June 16, 2010

மதிப்பெண்

இந்தத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலெல்லாம் ஒரு குழப்பம் எழுந்து அடங்கும். முடிவுகள் எல்லாம் கன்னாபின்னாவென்று இருக்கும். அதிக மதிப்பெண்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். சில நேரத்தில் எதிராகவும் நடக்கும். எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தியின் நிலைமை இது. பொதுவாக அதிக மதிப்பெண்கள் வாங்கும் பெண் அவள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் நன்றாக எழுதியிருந்தாள். ஆனால் முடிவுகள் அவள் எதிர்பார்த்த மாதிரியில்லை. மதிப்பெண்கள் குறைந்திருந்தன. சந்தேகப்பட்டு விடைத்தாள் நகல் வாங்கிப் பார்த்ததில் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் இரண்டு விடைகள் திருத்தப்படவேயில்லை. இன்னொரு பாடத்தில், சரியான விடைக்கு மதிப்பெண்கள் தரப்படவேயில்லை. சரி மறு கூட்டலுக்கு அல்லது மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால் "இருக்கிற மதிப்பெண்களும் போய்விடப்போகிறது ஜாக்கிரதை" என்கிறார்களாம் அவளது வகுப்பாசிரியை. குழப்பத்தில் இருக்கிறாள்.

இது ஒரு உதாரணம் தான். இதை மாதிரி நிறைய வகை சொதப்பல்கள் இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தும்போது தரப்படும் சம்பளம் போதவில்லையென்று ஒரு ஆசிரியை சில விடைத்தாள்களை ஒளித்து வைக்க முயன்றார் என்று கூட செய்தி வந்தது. எவ்வளவு அலட்சியம்? மாணவர்களின் எதிர்காலமல்லவா இது? இவர்களது கோபத்தைக் காட்ட யாரோ ஒரு முகம் தெரியாதவனின் எதிர்காலத்தைப் பாழடிப்பதா?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் போது நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தோன்றின. ஆசிரியர்களை விட்டுவிடுங்கள். அனைவரும் அதை சேவையாகப் பார்ப்பதில்லை. தொழிலாக மாறி வெகு காலம் ஆகிறது. ஆனால் நம் கல்விமுறை? ஏன் இன்னும் இந்த மாதிரி தேர்வு முறை/மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இருக்கிறது? நிறைய பேர் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தல்லவா தேர்வெழுதுகிறார்கள்? தமிழ்ப்பாடத்தில் வரும் செய்யுள்கள் கூட பொருள் புரிந்து கொண்டு படித்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் தாவரவியலில் வரும் ஒளிச்சேர்க்கைச் சுழற்சியையோ அல்லது இயற்பியலில் வரும் ஏதேனும் ஒரு ஆய்வையோ மனப்பாடம் செய்வதால் என்ன நன்மை இருக்க முடியும்? (நானெல்லாம் மனப்பாடம் செய்தால் தேர்வு எழுதி முடிக்கும் வரை நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். முடித்தவுடம் அந்தப் பாடம் இருக்கும் பகுதியை மட்டும் மூளை தானாகவே ஃபார்மெட் செய்துவிடும்.)

இன்னும் ஏன் இந்த பக்கம் பக்கமாக விடை எழுதும் முறை ஊக்குவிக்கப் படுகின்றது? நுழைவுத்தேர்வுகளில் இருப்பது போன்ற சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை இருந்தால் என்ன? இப்பொழுது இருக்கும் குழந்தைகள் நம்மை விட சீக்கிரம் விஷயங்களைத்(!) தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மாதிரி கல்வி இருக்க வேண்டாமா? இப்போது இருக்கும் முறை தான் மொழிப்பாடங்களுக்குச் சிறந்தது. பிள்ளைகளுக்கு விளக்கி எழுதும் திறமை அவசியம். அதற்கு இந்த முறை தான் சரி என்று ஒரு வாதம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரி? மொழிப்பாடங்களுக்கு மட்டும் இந்த முறையை வைத்துக்கொள்ளக்கூடாதா? கல்வி முறை குழந்தைகளைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை அப்படி இருக்கிறதா என்ன? கல்லூரிகளில் இருப்பது போன்று பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளிலேயே ப்ராஜெக்ட் செய்யவிட்டால் என்ன? பத்தாம் வகுப்பு வரை அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளட்டும்! அதற்கப்புறமாவது அவர்கள் படித்ததை உபயோகிக்கட்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இப்பொழுது இருக்கும் பள்ளிக் கல்வி முறையில் ஒரு மாற்றம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?

