லோர் வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவங்கள் தான். திடுக் திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த். முதல் பாதி முழுக்க சூர்யாவும் தமன்னாவும் காதல் கபடி விளையாடியிருக்கிறார்கள். இடையியிடையே ஜெகனின் காமெடி கபடி. இரண்டாவது பாதியில், பார்த்த வரை, ஒவ்வொரு ஃப்ரேமும் விறுவிறுப்பு.    சிக்ஸ் பேக் சிங்கமாக சூர்யா! ஆக்ஷன், காதல், காமெடி என்று ரகளை செய்திருக்கிறார். பிரபுவுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பரிமாணம். 

படத்தில் இன்னொரு அழகான விஷயம் இருக்கிறது. அது தான் சென்னை. அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்கள்!  ஒளிப்பதிவாளருக்கும், கலை இயக்குனருக்கும் ஒரு "ஓ" போடலாம்!!! பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அழகோ அழகு. "விழி மூடி" பாட்டில் மலேஷியாவையும், துருக்கியையும் அள்ளியிருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை, இசை பட்டையைக் கிளப்புகிறது. பிண்ணனி இசை துள்ளும் ரகம். அதுவும் தமன்னாவை சந்திக்கும் போது வரும் சாக்சஃபோன் இசை அட்டகாசம்! 

மொத்தத்தில் அயன் ஒரு இளமைத்திருவிழா! முழுதாகப் பார்க்க காத்திருக்கிறேன்! 


ஒழுங்காக ஆணி புடுங்கிக் கொண்டிருந்தவனை மெயில் மேல் மெயில் அனுப்பி "ஏப்ரல் ஃபூல்" என்று கலாய்த்து புண்ணியம் கட்டிக் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!!!

சின்சியராக படித்த அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள்! 

March 22, 2009

என்ன குறை கண்டீர்கள் "யாருக்கு யாரோ" படத்தில்?


நண்பர்கள் வாயிலாக இந்த படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு (எந்த படமா? "யாருக்கு யாரோ ஸ்டெப்னி" என்ற படத்தைப் பற்றி கேள்விப்படாத உங்கள் அறியாமையை வியக்கிறேன்!) யு-ட்யூபில் தேடினேன். முழுப்படமே பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கிடைத்தது! ஒவ்வொரு பகுதியாக பார்த்ததில் ஒரு விஷயம் புரியவேயில்லை.  ஏன் இந்த படத்தைப் போட்டு ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள்? எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன இந்த படத்தில்!

*  ஒரு Alpha Male தான் கதை நாயகனாக இருக்க வேண்டும் என்றில்லாமல் ஒரு சாமான்யனை நாயகனாகக் காட்டி அவனது ஆசாபாசங்களை படமாக்கியிருப்பதே தமிழ் சினிமாவின் முக்கிய திருப்பம் என்று சொல்லலாம்.

* காதை வருடும் இன்னிசை, கண்ணியமான பாடல் வரிகள் என்று இந்த படத்தின் பாடல் காட்சிகள் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகின்றன அல்லவா? 

* முகம் சுளிக்கும் இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருப்பான சண்டைக்காட்சிகளோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாய் அமைந்திருக்கிறதே, அது போதாதா? 

* "70,000 ரூபாயில் கார்" என்ற கதை நாயகனின் அருமையான லட்சியம் தான் இன்று நமக்கு ஒரு டாடா நேனோ கிடைத்திட முன்னுதாரணமாக இருந்தது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! 

* ஒரு குழந்தை வரைந்த கார் படத்தை வைத்தே, அதைப் போன்ற காரை வடிவமைக்கும் ஒரு அறிவியல் கதையை நம்மால் புரிந்து கொள்ள இயலாதது தமிழ் சினிமாவின் துர்ப்பாக்கியம் தான்.

* வன்முறை ஏதும் இல்லாமல் அமைதியான வழியிலேயே (டாலரைக் கொடுத்து),  துர்புத்திக்காரர்களை திருத்த முடியும் என்பதற்கு இந்த படத்தை விட வேறென்ன உதாரணம் காட்டிவிடமுடியும் உங்களால்? 

* படத்தின் இறுதிக்கட்டத்தில், கார் ஸ்டெப்னியை வைத்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கும் இந்த பாங்கை வேறு எந்த படத்திலாவது காண முடியுமா ? 

* தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் சாதாரண ஏரிக்கரை, கல்குவாரி போன்ற இடங்களிலேயே படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்க விஷயம் அல்லவா ?

* மேலும்.. ஆவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க. என்னால முடியல !  :( 

ஏதாவது நல்லதாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன்! சத்தியமா முடியல! எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது? 

