August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது.















நன்றி ஹை.

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும், நீ சமூகத்திற்கு என்ன செய்யப் போற?" என்ற கேள்வியில் வந்து நின்றது. 

"இனி இந்தியப் பொருட்களைத் தான் வாங்குவேன்" என்றான் ஒரு நண்பன்.  

"முடிந்த வரை நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பேன்" என்றான் இன்னொருவன், புகைத்து முடித்திருந்த சிகரெட்டைத் தெருவில் விட்டெறிந்துவிட்டு!

"நண்பர்களுக்குட் ட்ரீட் கொடுப்பதை விட ஒரு சாரிட்டிக்கு டொனேஷன் கொடுக்கலாம்" என்றேன் நான். 

ஒரு வாரம் ஆகிவிட்டது. சுதேசி நண்பன் லேட்டஸ்ட் நோக்கியா மொபைல் வாங்கியிருக்கிறான். அதற்காக McD யில் ட்ரீட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

கஷ்டம்! 

{}

முன்னாள் தோழிக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்த மாதிரி தருணங்களில் கவிதை எழுதும் வழக்கம் இன்னும் இருக்கிறதா? யாராவது யாப்பிலக்கணம் சொல்லித் தர முடியுமா? 

{}


புதிய தோழி இரண்டு ஜோடி Budgerigar வளர்க்கிறாள். இது ஏதோ Breeding சீசனாம் :). அவைகளுக்குக் கூடு கட்டக் கூடத் தெரியவில்லையாம். அதற்கு என்னிடம் சண்டை பிடிக்கிறாள். என்ன கொடுமை சார் இது ?

{}


உங்களுக்கு Super-Ancient கலாச்சாரங்களைப் பற்றியக் கதைகள் பிடிக்குமா? சிம்பல்ஸ்? பிரமிடின் மர்மங்கள் ? Treasure Hunt கலந்த விறுவிறுப்பான ஆக் ஷன் கதைகள் ? பிடிக்க்குமென்றால் உங்களுக்கு மேத்யூ ரெய்லியின் இந்த நாவல்களை ரொம்பப் பிடிக்கும்.

1) Seven Ancient Wonders
2) Six Sacred Stones
3) Five Great Warriors. 

இதே வரிசையில் படிக்கவும். பட்டாசு பட்டாசு! 

{}

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மகேஷ் : ரசிகன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? 
  
மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :) 

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்... 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க!

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிக்க. 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? 

ஒன்றே ஒன்று தான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை :  கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல), வானவில் வீதி கார்த்திக் (இளமை எக்ஸ்பிரஸ்னா தலைவர் தான்)  பிரசன்னா (உயிரோட தான் இருக்கானானு தெர்ல),

கோபம் : எழுத்துச் சுதந்திரத்தைத் தனி மனிதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் எல்லோர் மீதும். 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

தமிழ்ப்பறவை - பரணி - டியர் அண்ணா.. :) 

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

மரண வாக்குமூலமா வாங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... 

டிஸ்கி : தலைப்பு மேட்ச் ஆகவில்லை? 

*

August 10, 2010

லைட் ரூம்

(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.)

ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி முனகி ப்ளாக் & வைட் மாற்றுவதற்குள் என் சிஸ்டத்தில் அரை மணி ஆகும். இங்கு ஒரே க்ளிக்கில் பல்வேறு வகையான எஃபெக்ட்களைத் தெரிவு செய்ய முடியும். 

நன்றாக இருக்கிறது. 

லைட்ரூமில் மாற்றிய ஒரு புகைப்படம்.



ஏற்காட்டில் ஒரு கடைக்கார ஆயா. நிறைய அவர்களை நேரம் போரடித்துவிட்டேன்.

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

July 25, 2010

அசின், இலங்கை, நடிகர் சங்கம்,மீனவர்கள்....


அசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இலங்கை சென்று வந்தாலும் வந்தார், அந்த விஷயத்தை வைத்து ஏகப்பட்ட பேர் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். அசினை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மீனவ நண்பர்கள் கூட விவேக் ஓப்ராய் மற்றும் அசினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தில் இலங்கை செல்ல நடிகர் நடிகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் படிக்கக் கிடைத்தது.

Do I miss something?

என்னவாயிற்று தமிழுணர்வு? அடப்போங்கப்பா.... நாமும் நம் தமிழுணர்வும். கேட்க வேண்டியவர்களைக் கேட்க முடியவில்லை, அசினுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் தடை விதிக்கிறார்களாம். சாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் நம்மவர்கள் போக்கு, அருவருப்பாயிருக்கிறது.

What say you ?

July 19, 2010

பார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்

பார்டர் என்றாலே பிரச்சனை தான். ஆனால் புகைப்படங்களைப் பொறுத்தவரை பார்டர் ஒரு படத்தை எடுப்பாக்கிக் காட்டும். உதாரணத்துக்கு ஒரு ஆறு அல்லது கடலின் புகைப்படம்.... பார்டர் இல்லாமல் தண்ணீர் படத்தைவிட்டு வழிந்தோடும் உணர்வைத் தரும். (என்னது அப்படியெல்லாம் இல்லையா? எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும்! பார்டருடன் கூடிய புகைப்படம் தனி அழகு தான்.
ஃபோட்டோஷாப்பில் மிக எளிய டெக்னிக் மூலம் இந்த பார்டரைக் கொண்டு வரலாம்.

1) தேவையான படத்தை PS இல் திறக்கவும். படத்தின் சைஸ் தெரிந்திருக்க வேண்டும்.

2) கேன்வாஸ் சைசை தெரிவு செய்து கொள்ளுங்கள். Image > Canvas Size

3) கீழ்கண்ட உரையாடல் பெட்டி திறக்கும். பார்டரின் நீள அகலங்களை Width மற்றும் Height ல் நிரப்பவும். Anchor இல் எல்லா அம்புகளும் வெளிநோக்கி இருக்கட்டும். பார்டர் கலரை Canvas Extension Color இல் தெரிவு செய்து கொள்ளலாம்

4) எல்லாவற்றையும் தெரிவு செய்து ஓ.கே கிளிக்கினால் அழகான பார்டர் ரெடி.

கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்!


சில படங்களுக்கு இரண்டு பார்டர்கள் கொடுத்தால் அழகாக இருக்கும்.


ஃபோட்டோவுக்கு காண்ட்ராஸ்ட்டாக மெல்லிய பார்டர் ஒன்று. அதற்கு மேல் ஃபோட்டோவின் கலரை ஒட்டி திக்கான பார்டர் ஒன்று... முதலில் வெள்ளை.. அடுத்து கரும்பச்சைக்கு அதே வழிமுறை.

சில ஃபோட்டோக்களில் நான்கு பார்டர் வரை பார்த்து இருக்கிறேன். படத்தை விட பார்டர் பெரிதாக இருக்கும்.. :)

நன்றி!

July 15, 2010

தாயம்

தாயம்... கிட்டத்தட்ட மறக்கப்பட்ட இந்த ஆட்டம் தான் எங்கள் ஊரின் தேசிய விளையாட்டு. சில வருடங்களுக்கு முன் வரை பொழுது போக்க இருந்த ஒரே அம்சம். அதனாலேயே ஊரில் அனைவரும் இதை விளையாடிப் பழகியிருப்பார்கள். ஆண் பெண் என்ற பேதமெல்லாம் கிடையாது.

என்னதான் அனைவரும் விளையாடினாலும் பாட்டிகள் விளையாடும் போது நிச்சயம் கலாட்டா தான். அவர்களுக்கு வீட்டில் வேலையென்று பெரிதாக எதுவும் இருக்காது. வயலிலும் போய் வேலை செய்ய முடியாது. எவ்வளவு நேரம் தான் தனித்திருப்பது? கையில் தாயக்கட்டையை வைத்துக் கொண்டு சரியான மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போலப் வாசல் பார்த்திருப்பார்கள். வீட்டு வாசலில் யாராவது தென்பட்டால் குஷி பிறந்துவிடும். தேர்ந்த மேலாளரின் பேச்சுத் திறமையுடன் அவர்களை விளையாட்டுக்கு அழைப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் படியாத ஆட்களாய் இருந்தால், அதற்கும் ஒரு தந்திரம் இருக்கிறது.

