February 22, 2010

ஸ்னேஏஏக் பாபு!

                                       
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய‌‌ பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!

கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.


ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.


எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷ‌க்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப‌ மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமான‌து என்பதே போதுமாயிருக்கிறது.



February 20, 2010

அண்ணா ஹாக்கி லீக்


இந்த வருடம் அண்ணா ஹாக்கி லீக் ( சுருக்கமாக AHL) பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை நடக்க இருக்கிற‌து. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பக்கம் ரசிகர்களின் ஆர்வத்தைக் கவ‌ரும்(நிலைமையைப் பார்த்தீர்களா?) ஒரு சிறு முயற்சி.



ஹாக்கியில் இந்தியா வல்லரசு என்பதெல்லாம் பழங்கதை. அணித் தேர்வில் விளையாடிய பணம்,வீரர்களின் அதிருப்தி, விளையாட்டை ஊக்குவிப்பதில் அரசு காட்டிய மெத்தனப்போக்கு எல்லாம் சேர்ந்து அணியைப் பலவீனமாக்கின‌. இதெல்லாம் விட முக்கியக் காரணம் நமது ஆர்வம். உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட உலகக் கோப்பை ஹாக்கிக்குத் தருவதில்லை. எல்லாம் சேர்ந்து ஹாக்கியை பழங்கதையாக‌ மாற்றிவிட்டன. இந்தியாவின் தேசிய‌ விளையாட்டு என்ற‌ அந்த‌ஸ்தை கிட்ட‌த்த‌ட்ட கிரிக்கெட் எடுத்துக்கொண்ட‌ இந்த நிலையில், ஹாக்கியைப் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தும் இந்த‌ முய‌ற்சி பாராட்டுக்குரிய‌து



இனி AHL! 2008 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய AHL போட்டிகளுக்கு இது மூன்றாம் ஆண்டு. முதல் வருடம் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் கொண்ட நான்கு அணிகளுடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இப்பொழுது எம்.ஐ.டி மற்றும் வேலம்மாள் கல்லூரி அணிகளும், இன்ஃபோசில் மற்றும் சி.டி.எஸ் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபெறுகின்றன.வரும் வருடங்களில் மேலும் பல அணிகள் பங்குபெறும் என நம்புவோம்.



பார்வையாள‌ர்க‌ளுக்கும் ப‌ரிசுகள் உண்டு. ஆட்ட‌த்தின் முத‌ல் பாதி முடிந்த‌தும் வெற்றி பெற‌ப்போகும் அணியைச் ச‌ரியாக‌க் க‌ணிப்ப‌வ‌ர்க‌ளுக்கு, பெனால்டி மூல‌ம் கோல் செய்யும் பார்வையாள‌ர்க‌ளுக்கு என பரிசுகள் காத்திருக்கின்றன.

எங்கே : அண்ணா பல்கலைக் கழக மைதானம்.
எப்போது : பிப்ரவரி 22 முதல்.



நான் போறேன்!.



டிஸ்கி : 2010 பிப்‍ 28 முதல் மார்ச் 13 வரை டெல்லியில் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க இருக்கின்றன. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பது வேறு விஷயம்!


February 10, 2010

அரட்டை - 10-2-2010

காலம் கடந்து கிடைக்கும் உதவி வீண் என எங்கோ படித்தது. அது நீதிக்கும் பொருந்தும். பத்து வருடம், பதினான்கு வருடம் என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு ருசிகா வழக்கு. 90களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை. குற்றம் சாட்டப்பட்டவர் ரத்தோர். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்த தண்டனை ஆறு மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம். இதை விட அந்தப்பெண்ணின் தகப்பனை வேறு விதமாக‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ முடியாது. இன்னும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரத்தோர் குற்றமற்றவர் என்று கூட நிரூபிக்கப்படலாம் யாருக்குத் தெரியும். அப்புறம், கசாப் என்ற‌ தியாகி ஒருவரைப் பராமரித்து வருகிறோமே. அந்த வழக்கு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. தமிழ்நாட்டில், சங்கரராமன் கொலை வழக்கு. எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தாகி விட்டது. அடுத்தது என்ன? வழக்கு தள்ளுபடி. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்பதில் பின்பாதி சரி தான். ஆனால் ஓராயிரம் குற்றவாளிகள் தப்பித்தால் என்ன ஆவது? தப்பித்துக்கொள்ளாலாம் என குற்றங்கள் பெருகாதா? தார்மீக அடிப்படையில் பார்த்தால் கூட பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டாமா? வயசாகிப்போன நீதித்துறை!!!!!!!!