June 09, 2010

கூத்து

                              

எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டிவிட்டார்கள். பண்டிகைக்கு ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.  பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தெருக்கூத்து இல்லாமல் எந்த கோவில் விழாவும் நடந்ததில்லை.  கூத்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அதிலும் பாட்டிகள் கூத்து பார்ப்பது அலாதியானது!  கூத்து ஆடபோகிறார்கள் என்றாலே பாட்டிகளுக்கு குஷி பிறந்துவிடும். எந்த ஊர் பார்ட்டி, என்ன கதை ஆடப்போகிறார்கள் என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மாலையில் சீக்கிரமே வேலைகளை முடித்துவிட்டு கூத்து பார்க்க போவதற்கு ஜமா சேர்ப்பார்கள். கூத்தாடுபவர்களை பார்த்துவிட்டால், இவரிவர் இன்னின்ன வேஷம் கட்டபோகிறார்கள் என்று யூகிப்பார்கள்.

கூத்து, பொதுவாக வெட்டவெளியில், ஏதாவது அறுவடை முடிந்த வயலில் தான் நடக்கும். ஒரு கபடி கோர்ட் மாதிரி போட்டு ஒரு பாதியை படுதா ஏதாவது வைத்து சுற்றி மறைத்து விடுவார்கள். இது வேஷம் கட்டுவற்கு. (நிறைய பேர் இந்த படுதாவை சுற்றி நின்று கொண்டு உள்ளுக்குள் வேடிக்கை பார்ப்பார்கள். அது எதற்கு என்று ஊகித்துக்கொள்ளுங்கள் :).. ). இன்னொரு பகுதி கூத்து ஆடுவதற்கு! இந்த பகுதியை சுற்றிலும் முதல் வரிசையில் இடம்பிடிக்க பாட்டிகள் மத்தியில் பலத்த போட்டி நடக்கும். அமருவதற்கு பாய் அல்லது கோணிப்பை, ஒரு போர்வை சகிதமாக கூத்து ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே வந்துவிடுவார்கள். இடம் பிடிக்க வேண்டுமே! தாத்தாகளை டபாய்த்துவிட்டு லேட்டாக வரும் பாட்டிகளுக்கு முன் வரிசை இடம் கிடப்பதில்லை. கடை போடும் பாட்டிகள் மட்டும் முன் வரிசையை விரும்புவதில்லை. சற்று தள்ளி, கூத்து பார்ப்பதற்கு ஏதுவாக தங்கள் கடையை போட்டுவிடுவார்கள். ஒரு கட்டிலில் கோணிப்பையை விரித்து, வெற்றிலை, முறுக்கு, பீடி-சிகரெட், பாக்கு வகையறாக்கள் என்று இரவு நேரத்தை தூங்காமல் கழிக்க உதவும் பொருட்களாக விற்பார்கள்.

கூத்து ஆரம்பித்தவுடன் எல்லா பாட்டிகளும் அமைதியாகிவிடுவார்கள். முதலில் வரும் கோமாளியுடன் மட்டும் பாட்டிகள் எளிதில் பழகி விடுவார்கள். கோமாளியுடன் ஏதாவது பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில நேரம் கோபம் வந்தால், கோமாளியை அடித்துவிடும் பாட்டிகள் கூட உண்டு. (தூங்கிகொண்டிருந்த என்னை தூக்கிக்கொண்டு போய் வேஷம் போட்டுவிட முயன்ற போது, என் பாட்டி, தான் வைத்திருந்த கோலால் கோமாளியை அடித்திருக்கிறார்). ஏதாவது சண்டை நடக்கும் கட்டம் வந்தால் சில பாட்டிகள் கதாநாயகனை உற்சாகப்படுத்துவார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்று நடிகர்களுடன் வாக்குவாதம் செய்யும் பாட்டிகளும் உண்டு. பொதுவாகவே எல்லோரும் தூங்காமல் கூத்தை கண்டுகளிப்பார்கள். சில பாட்டிகளுக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கத்தை அடக்க முடியாது. அவர்களை எழுப்புவதற்காகவே, முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். கூத்து முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் பாட்டிகள் இருந்து பார்த்துவிட்டு வருவார்கள். தவசி நாடகம் என்று பாட்டிகளால் அன்போடு அழைக்கப்படும் "அர்ஜுனன் தபசு" என்ற நாடகம் அவ்வப்போது நடக்கும். இதில், மரத்தில் ஏறிக்கொள்ளும் நடிகர் (அர்ஜுனன்) விடிந்து எவ்வளவு நேரம் ஆனாலும், கழுகு கண்ணில் தென்படும் வரை இறங்கமாட்டார். கதை அப்படி! அவர் இறங்கும் வரை காத்திருந்து பார்த்து, கூத்தை சிறப்பித்துவிட்டு வருவார்கள்.