ஹீரோ சாம் ஆண்டர்சன் சார் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை என்னவென்று சொல்ல? அவர் நடை என்ன? உடையலங்காரம் என்ன? வசன (இங்க்லீஷ் வேற!) உச்சரிப்பு என்ன ? நடன அசைவுகள் என்ன ? என்ன.. என்ன? பார்த்த வீடியோ அனைத்திலும் சாரையே கவனித்து வந்ததால் அந்த இரு சொரூபராணிகளைப் (ஜோதி & வர்ணிகா! ) பற்றி அதிகம் சொல்வதற்கு இல்லை.

இறுதிக்காட்சியில் சார் ஸ்டெப்னியைப் பற்றி அவர் இப்படி விளக்கம் கொடுப்பார் என்று தெரிந்திருந்தால், எந்த கார் கம்பெனிகாரனும் ஸ்டெப்னி வைத்தே கார் தயாரித்திருக்கமாட்டான்! 

அந்த கருமாந்தரத்த இங்க போய் பாருங்க! 


அப்புறம் அந்த டாலர் மேட்டர். "உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று நாயகி, நாயகன் தந்த சங்கிலியை அவரிடமே கொடுப்பாராம். அவர் மறுபடியும் நாயகியிடமே திருப்பிக் கொடுப்பாராம். உடனே நாயகி "இனிமேல் எனக்கு எல்லாமே நீங்க தான்"னு சொல்லிடுவாங்களாம்! டேய்! என்னங்கடா நடக்குது இங்க? 

ஜோ ஸ்டேன்லி (இந்த பேர பாத்து தாங்க ஜெர்க் ஆயிட்டேன்! ) தான் இந்த காவியத்திற்கு கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், லைட்பாய்,,, எல்லாமே! இதப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒரு கெரகமும் இல்லை!

சாம் ஆண்டர்சன் சாருக்கு நல்ல பட்டப்பெயர் கொடுத்தே ஆகவேண்டும்! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. :) 

கொசுறு: நம்பினால் நம்புங்கள்! இப்போதெல்லாம் யு-ட்யூப் என்ற பேரைக் கேட்டாலே உடம்பு நடுங்குகிறது! 

March 16, 2009

குஷ்பூவுக்கு ஏன் இந்த வேலை?

கலைஞர் டி.வியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ரஜினி,கமல் சுற்று, ரஹ்மான் சுற்று,  நகைக்சுவை சுற்று இப்படி ஏதாவது ஒரு சுற்று இருக்கும்.  அதில் போன வாரம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிறம் என்ற சரித்திரப் புதுமையான கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்டக்காரர்கள் எல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்கள் (மறுஒளிபரப்பு என்று நினைக்கிறேன்). 

அதில் பச்சை நிறத்திற்கான பாடல் முடிந்ததும் "குஷ்பூ மேம்" ஐ கருத்து கேட்டார்கள். அவரும் தனக்கே உரிய தமிழில் ஆட்டக்காரர்களின் கெமிஸ்ட்ரி , ஃபிசிக்ஸ் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பச்சை நிறத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தார். அதுவும் எப்படி ? 
    "நம் தேசியக்கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது. அது அமைதியைக் குறிக்கிறது. அது மாதிரி நீங்..."

என்னது? பச்சை நிறம் அமைதியைக் குறிக்கிறதா? அப்ப வெண்மை நிறம் எதற்கு? 

எங்கள் ஆசிரியர்கள் எல்லாம் காவி நிறம் தியாகம், வெண்மை - அமைதி, பச்சை - வளம் என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள். இவற்றை மாற்றக்கூடாது என்று உருப்போட வைத்தார்கள். இவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். எரிச்சல் தான் வந்தது!!! 

இந்த மாதிரி ஒரு வெகுஜன ஊடகத்தில், அதிலும் அதிகம் பேரால் பார்க்கப்படும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரி அபத்தமாக பேசலாமா குஷ்.....? சொந்தக் கருத்தைத் தெரிவிக்க இது கற்பு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை மேடம்!!! 

March 15, 2009

லகான் ரீ-மேக்கில் ஜே கே ரித்தீஷ்???

புடுங்குவதற்கு ஆணிகள் குறைவாக இருந்த போது வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போது பழைய செய்தி ஒன்று கண்ணில் பட்டது. முதலில் நம்பவே முடியவில்லை. அப்படியே ஷாக்காயிட்டேன்!!! கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு பார்த்த போது உண்மைதான் என்று தெரிந்தது.

"கானல் நீர்" தந்த காவியத்தலைவன், கலைத்தாயின் கைக்குழந்தை, அஞ்சாநெஞ்சன், வீரத்தளபதி ஜே கே ரித்தீஷ் "லகான்" படத்தை ரீ-மேக்கப்போகிறார்.

இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் தளபதி தான் :). தில்லு முல்லு, தளபதி, வேட்டைப்புலி என்று மூன்று படங்கள் இவர் கைவசம் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு லகான் ரீ-மேக்கில் நடிப்பார் என்று தெரிகிறது. ரீ-மேக் உரிமை குறித்து ஜே கே ஆர் தரப்பினரும், அமீர்கான் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம். (தலைவா, அப்படியே 'தாரே ஜமீன் பர்' படத்தின் உரிமையையும் வாங்கிட்டு வந்துடுங்க. கலந்து கட்டி கலக்கிடலாம்.)

படத்தின் வசனங்களையும், காட்சிகளையும் நினைத்தால் இப்பவே கண்ண கட்டுதே! தளபதி நடித்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு ஸ்டில் முயற்சி செய்தேன். அது உங்கள் பார்வைக்கு!

தலைவா, உங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தலைவா!!!

முக்கிய அறிவிப்பு : தளபதியின் புதிய படத்திற்கு சிறந்த "குத்து வசனம்" (பன்ச் டயலாக்) சொல்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசளிக்கப்படும்.

செய்தி: http://www.kollywoodtoday.com/tag/actor-jk-ritheesh/

March 13, 2009

ஒரு பள்ளியின் மரணம்.

அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

சேலம், ஈரோடு சுற்றுவட்டாரங்களில் இந்த பெயர் ரொம்பவே பிரபலம். எடப்பாடி அருகே மொரசப்பட்டியில் இருக்கிறது இந்த பள்ளி.  மாநில அளவில் மதிப்பெண், 2000 மாணவர்கள், அவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவே 24 பள்ளி பேருந்துகள், திரைப்பட இயக்குனரை வைத்து நடத்தப்படும் ஆண்டுவிழாக்கள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த இந்த பள்ளி இன்று சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு பணம் இல்லாததால் மூடிக்கிடக்கிறது. ஆரம்ப காலத்தில் கீற்றுக் கொட்டகைகளில் தான் வகுப்பறைகள். மாணவர்களை அழைத்து வர ஒரே ஒரு ஆட்டோ தான் இருக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஐந்தாவதில் இருந்து பத்தாவது பின்பு பன்னிரெண்டு என்று வளர்ந்தது. ஆனால் வெகு காலமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கியே பள்ளியை நடத்தி வந்திருக்கிறார் முதல்வர். கொஞ்ச காலத்தில் கடன் கையை மீறியது. அதே சமயத்தில் நிர்வாகத்தில் செய்த சில மாற்றங்களால் ரிசல்ட்டும் மந்தமாகத் தொடங்கியது. போதாக்குறைக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேறு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நிலைமை கை மீறியதில் பள்ளி இழுத்து மூடப்பட்டது. யார் யாரோ பெரிய தலைகள் எல்லாம் இந்த பள்ளியை வாங்கவிருப்பதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் கதவுகள் என்னவோ இன்னும் திறக்கப்படவேயில்லை.  நிறைய பேரின் வாழ்க்கையில் வசந்தங்களை விதைத்துவிட்டு இன்று ஒரு மரணத்தின் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன கட்டிடங்கள்.


இப்போது... 

பள்ளியைக் கடந்து செல்லும்போதெல்லாம்,ஒரு கனத்த மௌனம் வந்து ஆக்கிரமிக்கும். அதே சமயம் மனம் மட்டும் கலவையான நினைவுகளில் மூழ்க ஆரம்பிக்கும். அங்கு படித்த இனிமையான இரண்டு வருடங்கள்,   ராஜம்மாள், ஜாக்லைன் என்று இரு கண்டிப்பான தலைமையாசிரியைகள், "ஸ்டடி ஹவர்" என்ற பேரில் அடித்த அரட்டைகள், அருமையாக ஆங்கிலம் பேசிய ராஜலிங்கம் சார், லைலா போலவே இருந்த கீழ்வகுப்பு கணக்கு டீச்சர், பள்ளி வளாகத்தில் துள்ளித் திரிந்த பதின் வயது பட்டாம்பூச்சிகள், பக்கத்துக் காடுகளில் எல்லாம் சுற்றி சேகரித்த ஹெர்பேரியம், வாட்ச்மேனை டபாய்த்துவிட்டு பள்ளி அருகில் உள்ள ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த பரோட்டா, பக்கத்து கோயில்களில் திருவிழாவின்போது ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் இப்படி ஏதேதோ! 

March 12, 2009

தேர்தலுக்கு நேரம் சரியில்லை..????

லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஆனால் அது சரியான நேரம் இல்லை என்றும் நட்சத்திரங்களும், வானிலையும் கூடி வராத காலத்தில் தேர்தலை திட்டமிட்டுள்ளதால், தேர்தலுக்கு முன்பு பெரும் குழப்பங்களும் வன்முறையும் மூளும் என பீதியைக் கிளப்பியுள்ளனர் ஜோதிடர்கள் (நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!). 

ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஜெகன்னாத் மிஸ்ரா கூறுகையில், இந்திய அரசியலமைப்புக்கு இந்த தேர்தல் நல்லதல்ல. அரசியல் கிரிமினல்களின் கூடாரமாகி விட்டது. (தெரிஞ்சது தானே?) வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு என்கிறார்.

தேர்தலுக்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் வன்முறைகள் மூளும் என்கிறார் மிஸ்ரா. (உளவுத்துறையில இருந்து உங்களுக்கு தகவல் வந்துச்சா?)

இதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிந்த பின்னர், பூகம்பம், கடல் கொந்தளிப்புகள், புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படுமாம். ஏன் மினி சுனாமிகள் கூட வரலாமாம். இதனால் உயிருக்கும், பொருளுக்கும் பேரிழப்பு ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள் (நல்ல விஷயமா எதுவும் சொல்லுங்கய்யா!).

அசோக் சனோரியா என்பவர் கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது, எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கிறார் (அதனாலதான் நேரம் சரியில்லனு சொல்றீங்களா? புரிஞ்சுடுச்சுயா புரிஞ்சுடுச்சு). 

ஹ்ம்ம்ம்ம்ம்,,, எவ்வளவோ கேட்டுட்டோம். இதக் கேட்க மாட்டோமா? 

நன்றி : தட்ஸ்தமிழ்

கிளியூர் அருவி - ஒரு புகைப்படப்பதிவு!!!

ஏற்கெனவே ஏற்காடு பற்றி பதிவிட்டிருந்தாலும், கிளியூர் அருவி பற்றி தனியாக புகைப்படப்பதிவு ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாளைய விருப்பம்.  அதனால் இந்த பதிவு. 

**************

கிளியூர் அருவி சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது.  சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பொதுவாக பருவமழைக்கு பிறகே (ஜூலை முதல் நவம்பர் வரை) அருவியில் நல்ல  நீர்வரத்து இருக்கிறது. மற்ற சமயங்களில் வறண்டே காணப்படுகிறது. 

எப்படி போவது?  

ஏற்காடு ஏரி அருகே ஒரு வழி பிரிகிறது. 

அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ வரை வாகனங்களில் செல்லலாம். நடந்து செல்ல விரும்புவர்கள், வரும் வழியில் இருக்கும் காஃபி தோட்டங்கள் வழியாக 
காலாற நடந்து வரலாம் (திரும்பி வருவது சிரமம்).

அங்கிருந்து அருவி வரை நடராஜா சர்வீஸ் தான். 

சிறிது தூரம் வந்த பிறகு ஒரு சிறிய உணவகம் இருக்கிறது (பெயர் ஏதோ "கார்த்திக்" என்று நினைவு!). 

அங்கிருந்து ஒற்றையடிப்பாதை ஆரம்பிக்கிறது. 

இந்த வழியாக இறங்க ஆரம்பித்தால், இப்படி ஒரு இடம் வருகிறது.

இந்த இடத்தில் கொஞ்சம் வழுக்கும். அப்புறம்.. 

கொஞ்ச நேரத்தில் இந்த மாதிரி சரிவு ஆரம்பிக்கிறது. அடுத்து... 

இந்த மாதிரி இடங்களில்,

இப்படி கவனமாக இறங்கி வந்தால்,  

இந்த இடத்தை தாண்டி, கொஞ்ச நேரத்தில்... அருவி!!! 





ஆள் நடமாட்டம் அதிகமின்றி நமக்கே நமக்கு என்று இருக்கிறது அருவி. மணிக்கணக்கில் குளிக்கலாம்.  அருவிக்கு அருகில் சில பேர் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைப்பதால் ஏகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கிடக்கின்றன.  அதனால்.. கால் பத்திரம்!

பொது நலன் கருதி குளிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தவிர்க்கப்படுகின்றன.. :) 

**************

இனி சில குறிப்புகள்:

1) மழை பெய்திருந்தால் ஒரு நாள் கழித்து போவதே உத்தமம். ஏனெனில் பாதை மிகவும் வழுக்கும். 
2) பெண்கள் மலையேற்றத்திற்கு வசதியான உடை அணிந்து செல்லவும்.
3) அண்மையில் காலில் அடிபட்டிருந்தால் போகாமல் இருப்பதே நலம்.
4) வாடகை காரில் செல்பவர்கள் சரியான வாடகையை முன்னமே பேசிவிடவும்.

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் கிடைக்கும். குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கின்றன. இரண்டு நாள் பயணத்திற்கு அருமையான இடம் ஏற்காடு!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More