{}

முதல்வர் கலைஞருக்கு ஐநூற்றுச் சொச்சமாவது தடவையாக‌ தமிழ்த்திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜித் மனம் திறந்து குமுறியிருக்கிறார். இந்த மாதிரி விழாக்களுக்கு வரச்சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக‌ப் புலம்பியிருக்கிறார். இது வேறா?

அவ‌ர் வாரி வழங்குவதும், இவர்கள் விழா எடுப்பதுமாக வருடம் முழுக்க ஒரே கோலாகலம் தான். ஏதோ நல்லா இருந்தா சரி. மற்ற துறையெல்லாம் செழிப்பாக இருக்கிறது தமிழ்நாட்டில். பாவம் சினிமாத்துறை மட்டும் நொடித்துப்போய்விட்டது. நடக்கட்டும் நடக்கட்டும்

{}

கோவா பார்த்தாகிவிட்ட‌து. ஒரு வெளிநாட்டுக்காரியைப் பார்த்து ம‌ண‌ம் முடிக்கும் ல‌ட்சியம் கொண்ட‌ மூன்று இளைஞ‌ர்க‌ளின் க‌தை. (சிங்காரவேலன் கவுண்டமணி நினைவுக்கு வந்தார் : இதுவல்லவோ லட்சியம்....). ப‌ட‌ம் ஒவ்வொருக் காட்சியும் இளமைத்துள்ளல்(அட, அது இல்லீங்க!). சம்பத்,அர்விந்த் காதல் அளப்பறை. தில்லு தான் ரெண்டு பேருக்கும். தனித்தனிக் காட்சிகளாகப் பார்க்கும்போது வசீகரிக்கும் படம் மொத்த‌மாகப் பார்க்கும்போது அவ்வளவாகக் கவரவில்லை. .


{}

வலையுலகின் காதல் மன்னன் கார்க்கி' காதல் வாரம் கொண்டாடுகிறார். 'கார்ப்பரேட் கம்பர் நர்சிம்' காதலுக்காக சிலப்பதிகாரம் வரைச் சென்று காதலியின் அழகைப் பாட ஐடியா தருகிறார். ஆதி அவர்கள் ஒரு படி மேலே போய் தங்கமணி ஸ்பெஷல் என பதிவு போடுகிறார். இப்படி ஆளாளுக்குக் காதலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நம் பங்குக்கு ஏதாவது செய்யாவிட்டால் எப்படி?

எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது.

துன்ப‌த்திலும் ஒரு இன்ப‌ம்.
என்ன‌வ‌ளின் திரும‌ண‌த்துக்கு வ‌ந்த
அவ‌ள் தோழிக‌ள்!
What a Figures What a Figures....

நீதி : திரிஷா கிடைக்க‌லைன்னா திவ்யா!

February 06, 2010

Visual Treat... மெரீனா.

புத்த‌ம்புது காலை...


க‌ட‌லின் அக்க‌றை போனோரே...




அந்த நீல‌ நதிக்கரையோரம்....


நம்ம மெரீனா தான்.

சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. ந‌ல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். ப‌ச்ச‌ புள்ள‌ சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (ந‌ல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போட‌ப்ப‌டும்.)

January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன்

ஸ்டில்ஸ், பாடல்கள், ட்ரெய்லர் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் சொல்லத் தெரியவில்லை. என்னைக் கேட்டால் "Maybe yes!". நாடுகடந்து போன சோழர் பரம்பரை, பாண்டியர்களின் வன்மம், தொல்பொருள் ஆராய்ச்சி எனத் தமிழ் சினிமா அதிகம் கண்டிராத கதைக்களம். பிரம்மிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பலாக.