ஒரு நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை அவர்களுக்கு. பாட்டிகளுக்கு பொதுவாக இரண்டு விஷயங்கள் பிடிக்காது.

1) வழக்கமாக பெண் வேடமிடும் நடிகர், அவசரத்துக்கு ஆண் பாத்திரத்திற்கு வேடமிட்டால் பிடிப்பதில்லை.
2) பெண் வேடத்திற்கு "பணம் குத்தும்" தங்கள் வீட்டு தாத்தாக்களை சுத்தமாக பிடிப்பதில்லை.

இப்போது சுயத்தைத் தொலைத்த கிராமங்களில் நமீதாக்களும், ஸ்ரேயாக்களுமே ஊர்த்திருவிழாவில் இடம்பெறுவதால் பாட்டிகளால் கூத்து பார்க்க முடிவதில்லை. அது ஒரு ஏக்கமாகவே இருக்கிறது அவர்களுக்கு.  :(


June 06, 2010

ஃபோட்டோஷாப் - கலரடிக்கலாம் வாங்க - Color Enhancing



சில புகைப்படங்கள் கலரே தெரியாமல் மிக டல்லாக இருக்கும். கலர் கொஞ்சம் ப்ரைட்டாக இருந்திருந்திருந்தால் அந்த புகைப்படமே அழகாகியிருக்கும் என்று நினைப்பீர்கள். சரி எடுத்த பின்பு வருத்தப்பட்டு என்ன செய்வது? ஃபோட்டோஷாப் இருக்கவே இருக்கிறது.

கீழ்கண்ட இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். முதல் படம் கொஞ்சம் வெளிறிப்போய் இருப்பதாக நினைத்தேன். சூர்யாஸ்தமனம் ஃபீல் கொடுக்க இன்னும் சிவந்த வானம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஃபோட்டோஷாப் உதவியுடன் இரண்டாவது படம் கிடைத்தது.





இதை எப்படிச் செய்வது?

1) படத்தை PS ல் திறங்கள்.

2) படத்தை Lab Color Mode க்கு மாற்றிக்கொள்ளுங்கள் Image > Mode > Lab Color

3) புதிய Curves Adjuastment Layer ஐத் திறந்து கொள்ளுங்கள். Layer > New Adjustment Layer > Curves

4) New Layer பெட்டியில் ஒ.கே கொடுத்தால் Curves பெட்டி திறக்கும். பொதுவாக Curves 4 x 4 கட்டங்களாக இருக்கும். ஆனால் நமக்கு 10 x 10 கட்டங்கள் தேவை. அதனால் Alt ஐ அழுத்திக்கொண்டே Curves மீது க்ளிக் செய்யுங்கள். 10 x 10 கட்டங்கள் திறக்கும்.

5) இனி தான் கலர் கரெக்டிங்க். Curves பெட்டியில் Channel ல் Lightness தெரிவாகியிருக்கும். அதற்குப் பதிலாக A Channel ஐ தெரிவு செய்யவும். நேராக இருக்கும் கர்வின் இடது கீழ் முனையை இரு கட்டங்கள் வலது பக்கம் தள்ளுங்கள். அதே போல வலது மேல் முனை இரு கட்டங்கள் இடப்பக்கம்...



6) இதே போல B Channel க்கும் செய்யுங்கள். கலர் கன்னாபின்னாவென்று அதிகமாகியிருக்கும். கலர் ரொம்ப அதிகமாகியிருந்தால் Opacity அளவைக் குறைத்துக் கொள்ளவும். படத்தை ஆர்.ஜி.பி க்கு மாற்றிக் கொள்ளலாம்.

Hope Its Good! 

June 01, 2010

ஐயைய்யோ பதிவுலகம்.


சில நாட்களாக இந்த தமிழ்ப் பதிவுலகம் முழுக்க ஒரே கூச்சல் குழப்பம். ஊரே அவசரமாகப் பஞ்சாயத்துக்கு ஒடிக் கொண்டிருக்கும்போது நமக்கு மட்டும் காரணம் புரியவில்லையென்றால் எப்படி இருக்கும்? அந்த மன நிலையில் தான் இருந்தேன். என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை. ஆஃபீஸ் லீவ் போட்டு விட்டு அங்கே தேடி இங்கே தேடி சில பல பதிவுகளைப் படித்து ஒரு வழியாகப் பிரச்சனை புரிவதற்குள் இன்னும் பல பதிவுகள். எல்லாப் பதிவுகளின் சாராம்சம் இது தான்... 

