October 18, 2010

புகைப்படம் - 19-10-2010


எங்கள் வயலில் எடுத்தப் புகைப்படங்கள். 









*

October 14, 2010

காமன்வெல்த் விளையாட்டு 2010 - பூங்கொத்துகளும் ஒரு சவுக்கடியும்!

பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். 

அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத் தந்தாலும், மொத்தப் பதக்கப் பட்டியலின் (38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்கள்) முன்னால் பெரிதாகத் தெரியவில்லை. Again, விளையாட்டு வீரர்களுக்குத் தேவை ஒழுங்கான அங்கீகாரமும் நல்ல சூழலும். பதக்கம் வாங்கியவுடன் பாராட்டிவிட்டு மீண்டும் அடுத்தப் போட்டிக்கு வீரர்களைத் தேடுவது இனியாவது நடக்காமலிருக்கும் என நம்புவோம். வீரர்களுக்குப் பாராட்டுக்கள். மூன்றாவது இடத்திலிருந்த இந்தியாவை, தங்கம் ஒன்றை வென்று இரண்டாம் இடத்துக்கு ஏற்றி விட்ட சாய்னாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக!!!!!! :) 

சவுக்கடி வேறு யாருக்குமில்லை. தமிழர்களாகிய நமக்குத் தான். இனவெறிக்கு எதிராக தீயாக வேலை செய்யும் இந்திய அரசு ராஜபக்சேவை மட்டும் கௌரவிப்பது என்னைப் பொறுத்தவரை மேலும் ஒரு சவுக்கடி!

*

October 10, 2010

கிராஸ் ப்ராஸஸிங்க் - ஃபோட்டோஷாப்.

ஃபோட்டோகிராஃபியில் கிராஸ் ப்ராஸஸிங் என்றொரு டெக்னிக் இருக்கிறது. ஒவ்வொரு ஃபிலிமுக்கும் ஒவ்வொரு கெமிக்கலை வைத்துப் ப்ராஸஸ் செய்வார்களாம். அவ்வாறில்லாமல் ஒரு ஃபிலிமுக்கு வேறு விதமான கெமிக்கலை பயன்படுத்திப் ப்ராஸஸ் செய்யும் போது வித்தியாசமான எஃபெக்ட் கிடைக்கிறது. 

தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த எஃபெக்ட் இன்று நிறைய தீம்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃபிலிம் ஃபோட்டோக்கள் சரி.. டிஜிட்டலில் எப்படி இந்த எஃபெக்டைப் பெறுவது? இருக்கவே இருக்கிறது வளைவுகள்.. அதாவது Curves!!!!!

1) படத்தை PS ல் திறவுங்கள்

2) Layer > New Adjustment Layer > Curves மூலம் ஒரு adjustment Layer ஐத் திறக்கவும்.

3) இனி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் Curves ஐ பின்வருமாறு மாற்றுங்கள். இப்போதே ஒரு மாதிரி வண்ணங்கள் மாறி இருக்கும்.


மூன்று வண்ணங்களையும் மாற்றிய பின் இவ்வாறு இருக்கும்.




4) இனி ரசனைக்கேற்றவாறு ஷார்ப்னெஸ், காண்ட்ராஸ்ட் மாற்றிக் கொள்ளவும்

5) கடைசியாக ஒரு மஞ்சள் நிற Fill Layer ஐத் திறக்கவும் Layer > New Fill Layer > Solid Color. நிறம் eaff00. இந்த லேயரின் ப்லெண்ட் மோடை Color க்கு மாற்றவும். Opacity ஐ பத்துக்கும் குறைவாக வைக்கவும்.

6) லேயர்களை ஒன்றாக்கி சேமித்துக் கொள்ளுங்கள். Tats it!


*

October 09, 2010

ச்சும்மா...


*

October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. 
”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

இனி படம்... 

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு நடக்கும் விறு விறு சுறு சுறு ரேஸ் தான் எந்திரன்.

ரஜினியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தனது மாஸைப் பற்றிக் கவலைப்படாமல், வழக்கமான எண்ட்ரி இல்லாமல், குத்து வசனங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார். மற்ற So called super stars கவனிக்க வேண்டிய விஷயம் இது. மிரட்டல் தலைவா!!!!

ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார். டான்ஸ் அசத்தல். 