800 வருடங்களுக்கு முன் நாடுகடந்து தலைமறைவாகும் சோழர்கள் வியட்னாம் அருகில் ஒரு தீவில் தஞ்சமடைகிறார்கள். போகும்போது பாண்டியர்களின் சிலை ஒன்றைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். பாண்டியர்கள் பின்தொடர்ந்து வராமலிருக்க ஏழு பொறிகளை(Traps) ஏற்படுத்திவிட்டுப் போகிறார்கள். 800 வருடங்கள் கழித்து, இன்றும் அந்த சோழ இளவரசன் தஞ்சமடைந்த இடம் தேடப்படுகிறது. அந்த இடத்தைத் தேடப்போகும் பிரதாப் போத்தன் காணாமற்போய்விடுகிறார். அவரையும், அந்த இடம் மற்றும் சிலையையும் தேடிக்கொண்டு ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் ஹெட் ரீமாசென் தலைமையில் குழு ஒன்று கிளம்புகிறது. குழுவில் பிரதாப் மகள் ஆன்ட்ரியா, ஹெல்ப்பராக கார்த்தி ஆகியோர் இடம்பெறுகிறார்கள். ஏழு தடைகளைத் தாண்டி அந்த இடத்தை அடையும் போது, பார்த்திபன் தலைமையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் சோழர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இடைவேளை!



சும்மா சொல்லக்கூடாது. முதல் பாதி ராக்கெட் வேகம். இதுவரை சொன்னதெல்லாம் முதல் பாதி தான். சில விஷூவல் மொக்கைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நன்றாகவேயிருக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.  சோழர்களைப் பார்த்தவுடன் ஒரு ட்விஸ்ட். அப்புறம் வேகம் குறைந்து விடுகிறது. ஆனாலும் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இடைவேளைக்குப் பின் எல்லோரும் தமிழில்(!) பேசுகிறார்கள்.
இரண்டாம் பாதி முழுக்க ஒரே கூச்சலாக இருக்கிறது. மக்கள் அல்லது போர். சண்டைக்காட்சிகளின் நேரத்தைக் குறைத்து கொஞ்சம் சத்தத்தையும் குறைத்திருந்தால் கூட போதும். இரண்டாம் பாதி வேகமெடுத்திருக்கும். முக்கியமாக அந்த கிளாடியேட்டர் ரக சண்டைக்காட்சி.



சோழர்களுக்கு (தமிழர்களுக்கு) இந்த மாதிரி அடுத்தவன் சாவை ரசிக்கும் வக்கிர மனப்பான்மை இருக்குமா என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அந்த சந்தேகம் தீர்ந்தது. இரண்டாம் பாதி முழுக்க எனக்கு ஈழத்தை நினைவூட்டுகிறது மக்களே!



ரீமாசென்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... யப்பா! படம் முழுக்க அவர் ஆதிக்கம் தான். தன் குழுவினர் மீது இருக்கும் கண்ட்ரோல், பார்த்திபனுடன் சமர் செய்யும் அந்த கம்பீரம்... எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் விரசம் தூக்கலாக இருக்கிறது. "செம கட்ட இல்ல ?" இது அவரே சொன்ன டயலாக்!



பார்த்திபன் : வறுமையின் வாடும் சோழர்களின் தலைவன். இறுதிக்காட்சிகளில் நெகிழவைத்துவிடுகிறார்.



கார்த்தி : ஹெல்ப்பர். ந‌க்க‌ல், வழிசல், தெனாவெட்டு என ஒரிஜின‌ல் செல்வ‌ராக‌வ‌ன் ப‌ட ஹீரோ.



ஆண்ட்ரியா ‍ ஆர்க்கியாலஜி பொண்ணு. வழியிலிருக்கும் பொறிகளைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். அதையும் பாவம் கலாய்த்துவிடுகிறார்கள். குல்ஃபி ஃபிகராக இருந்தவரை ஆயா மாதிரி உட்காரவைத்துவிடுகிறார்கள்.



செல்வாவைப் பாராட்டியே ஆக வேண்டும். வழக்கமான காதலன் காதலி, தாதாயிசம், யதார்த்தம் வகையறாக்களுக்கு மத்தியில் ஒரு ஃபான்டஸிக் கதையை முயற்சி செய்ததற்காக!



வசனங்கள் செம ஷார்ப். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏராள தாராளமாக "வார்த்தைகள்" விழுகின்றன.  "நெல்லாடிய" பாடலுக்கு யார் சார் நடனம் ? "ஆளான தாமரை" பாடலுக்கு போட்ட மாதிரி இருக்கிறது.



சிலபல சொதப்பல்கள் இருந்தாலும் நம்பிப் பார்க்கலாம். எப்படியும் ரீ‍எடிட் செய்துவிடுவார்கள்.