நர்சிம் செய்தது பாதகம், இல்லையில்லை முல்லை தான் ஆரம்பித்தார்கள். அட..... ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்கப்பா! நோ நோ.... நடுநிலை என்பது அயோக்கியத் தனம்... ஒரு பக்கச் சார்பாகப் பேசியே ஆக வேண்டும். தவிர நடுநிலையாகப் பேசினால் நாட்டாமையாமே? சரி அமைதியாக இருந்து தொலைக்கலாம் என்றால், பதிவர்கள் எப்படி அமைதியாக இருக்கலாம்....? கருத்து சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு சொரணை கெட்டவர்களா நம்மவர்கள்? சரி விடுங்க. ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும். அதெப்படி? இது பொது வெளி, விவாதத்திற்கு வந்தால் எல்லோரும் பேசத்தான் செய்வார்கள். ஒன்று மட்டும் புரிகிறது. ஏதாச்சும் செய்யணும் பாஸ்! 

அதனால் ஒன்றும் சொல்லாமல் விட்டால் ஊரை விட்டே ஒதுக்கு வைக்கப்படும் அபாயத்திலிருப்பதால் கிராமப்புறங்களில் நடப்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்கள் ஊரிலெல்லாம் சர்வசாதாரணமாக சண்டை நடக்கும். இங்கு நடந்ததை விட அசிங்கமான வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கும். மிகத் தரம் தாழ்ந்த வார்த்தைகள். மேல் சாதி - கீழ் சாதி, ஆண் - பெண். இப்படி வகை தொகை தெரியாமல் சண்டை நடக்கும். உணர்ச்சி வசத்தில் வந்து விழும் வார்த்தைகள் அவை. ஆனால் அவையெல்லாம் ஆணாதிக்கம் என்றோ சாதி வெறி என்றோ முத்திரை குத்தப்படுவதில்லை. சில மாதங்களிலேயே அடித்துக்கொண்ட இருவரும் பட்டும் படாமலும் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். நாம் படித்தவர்கள்! 

அதே போல் இந்தப் பிரச்சனையும் தீரும் என்ற நம்பிக்கையுடன், ஒருவேளை சண்டையிட்டுக்கொள்ளும் இருவரும் தங்களது கசப்புகளையெல்லாம் மறந்து (அட.. ஒரு வாதத்துக்காவது வைத்துக்கொள்ளுங்களேன்.) சமாதானமாக முன்வந்தால், வரிந்து கட்டி வக்காலத்து வாங்கிய நாமெல்லாம் நமது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம் என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறேன். மன்னிப்பதும் மறப்பதும் மனித இயல்புதானே?

இந்தப் பிரச்சனையில் ஐஃபா அழைப்பை நமீதா ஏற்க மறுத்த சரித்திரப் புகழ் வாய்ந்த செய்தியைக் கவனிக்க மறந்துவிட்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

டிஸ்கி : பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் நாட்டாமையின் பேரனாக்கும் நான்!

May 27, 2010

தேவதை - Skin Smoothening Technique.

நிறைய குழந்தைகளின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.

உதாரணத்துக்கு இந்தப் படத்தைப் பாருங்கள்.

இதன் ஒரிஜினல் வடிவம் இது.


சரி இந்த Effect எப்படிக் கொண்டு வருவது...?

1)  படத்தை PS ல் திறக்கவும்.(கருப்பு வெள்ளையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)

2)  பின்னணி லேயரை நகலெடுத்துக்கொள்ளவும்.

3) Blending Mode ஐ Overlay க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

4) Image > Adjustments > Invert. இதன் மூலம் படத்தை பின்னணி லேயரை இன்வெர்ட் செய்து கொள்ளுங்கள். 

5) இனி Smoothen செய்யும் நேரம். Filter > Other > High Pass இதைச் செய்யும். High Pass Radius அளவை மாற்றி விளையாடுங்கள். பொதுவாக 25 முதல் 50 வரையில் நன்றாக் இருக்கும்,

6) இந்த முறையில் படத்தின் எல்லா இடங்களிலும் Smoothen ஆகியிருக்கும். அதனால் ஒரு லேயர் மாஸ்க்கை உபயோகித்துத் தேவை இல்லாத இடங்களில்(முக்கியமாக கண்) இந்த effect ஐ நீக்கி விடலாம். அவ்வளவுதான்!