"சின்னத்தாயி, காப்பி வெக்கட்டுமா? " இது தான் தூண்டில்
"வெய்யிக்கா..." இது மாட்டப் போகும் மீன்.
"சரி, காப்பி காயுற வரைக்கும் ஒரே ஒரு ஆட்டம்" - அவ்வளவு தான். கண்டிப்பாக மீன் மாட்டிவிடும்.

இந்த விளையாட்டு நிறைய கலைச்சொற்களைக் கொண்டுள்ளது(ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும்). நகர்த்தப்படும் காய் சில சமயம் நாய் என்று அழைக்கப்படும். அது ஆடுபவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மலை, சோறு, பழம் எடுத்தல், வெட்டுதல், விருத்தம் எல்லாம் தெரியுமா? விளையாட்டில் கூழ் ஊற்றுவது என்று ஒரு கான்செப்ட் உண்டு. எதிரணியினர் நம் காய்களை வெட்டுவதற்கு முன்னர் நாம் அனைத்துக் காய்களையும் பழமாக்கினால், நமக்கு மாபெரும் வெற்றி. அதாவது எதிரணியினர் கூழ் குடித்தல் என்ற பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். அந்த நிலையிலிருந்து மீள தொடர்ந்து ஏழு ஆட்டங்கள் ஜெயிக்க வேண்டும். அல்லது அவர்கள் நமக்கு கூழ் ஊற்ற வேண்டும். கூழ் ஊற்றினால் வரும் எக்காளம் இருக்கிறதே, பொக்கைச் சிரிப்புத் தான்.

வீர விளையாட்டு என்றால் அனல் பறக்காமலா? விளையாட்டின் விதி முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். இரண்டு வெவ்வேறு ஊர்ப் பாட்டிகள் விளையாட உட்கார்ந்தால் அடிதடியே நடக்கும். அவரவர் விதி முறைகள் அவரவருக்கு உசத்தி தானே? பின்பு யாராவது ஒரு மத்தியஸ்தர் இடையில் புகுந்து, இரண்டு ஊரின் விதிமுறைகளையும் கலந்து ஒரு புது விதிமுறையை உருவாக்கித் தர வேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் பழக முடியாதல்லவா? அரை மனதுடனேயே விளையாடுவார்கள்.

கிரிக்கெட் என்றால் சச்சின் என்று ஒரு நட்சத்திரம். அது போல இந்த விளையாட்டிலும் நட்சத்திர வீராங்கனை இருப்பார்(கொஞ்சம் ஓவர் தானோ?). அவர் கட்டை உருட்டும் போது என்ன கேட்கிறாரோ அது விழும். தாயம் என்றால் தாயம். ஆறு என்றால் ஆறு. இப்படி ஒழுங்காக விளையாடி ஜெயிப்பவர்களும் உண்டு. என் பாட்டியைப் போல ஏமாற்றி ஜெயிப்பவர்களும் உண்டு,.பன்னிரெண்டு விழுந்தால் பதினைந்து கரம் தள்ளி வைப்பது, விழாத தாயத்தை விழுந்ததாகச் சாதிப்பது, யாரும் பார்க்காத போது காயை நகர்த்தி வைப்பது என்று எக்கச்சக்க தில்லுமுல்லுகள். அதுவும் நான் எதிரணியில் இருந்தால் இன்னும் சந்தோஷம். நிச்சயமாகத் தோல்விதான் எனக்கு.