டிஸ்கி : படம் முடிந்து என் நண்பன் சொன்ன வசனம் "இதெல்லாம் வேலைக்கே ஆவாது மச்சி. நம்ம ஆளுங்களுக்கு ஸ்ட்டார்டிங்க்ல லவ் பண்ண ஆரம்பிச்சு, கிளைமாக்ஸ்ல ஒன்னு சேருற மாதிரி கதை கொடுத்தாத் தான் பார்ப்பாங்க" ரைட்டு!



December 28, 2009

சுப்பிரமணீஈஈஈஈஈஈஈ....

ருக்குப் போயிருந்த போது, புதிதாக வாங்கி வந்திருந்த நாய்க்குட்டிக்கு நாலைந்து செங்குளவிகளைப் பிடித்து அரைத்துப் பாலில் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பாட்டி. செங்குளவி பால்(!) குடித்தால் நாய் சத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் குரைக்கும் என்பது ஐதீகம். நாய்க்குட்டிகளின் மெனு பீஃப் பிரியாணி, கருவாடு, ரத்தம் என்று நீளும்.


ஊரில் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் சராசரியாக 200 மீட்டர் தூரம் இருக்கும். எல்லோருக்கும் அவரவர் வயலுக்குள் வீடு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நாய் குரைப்பது மூன்று வீடுகளுக்காவது கேட்க வேண்டும்! அதற்காகத் தான் இந்தக் கொலைவெறி மெனு. நாயின் குரைப்புச் சத்தத்தை வைத்து கூட அதன் ஓனர் புகழப்படுவதால் நாய்க்கு தனி கவனிப்பு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டாலும் நாய்க்கு விருந்து தான்.

வீட்டுக் காவலுக்கு இரண்டு, பட்டிக் காவலுக்கு ஒன்று என எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. வயல்வெளி பக்கத்திலிருப்பதால் பாம்புகளெல்லாம் சர்வசாதாரணமாக வாசல் வரை வந்து போகும். அவற்றிலிருந்தெல்லாம் காப்பாற்றுவது நாய்கள் தான். வாசல் ஏறவிடாமல் குரைத்துக்கொண்டே நிறுத்திவைக்கும். பகலில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாய்கள் இரவில் அவிழ்த்துப்படுகின்றன. அதனாலேயே இரவில் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கூட வருவதில்லை.

பொதுவாகவே ஊரில் நாய்களுக்கு மணி என்று தான் பெயர் வைப்பார்கள். சில நாய்களுக்கு அதுவும் இல்லை. கூப்பிடுவதென்றால் "கூச் கூச்" என்று கத்த வேண்டியது தான். இப்போது தான் ஜானி, டாமி என்கிற அளவுக்கு வந்திருக்கிறது. மூன்றாம் பிறை படம் பார்த்த என் தாத்தா "சுப்பிரமணி" என்று நாய்க்கு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். பக்கத்துக் காட்டுக்காரர் பெயரும் அதே தான் என்பதால் அந்த பெயர் கைவிடப்பட்டது.


பாம்புக்குக் கூட பயப்படாத அஞ்சா நெஞ்சன் நாய்கள், சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படும். எங்கள் மணிக்கு பட்டாசுச் சத்தமென்றால் அப்படியொரு பயம். வைக்கோல் போருக்குள் புகுந்துகொண்டு கப்சிப்! இரண்டு நாய்கள் எனிமீஸ் ஆக இருந்தால் கூட பிரச்சனையில்லை. ஒன்று சேர்ந்துவிட்டால் விளையாடுகிறோம் பேர்வழி என வெள்ளாமைக் காட்டையெல்லாம் துவம்சம் செய்துவிடும்.

டிஸ்கி : ஊரில் அனைவரும் லேடீஸ் நாய் வளர்ப்பதைத் தவிர்ப்பதால், ஜென்ட்ஸ் நாய்க்கெல்லாம் சங்கடம் தான். எப்போதாவது வழி தவறி ஊருக்குள் வரும் லேடீஸ் பப்பிக்கள் நிலைமை தான் பாவம்!