May 17, 2010

அரட்டை - 18-5-2010

ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!).  ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, ‍நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட‌ இருக்கிற‌தாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாச‌மில்லா ம‌ல‌ரிது நினைவிருக்கிற‌தா?

ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :)

{}

செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா? செம்மொழி மாநாட்டுப்பாடல். கலைஞரின் கவிதை வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.

டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா, ரஹ்மான், அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஹரிஹரன், கார்த்திக், சின்மயி, பென்னி தயள், நித்யஸ்ரீ, நரேஷ் அய்யர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, பிளாசி என‌ முப்ப‌து பேர் பாடியிருக்கிறார்க‌ள் ஆறு நிமிட‌ப் பாட‌லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர். என்று ஆரம்பிக்கிறது பாடல். நிறைய முறை கேட்டால் தான் புரிகிறது. 


அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதியந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ‍- ஆகா!

பிளாசியும் ஸ்ருதியும் சேர்ந்து "கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்" என்று பாடுவது செம க்யூட். 

ரஹ்மானுக்கு நன்றிகள்! ராவணன் பாடல்கள் கூட இப்படிக் கவரவில்லை. :)

{}

குஷ்பூ தி.மு.க வில் சேர்ந்தாயிற்று. இனி சுந்தர்.சி நடிக்கும் படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும்... என்ன கொடும குஷ்பூ இது?

{}

பிட் குழுவினரின் சூரிய உதயம்/அஸ்தமனம் போட்டிக்கு நானும் ரௌடிதான் என்ற ரேஞ்சுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தேன். 
அவர்களும் எடுத்துக்கொண்டார்கள். அது.. 



May 16, 2010

கருப்பு வெள்ளை - 1

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச சமம் என்பார்கள். அதிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இன்னும் ஒரு படி மேல்! ஆனால் என்னதான் Grayscale/Monochrome மோடில் குமுறக் குமுற படம் எடுத்தாலும் சில சமயம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. அதற்குத் தீர்வு Post Processing தான். ஒரு வண்ணப் புகைப்படத்தைக் கருப்பு வெள்ளைக்கு மாற்ற நிறைய முறைகள் இருக்கின்றன. Channel Mixer, Adjustment Layer என்று பல வழிகளில் கருப்பு வெள்ளைக்கு மாற்றலாம். இன்னொரு முறை இருக்கிறது. இந்த முறை புகைப்படத்தின் வெளிச்ச அளவை அடிப்படையாகக் கொண்டது. நல்ல ரிசல்ட் தருகிறது. இதற்கு Gorman-Holbert முறை என்று பெயர்.

பின்வரும் படத்தை இந்த முறையில் மாற்றிப் பார்க்கலாம்.


1) படத்தை PS ல் திறவுங்கள்.

2) Lab Color Mode க்கு மாற்றுங்கள். Image > Mode > lab Color.

3) Chanel Palette க்குச் சென்று Lightness Chanel ஐ மட்டும் செலக்ட் செய்யுங்கள்.


4) இப்போது படத்தை Grayscale க்கு மாற்றுங்கள். Image > Mode > GrayScale. a மற்றும் b Chanel களை விட்டுவிடுங்கள்.


5) Ctrl கீயை Press செய்து கொண்டே Gray Channel மீது Click செய்யுங்கள். படத்தின் Bright Pixel எல்லாம் தேர்வு செய்யப்பட்டிருக்கும். Select > Inverse மூலம் Dark Pixel களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

6) படத்தை RGB க்கு மாற்றிக்கொள்ளுங்கள். Image > Mode > RGB Color.

7) Layer Palette சென்று New Solid Color Layer Create செய்யுங்கள். ஏதாவது ஒரு கலரைத் தேர்ந்தெடுக்கலாம்.


8) Solid Color Layer ன் Blend Mode ஐ Multiply க்கு மாற்றுங்கள்.

9) Shift + Ctrl + Alt + E சேர்த்து அமுக்கி, இதுவரை செய்த மாற்றங்களையெல்லாம் புதிய லேயருக்கு மாற்றிவிடலாம்.

10) Blend Mode ஐ Overlay க்கு மாற்றுங்கள். Opacity ஐ 15 லிருந்து 25 வரை வைக்கவும்.

11) Filter > Other . Highpass ல் Radius ஐ உங்களுக்குப் பிடித்தவாறு மாற்றவும்.

12) இப்போது Layer > Flatten Image மூலம் இரண்டு லேயர்களையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள்.