இயக்குனர் ஷங்கர் ஒரு அறிவியல் கதையை முடிந்த அளவுக்கு கமர்சியலாக்கித் தந்திருக்கிறார். வெற்றியும் பெறுகிறார். எங்கேயும் யோசிக்கவிடாத திரைக்கதை கடும் உழைப்பைக் காட்டுகிறது. கடைசி 45 நிமிடங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவரிடமிருந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ரோட்டுக்குப் பெயிண்ட் அடித்து ரண்டக்க ரண்டக்க என்று பாடுவதையல்ல... :) 

சில இடங்களைத் தவிர்த்து கிராஃபிக்ஸ் நேர்த்தியாக இருக்கிறது. கலை, இசை, சண்டைப் பயிற்சி எல்லாம் செம செம... இரண்டாம் பாதியில் வரும் சில ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருக்கலாம். பாடல்கள் பார்க்க நன்றாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்கின்றன. 

மொத்தத்தில் இந்திய நிறத்தில் ஒரு ஹாலிவுட் சினிமா... 

டிஸ்கி 1 : இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.

டிஸ்கி 2 : இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)

டிஸ்கி 3 : ஷாருக் படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வருந்தியிருப்பார். 

*

September 29, 2010

முகங்கள்

”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல.... 


அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்... 


1) திவ்யாக்குட்டி.. 

2) திவ்யா அம்மாவுடன்.

3) நண்பன் விமல்


4) சித்தார்த் (எ) வசந்த்.


5) மாடல்(!) வெங்கி...


6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா...


வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

September 06, 2010

Maze மற்றும் உங்களுக்கு ஒரு புதிர்



முதன் முதலில் Maze எனக்கு அறிமுகமானது ஏதோ ஒரு வார இதழ் மூலம்.  கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள் அல்லது திருடனைப் பிடிக்கக் காவலருக்கு உதவுங்கள் என்ற ரீதியில் தான் இருக்கும் அவை. எனக்கும் இந்த அளவிலான அறிமுகம் தான் இருந்தது ஒரு நாவலைப் படிக்கும் வரை. 


புத்தகங்களில் இருக்கும் புதிர்களில், மொத்தப் புதிரின் ஏரியல் வியூ இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்யலாம். திருத்தலாம். மாறாக, பத்தடி உயரம் கொண்ட சுவர்களால் சூழப்பட்ட, குறுகலானஒரு பாதையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்தவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் நேர்ப்படும். சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கொஞ்ச தூரத்தில் மேலும் சில சாய்ஸ்கள். சாதாரண மேஸ் கான்செப்ட் தான். ஆனால் இரண்டு அல்லது மூன்று முறைத் திரும்பிவிட்டால் திசையும் பாதையும் மறந்துவிடும். பத்தடிச் சுவர் என்பதால் இலக்கும் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. சரியான வழியைப் பிடிக்கும் வரை உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான். இவற்றை லைஃப் சைஸ் மேஸ் என்பார்கள்.  அந்த நாவலில் இது மாதிரி ஒரு மேஸ் தான் வரும். ஆபத்தான நீத்தா காட்டுவாசிகளிடம் அகப்படும் இருவர் ஒரு மேஸுக்குள் அனுப்பப் படுகிறார்கள். திக்குத் தெரியாத அந்தப் புதிருக்குள் கொலைப் பசியுடன் காத்திருக்கும் கழுதைப் புலிகள் வேறு. சரியானப் பாதையைத் தேர்ந்தெடுத்து, கழுதைப் புலிகளிடமிருந்துத் தப்பித்து, குறித்த நேரத்துக்குள் மறுமுனைக்கு வந்து சேர வேண்டும். 