தாயக் கட்டைப் பெரும்பாலும் கட்டையில் இல்லாமல் வெண்கலத்திலோ இரும்பிலோ இருக்கும். கோயில் திண்ணையில் தாயம் உருட்டும் போது எழும் ஜலீர் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும். அந்தச் சத்தத்தைக் கேட்டே ஜமா சேர்ந்து விடும். ஆனால் அந்தச் சத்தத்தைக் கேட்டே வெகு நாட்களாகிறது. கோயில் திண்ணையில் வரையப்பட்ட தாயக்கரம் பூசி மொழுகப்பட்டு விட்டது. வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்கும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எல்.கே.ஜி படிக்கும் அண்ணன் மகள் இது என்ன என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். விவரம் தெரிந்ததும் விளையாடப் பழக்க வேண்டும். :)

உங்களுக்குத் தெரியுமா விளையாட?

July 10, 2010

மதராசப்பட்டினம்



முதல் நாள் பார்த்தே ஆக வேண்டும் என்று ரொம்ப நாட்கள் காத்திருந்து, அடித்துப் பிடித்து ரிசர்வ் செய்து பார்த்தப் படம். கேட்டுக் கேட்டுத் தீர்த்தப் பாடல்கள், ஆவலைத் தூண்டும் விளம்பரங்கள் என்று எத்தனையோ காரணங்கள்!! காத்திருப்பும் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. இயக்குனர் விஜய்க்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடக்கும் நெகிழ்வான, கனமான ஒரு காதல் கதை. சலவைக்கார மல்யுத்த வீரனாக ஆர்யா. பிரிட்டிஷ் சீமாட்டியாக ஏமி ஜாக்ஸன்(பொண்ணு Miss World Teen !!!!). இருவருக்குமிடையே காதல். சந்தர்ப்பவசத்தால் 1947ல் பிரிகிறார்கள். காதலி இங்கிலாந்து போக நேரிடுகிறது. கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஆயாவாக தன் பழைய காதலனைத் தேடிக் கொண்டு(கணவன் இறந்த பிறகு தான் :) ) சென்னை மன்னிக்கவும், மதராசப்பட்டினம் வருகிறார். தேடலையும், காதலையும் அழகான திரைக்கதை மூலமாக அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க காமெடி சரவெடி. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று அறிவிக்கும் போது இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கேசிங். வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அருமை. ஒன்ற முடிகிறது. காட்சிகள் என்று சொல்ல ஆரம்பித்தால் நிறைய சொல்ல வேண்டும்.

ஆர்யா, ஏமி இருவரும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள். ஹனீஃபாவைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். மனிதர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் தியேட்டர் அதிர்கிறது. அவர் இன்னும் வெகு நாட்கள் நம்மோடு இருந்திருக்க வேண்டும். நேதாஜியைப் பின்பற்றும் குஸ்தி வாத்தியாராக வரும் நாசர் முறுக்கிக் கொண்டு திரிகிறார். பாலா சிங், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் மிகக் குறைவாகவே வந்தாலும் நிறைவு.

படத்தின் முக்கிய பலம் கலை(செல்வகுமார்), ஒளிப்பதிவு(நீரவ் ஷா) மற்றும் இசை(ஜி.வி). மூவரும் அருமையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சில இடங்களில் உறுத்தினாலும் சி.ஜியும் நன்றாக இருக்கிறது. Again, பீரியட் படம் எடுப்பது கடினமானது. பணம் ஒரு முக்கியக் காரணி. காட்சிகள், உடைகள், வசனம், சம்பவங்களின் தொடுப்பு இப்படி எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் ப்டத்திலும் உழைப்பு தெரிகிறது. இயக்குனர் விஜய் ரொம்ப அமைதியானவராக்த் தெரிந்தார். ஆனால், படத்தில் அடித்து ஆடியிருக்கிறார்.

பழைய சென்னையைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இந்தப் படம், பல்வேறு படங்களை நினைவு படுத்தினாலும் அதையெல்லாம் வசதியாக மறந்துவிடலாம். சில காட்சிகளின் நீளமும் பெரிதாக பாதிக்கவில்லை.

படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்.

டிஸ்கி : ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More