மாற்றிய பின் கிடைத்த படம்!



இந்த முறை முழுக்க முழுக்க படத்தின் Brightness ஐ அடிப்படையாகக் கொண்டது. அதிக Contrast உள்ளப் புகைப்படங்களுக்கு மற்றும் Portrait களுக்கு இது மிகவும் ஏற்றது. இந்த முறை எல்லாப் புகைப்படங்களையும் ஒரே மாதிரி தான் மாற்றுகிறது. Still Its Good!

May 12, 2010

பெய்யெனப் பெய்த மழை.


எங்களது ஒரு விவசாயக் கிராமம். வாய்க்கால், ஏரிகள், கிணறுகள் என்று நீர் நிலைகள் சூழ்ந்த கிராமம். ஆனால் இன்று எல்லாம் வ‌ற‌ண்ட‌ நிலையில். ம‌ழை என்ற‌ ஒன்றே ம‌ற‌ந்து போன‌ பிற‌கு எங்க‌ள் விவ‌சாய‌ம் ந‌ம்பியிருந்த‌தெல்லாம் ஆழ்துளைக் கிண‌றுக‌ளை ம‌ட்டுமே. ஆயிர‌ம் அடி அல்ல‌து ஆயிர‌த்து முன்னூறு அடி வ‌ரை தோண்டி அங்கு கிடைக்கும் நீர்க்கால‌க‌ளையும் உறிஞ்சியெடுத்துவிட்டோம். ஆழ்துளைக் கிண‌றுக‌ளும் இன்றோ நாளையோ என்ற‌ நிலையில் இருக்கின்ற‌ன. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரில் இரு தென்னை மரங்களின் தாகம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு காலத்தில் க‌‌ரும்பு, நெல், வாழை, ம‌ஞ்ச‌ள் என்று விளைத்த‌ எங்க‌ள் நில‌மெல்லாம் க‌ல‌க‌ம் செய்து சோள‌த்துக்கு மாறிவிட்ட‌ன. அல்லது சும்மாயிருக்கின்றன. 

இந்த நிலை நாங்களே தேடிக் கொண்டது. விவசாயத்துக்குக் கிடைத்த முக்கியத்துவம் நீர் ஆதார மேம்பாட்டுக்குத் தரப்படவில்லை. நிலத்தடி நீர் மேம்படுத்தப்படவில்லை. இருக்கும் நீரும் சரியாக வகையில் உபயோகப்படுத்தப்படவில்லை. உதாரணத்துக்கு ஒரு வயல் தாண்டியிருக்கும் ஒற்றைத் தென்னையாக இருந்தாலும் வாய்க்கால் வழியாகத் தான் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மழை. ஊரைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு கதவுகளாக, ஜன்னல்களாக மாறின. ஏரியிலிருந்த கருவேல மரங்கள் கூட விறகுகளுக்காக வேட்டையாடப்பட்டன. மழைப்பொழிவு குறைய ஆரம்பித்தது. மரங்களின் முக்கியத்துவத்தையும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தையும் எடுத்துச்சொன்னவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள். சாலையின் ஓரங்களிலும் மரக்கன்று வைக்க அனுமதி மறுத்தோம். மரம் வளர்ந்து பெரிதானால் நிழல் தரும். நிழல் விழும் இடத்தில் வெள்ளாமை பாதிக்கும். அதனால் எங்கள் வயல்களையொட்டிய சாலையோரங்களில் மரம் வளர்வதை அனுமதிப்பதில்லை. மரங்களை வெட்டக்கூடாதாமே? பரவாயில்லை. எங்களிடம் உள்ள ஆடுமாடுகளை ஏவிவிட்டால் போகிறது.

மும்மாரி பெய்த மழை தூரத்து சொந்தம் போல எப்போதாவது தலைக்காட்ட ஆரம்பித்தது. 60, 100 அடியில் இருந்த நீர்க்கால்கள் எல்லாம் வற்றிப்போயின. பூமியைத் துளைக்க ஆரம்பித்தோம். 250 அடியில் ஆரம்பித்தது 1300 அடி வரை கீழிறங்கியது. அந்த ஆழத்தில் இருக்கும் நீர்மட்டங்கள் கூட முகம் காட்ட மறுத்த போது தான் சூழ்நிலையின் தீவிர‌ம் புரிந்தது. இன்று, அருகிலிருக்கும் காவிரி ஆற்றிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. "ஒரு வருடம் தானே? காவிரித்தண்ணீர் வந்துவிடும் அப்புறம் சமுத்திரம் மாதிரி தண்ணீர் வந்துவிடும்" என்று திளைத்திருந்தோம். 