December 20, 2009

அரட்டை - 21-12-2009

”நான் அவன் இல்லை...” இது ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப்பின் இப்போதைய பல்டி. தான் இந்திப் படங்களில் நடிக்க வந்ததாகவும், படம் பார்க்க சுற்றிக் கொண்டிருந்தவனைத் தவறுதலாகக் கைது செய்துவிட்டதாகவும், AK 47 ஐப் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறான். மேலும், கொஞ்ச காலத்துக்கு முன் குற்றத்தை ஒத்துக்கொண்டது போலீசுக்கு பயந்ததனால் தானாம். ரயில் நிலைய வீடியோவில் தெரிவது, தன்னை மாதிரியே இருக்கும் தீவிரவாதியாம். எதிர்பார்த்தது தான். அவனுக்கென ஒரு வழக்கறிஞர், பாதுகாப்பு, விரும்பியவாறு அசைவு உணவு என ராஜமரியாதையுடன் நடத்தினால் இதுவும் சொல்வான், இன்னும் சொல்வான். செல்லரித்துப் போன அரசியலமைப்பு! அய்யா மன்மோகன் சிங் அவர்களே, கொஞ்ச நாளில் அவனைப் பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுங்கள். இன்னும் கொஞ்ச பேரைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் வரட்டும். நாம் இப்படியே கருணை, ஜீவகாருண்யம், காந்தீயம் என்று பேசிக்கொண்டிருப்போம். வெகு விரைவில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்தியாவைப் பிரித்து எடுத்துக்கொண்டு போகட்டும். ஜெய்ஹிந்த்!


{}


விதர்பா, கூர்க், பூர்வாஞ்சல், கூர்க்காலாந்து, காரைக்கால்,சௌராஷ்டிரா.... தனித் தெலுங்கானா அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கும் கோஷங்கள் தான் இவை. மகாராஷ்ட்டிராவிலிருந்து விதர்பா, கர்னாடகத்திலிருந்து கூர்க், உத்திரப்பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, புதுச்சேரியிலிருந்து காரைக்கால், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா ஆகியவற்றைப் பிரித்து தனித்தனி மாநிலங்களாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தை வேறு மூன்றாகப் பிரிக்கப்போகிறார்களாம். இந்நிலையில் தமிழகத்திலும் பிரிவினைக் கோரிக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கின்றன. வெகு காலத்திற்கு முன்பு ஒலித்து அடங்கியது தான் இந்தக் குரல். இப்போது மீண்டும் எழ ஆரம்பிக்கிறது. குரல் கொடுத்திருப்பது பா.ம.க, மூவேந்தர் முன்னணிக் கழகம்(புவனேஸ்வரி புகழ்), வன்னியர் சங்கம் ஆகியவை. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக‌ மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாநிலத்தை அமைக்கக் கோருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டால் தன் மாநிலம் கோரப்படும் என கொங்குநாடு முன்னேற்றப் பேரவையும் எச்சரித்திருந்தது (!). சபாஷ்! மொழி ரீதியான பிரிவினைகள் போய் இப்போது ஜாதி ரீதியாகவும் தனி நபர் செல்வாக்குக்காகவும் பிரிவினை பேசும் அளவுக்கு வந்தாயிற்று.


நானும் எங்கள் சொந்தக்காரர்கள் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு ஏரியாவைத் தனி யூனியன் பிரதேசமாகக் கேட்கலாமென இருக்கிறேன். காசா பணமா? சும்மா கேட்போமே!


{}


கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது வருத்தத்தைத் தருகிறது :(


{}


நம்மில் பலர் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருப்போம். முன்பு வெளிப்படையாகவும், தற்போது மிகுந்த பாதுகாப்புக்கிடையிலும் நடத்தப்படும் கலைச் சேவை. இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறது. மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க முடியாதவர்கள் இதைப் பார்க்கலாம். ஆடுபவனின் மனைவியும், ஆடுபவளின் கணவனும் சொந்தங்களும் சுற்றி உட்கார்ந்துகொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்துவது தான் இதில் சிறப்பு. யாராவது கோபப்பட்டு போர்க்கொடி உயர்த்திவிடாதீர்கள். நிறுத்திவிடப் போகிறார்கள்.


{}


இளைய தளபதியைப் நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஒரு நாளைக்குப் பத்துக்கும் குறையாமல் அவரைக் கலாய்த்து மின்னஞ்சல்களும் குறுந்தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. சலிப்பாக இருக்கிறது. சர்தாருக்குப் பதில் விஜய் எனும் தனி மனிதன். கொஞ்சம் ஓவர் டோஸாக இல்லை?