இந்தப் புதிர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளத் தோன்றியது. சிக்கலான மேஸ்களை உருவாக்கியவர்கள் யாரென்று சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. வழக்கம் போல எகிப்து! மேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது பொழுது போக்கிற்காகத் தான் என்றாலும், பிற்பாடு மத நம்பிக்கைகளுக்காகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இங்கு labyrinth என்றொரு கான்செப்ட் வருகிறது. மேஸ் போலில்லாமல், labyrinth களில் தெளிவான ஒரே வழி தான். கிளை வழிகள் இல்லை. இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு திருப்பத்துக்கும் உடல் 180 டிகிரி திரும்புவதால் தற்காலிகமாக வெளி உலகை மறக்கிறீர்கள். அதனால் மன அழுத்தமும் குறைகிறது. தவிர இதிலிருக்கும் ஒரே ஒரு வழி பிறப்பைக் குறிக்கிறது. மையப் பொருள் கடவுள். சிக்கலான பாதை கடவுளை அடைவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களைக் குறிக்க்கிறதாம். இந்து மதத்தில் வரும் எந்திரங்களும் labyrinth தான் என்கிறார்கள். ஆனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட labyrinth பலிபீடமாகப் பயன்படுத்தப்பட்டதாம்(Cretan labyrinth at Knossos). 


இந்தியாவிலும் இந்த மேஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மகாபாரதப் போரின் சக்ரவியூகம் நினைவிருக்கிறதா? நீலகிரியிலும் வட இந்தியாவில் சில குகைகளிம், கோவாவிலும் labyrinth ஓவியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அதன் பிறகு மேஸ்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டது பாதுகாப்புக்காக. விலைமதிப்பற்ற ஒரு பரிசு ஒரு தகுதியானவருக்குத் தான் கிடைக்க வேண்டும். இது தான் சாராம்சம். மேற்சொன்னவாறு தண்டனைக்காக எல்லாம் மேஸ்களை உபயோகப்படுத்தினார்களா என்று தெரியவில்லை..:) 
இன்று இந்த மேஸ்கள் சைக்காலஜி, ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பங்கு வகிக்கின்றன. 

மேஸ்களின் பரிமாணங்கள், பாதைகளின் வடிவம், கிளைகள், மொத்தப் புதிரின் வ்டிவம் என்று நிறைய மாதிரி மேஸ்களை வகைப் படுத்துகிறார்கள். ரொம்பக் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம். கீழிருக்கும் புதிரை மட்டும் கண்டுபிடியுங்கள்! 



*

September 03, 2010

ஃபோட்டோஷாப் - கலர் கரெக்‌ஷன்.

சில புகைப்படங்கள் ஆர்ப்பாட்டமான வண்ணங்களில் அழகு. சில கருப்பு வெள்ளையில்... மூன்றாவதாக, ப்ரைட் கலர்களும் இல்லாமல் முழுக்க கருப்பு வெள்ளையாகவும் இல்லாமல் வெளிறிப் போனது போல ஒரு எஃபெக்டில் இருக்கும் படங்களுக்கும் தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. தனிமையான கட்டிடங்கள் ம்ற்றும் எல்லாவிதமான போர்ட்ராய்ட்களுக்கு ஏற்றது இந்த எஃபெக்ட். இந்த எஃபெக்ட் கொண்டுவர வழக்கம் போல நிறைய முறைகள் இருக்கின்றன. Saturation ஐக் குறைக்கலாம். இன்னும் Gradiant Map இருக்கிறது.

ஆனால் நாம் செய்யப் போகும் இந்த முறையில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. படத்தின் Contrast அப்படியே மெய்ண்டெய்ன் செய்யப்படுகிறது.

இனி வழிமுறை:

1) படத்தை PS ல் திறவுங்கள்.

2) Channels pallet இல் RGB லேயர் மீது Ctrl+Click செய்யவும். படத்தின் Bright Pixel எல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

3) இப்பொழுது Select > Inverse மூலம் Dark Pixel களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4) கருப்பு நிற Solid Color லேயரைச் சேர்க்கவும். Layer > New Fill Layer > Solid Color. Blending mode ஐ Multiply க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

5) செலெக்ஷன் காணாமல் போயிருக்கும். Select > Re-select மூலம் திரும்பவும் தேர்வு செய்துகொள்ளலாம். இப்பொழுது Select > Inverse மூலம் Bright Pixel களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

6) இந்த முறை வெள்ளை நிற Solid Color லேயரைச் சேர்க்கவும். Blending mode ஐ Screen க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

7) Layer > Flatten Image மூலம் எல்லா லேயர்களையும் ஒன்றாக்கிக் கொண்டு படத்தைச் சேமித்துக் கொள்ளுங்கள்.

ஒரு உதாரணம்!

Before
After

August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது.















நன்றி ஹை.

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More