மண்வாசமே மறந்து போயிருந்த இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் வெந்துகொண்டிருந்ததொரு இரவில், விழ ஆரம்பித்தன துளிகள். . பேய்மழை என்று சொல்வார்களே, அந்த மாதிரி பெய்து தீர்த்தது. ஒரே மணி நேர மழையில் இரண்டு ஏரிகள் நிரம்பிவிட்டன. பத்து வருடத்தில் இது தான் பெரிய மழை என்றார்கள் பாட்டி. கிணற்றிலெல்லாம் தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஒரு வருடத்துக்குத் தண்ணீர் பிரச்சனையில்லை. காட்டுவேலைக்கு வந்தவரிடம் தாத்தா இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார் "அப்புக்குட்டி, காட்டோரத்துல இருக்குற அந்த 2 வேப்பஞ்ச்செடியையும் வெட்டிரு, ஈரம் காஞ்ச ஒடனே காட்ட ஓட்டிப் போட்டுரலாம்"

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...... 

May 10, 2010

புகைப்படம்...

1) அவரைக்குப் பூவழகு...


2) பையனை ரொம்ப போரடிச்சுட்டேன் போல! 


3) சுண்ணாம்பாறு - பாண்டிச்சேரி. 


4) சார்மினார்.

5) முஸ்தஃபா முஸ்தஃபா... 



6) வாழ வேண்டிய வயசு.


உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music! 

April 28, 2010

கிரிப்டோக்ராஃபி

கிரிப்டோக்ராஃபி என்றால் தெரியுமல்லவா? தகவல்களை மறைத்துப் பரிமாற்றிக்கொள்ளும் முறை பற்றியப் படிப்பு. மறைத்து என்றால் சங்கேதங்களாக இருக்கலாம். குறியீடுகளாக இருக்கலாம், விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது டான் ப்ரௌன் நாவல்களிலோ வருவது போல புதிர்களாகவும் இருக்கலாம். இன்றும் கிராமங்களில் ஜாடை பேசுவது என்று ஒரு வழக்கு உண்டு. வெளியாருக்குத் தெரியாத மாதிரி(சில சமயம் தெரியும் மாதிரியும்) வார்த்தைகளை அமைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் பேசுவார்கள். இவ‌ற்றையெல்லாம் கிரிப்டோக்ராஃபியில் சேர்ப்பார்க‌ளா என்று தெரிய‌வில்லை. ஆனால் கிரிப்டோக்ராஃபி என்று முறைப்ப‌டி வ‌கைப்ப‌டுத்தியுள்ள‌து நான்காயிரம் ஆண்டுக‌ளுக்கு முந்தைய மெசபடோமிய எழுத்துக்கள் சிலவற்றை. எனது அபிப்ராயப்படி முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு இடையூறாக‌ மூன்றாவது மனிதன் வந்த அந்த கணத்தில் கிரிப்டோக்ராஃபி பிறந்திருக்க வேண்டும். :)

இந்தச் சங்கேதங்கள், குறியீடுகள் பற்றிய படிப்புக்கு ஆங்கிலத்தில் கிரிப்டாலஜி/கிரிப்டோக்ராஃபி என்றும் தமிழில் மறையீட்டியல் என்றும் பெயர். கிரிப்டோ(ரகசியமாக) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது தான் கிரிப்டோக்ராஃபி. இந்த ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. 1. என்கிரிப்ஷன் 2. ட்ரான்ஸ்மிஷன் 3. டிகிரிப்ஷன்.

நீங்கள் மறைக்க வேண்டிய தகவலை (Plain Text) யாருக்கும் புரியாத எழுத்துக்களாக(Cypher Text) மாற்றுவது என்கிரிப்ஷன். என்கிரிப்ட் செய்ய உப்யோகப்படுத்தப்படும் வழிமுறையை "கீ" என்பார்கள். ட்ரான்ஸ்மிஷன் என்பது மாற்றப்பட்ட செய்தியை உங்கள் பார்ட்னருக்கு அனுப்புவது. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட முறை புறாக்காலில் கட்டி அனுப்புவது. நிறைய அவகாசமிருந்தால் தெரிந்தவர்களின் தலையை மொட்டையடித்து, அதில் சைஃபர்டெக்ஸ்ட்டை பச்சை குத்தி முடி வளர்ந்த பிறகு கூட அனுப்பலாம்.
டிக்ரிப்ஷன் என்பது சைஃபர்டெக்ஸ்ட்டை உடைத்து அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுவது. பொதுவாக என்கிரிப்ட் செய்ய மற்றும் உடைக்க ஒரே "கீ" யை உபயோகிப்பார்கள்.

ரொம்ப‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்கொள்ளாமல் சில என்கிரிப்ஷன் வகைகளைப் பார்ப்போம். மிக‌ எளிய முறை பதிலீடு (Substitution). அதாவ‌து ஒரு எழுத்துக்குப் ப‌தில் குறிப்பிட்ட‌ இன்னொரு எழுத்து.

உதார‌ண‌ம். Army is In. இந்தச் செய்தியை dupblvlq என்று மாற்றலாம். எப்படியென்றால் Aக்கு பதில் மூன்று எழுத்து தள்ளி இருக்கும் d ஐ எழுதிக் கொள்ள வேண்டும். R க்கு பதில் u. இந்த மாதிரி.... இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். செய்தியைப் பெறும் படைத்தளபதிக்கு இந்த முறை எத்தனை எழுத்துத் தள்ளியிருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.

இன்னொரு முறை:

உதாரணத்துக்கு உங்கள் காதலிக்கு Meet Me In Inox at three என்ற செய்தியை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கீழ்கண்டவாறு எழுதுங்கள். முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள். இரண்டாவது வரியில் அடுத்த ஐந்து.....



எழுதிய முறைக்கு மாறாக மேலிருந்து கீழாக படியுங்கள். Meoheixrenaetitemnt என்று வரும். அவ்வளவுதான். இதை உங்க்களுக்குத் தோதான ட்ரான்ஸ்மிஷன் முறையில் அனுப்புங்கள். பின் விளைவுகளுக்குக் கம்பெனி பொறுப்பல்ல.

பழங்காலத்தில் கிரிப்டோக்ராஃபி என்று பெரிதாக எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், சாதாரண எழுத்துருக்களே போதுமானதாக இருந்தன. கல்வியறிவு வளர வளர, தகவல்களைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் தேவைப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் கிரிப்டோக்ராஃபி. குறியீடுகள், கலைத்துப் போடப்பட்ட எழுத்துக்கள், ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்து என மாற்றம் காண ஆரம்பித்தது இந்தத் துறை. ஒவ்வொரு என்கிரிப்ஷன் முறையும் வெகு சீக்கிரத்தில் காலாவதியாக ஆரம்பித்தது. அதுவும் கணிப்பொறியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெர்முடேஷன் காம்பினேஷன் முறை, மற்றும் புள்ளிவிவர (ப்ளைன்டெக்ஸ்ட் எந்த மொழி என்று தெரிந்தால் அந்த மொழியில் அதிகமாக சேர்ந்து வரும் எழுத்துக்களை வைத்து டிகிரிப்ட் செய்ய ஆகும் நேரத்தைக் குறைப்பது. உதாரணத்துக்கு ஆங்கிலம் என்றால் the, -ent, -nd இப்படி) அடிப்படையிலெல்லாம் சைஃபர்டெக்ஸ்ட் உடைக்கப்பட்டது அதனால் மிகச் சிக்கலான என்கிரிப்ஷன் முறைகள் தேவைப்பட்டன. இப்பொழுதெல்லாம் Bits, Bytes, Hexa Decimal என்று ரொம்பவே ஃபிலிம் காட்டுகிறார்கள்.

கிரிப்டோக்ராஃபியின் முக்கிய நோக்கம் தகவல் பாதுகாப்பு! தகவல் திருடப்படாமல் இருக்க உங்கள் மின்னஞ்சலை என்கிரிப்ட் செய்து அனுபுதல் முதற்கொண்டு பாஸ்வேர்டு, ஏ.டி.எம் பின் நம்பர், டிஜிட்டல் கையெழுத்து, பெறப்படும் தகவல் நடுவில் எங்க்கேயும் மாற்றப்பட்டதா என்று சரிபார்த்தல், அனுப்பியது இன்ன ஆள் தான் என்று சரிபார்த்தல் என்று கிரிப்டோக்ராஃபியின் பயன்பாடுகள் எராளம்.

இன்று பிரபலமான கிரிப்டோக்ராஃபி முறைகளில் சில SHA1 & Md5 என்றான் நண்பன். Md5 முறையில் "Karki is getting married Soon" என்ற வாக்கியத்தை என்கிரிப்ட் செய்தேன்.

bda25b3704807770ebf1de41e2461c41 என்று வருகிறது!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More