{}


ஒரு மாதத்துக்கு முன் ஊட்டி போன போது எடுத்த படம். லைட்டா Dreamy Effect சேர்த்திருக்கிறேன்.  Hope you like it! 



ஒரே வருத்தம்.. கடைசி வரை இந்த இளவரசியுடன் பேசவேயில்லை.

December 06, 2009

உலக அழகியைக் காப்பாற்றுவோம்!

கோபன்ஹேகன் - டென்மார்க்கின் தலைநகர். உலக ஊடகங்களின் ஒருமித்தப் பார்வை இப்போது இந்த நகரத்தின் மீது தான். டிசம்பர் 8 முதல் 18 வரையிலான உலக சுற்றுச்சூழல் மாநாடு இங்கு தான் நடைபெறுகிறது. 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்து விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் பின்வரும் விசயங்கள் விவாதிக்கப்படும்.


1) கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் (குறிப்பாக வளர்ந்த நாடுகளில்) கட்டுக்குள் வைப்பது, 
2) தட்பவெப்ப நிலை மாறுபாட்டைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான நிதியுதவி,
3) காடுகளின் அழிவைத் தடுக்க கார்பன் ட்ரேடிங் முறை.


இதற்கு முன்னர் 1997 டிசம்பரில் ஜப்பானில் க்யோட்டோ ஒப்பந்தம் என்று ஒன்றைப் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளின் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வகை செய்கிறது. ஆனால் முன்னாள் நாட்டாமை அமெரிக்கா மட்டும் நைசாக கழண்டு கொண்டது. இந்நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும கலந்துகொள்வது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 


2012 படம் பார்த்திருப்பீர்கள். சூரியனிலிருந்து வரும் அதிக நியூட்ரினோக்களால் பூமியின் மையப்பகுதி வெப்பமடைந்து எரிமலையும் பிரளயமுமாக உலகம் அழிவதைக் காட்டியிருப்பார்கள். நமக்கு சூரியனெல்லாம் தேவையில்லை. நாமே பூமியைச் சூடாக்கிக் கொண்டுள்ளோம். அழிவு அது மாதிரி ஒரேயடியாக இல்லாவிட்டாலும், கடல் மட்ட உயர்வு, கடலோர நகரங்கள் மூழ்குவது என்று ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருக்கும். 


அதெல்லாம் வேண்டாமென்று தான் ஊர் கூடி தேரை இழுக்க முயற்சிக்கிறார்கள். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து நாடுகளும் (நாமும் தான்) செயல்படுத்த முன்வரவேண்டும். பின்னே நம் ”உலக” அழகியைக் காப்பாற்ற வேண்டாமா? 

November 09, 2009

புராதான அதிசயங்கள் : Seven Ancient Wonders.



இப்போதைய உலக அதிசயங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். பழங்கால அதிசயங்கள்? 
பழங்கால அதிசயங்கள் எங்கிருந்தன, எப்படி அழிந்தன என்று ஒரு லுக் விடுவோம். 


இப்போது போலவே அப்போதும் ஏழு தான் (அல்லது அப்போது போலவே இப்போதும்?). 



கிசா பிரமிடு : 

மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் எகிப்து நாட்டில், கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளாக, பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கும் பேரதிசயம். புராதான, இடைக்கால, நவீன என்று எத்தனை பட்டியல்கள் தயாரித்தாலும் பிரமிடுகளுக்குக் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். துல்லியமான அதே சமயம் நுணுக்கமான கட்டட அமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கிறது. இதனைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லும் இரண்டு டன் எடை கொண்டதாம். வழக்கமான‌ பிரமிடுகளைப் போல் அல்லாமல் இதன் உச்சியில் சிறிய சமதளம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கேப்ஸ்டோன் எனப்படும் ஒரு பிரமிட் துண்டு. இந்த கேப்ஸ்டோனும் ஒரு பிரமிடு தான். இந்த துண்டு இல்லாமல் ஒரு பிரமிடு முழுமையடைவதில்லை. சில பிரமிடுகளுக்கு இந்த கேப்ஸ்டோன் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கிசா பிரமிடில் கேப்ஸ்டோன் என்ற பகுதி இல்லை. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். 
(1) தங்கமாக இருந்து யாராவது அபேஸ் செய்திருக்கக் கூடும் (கிசா பிரமிடின் கேப்ஸ்டோனின் உயரம் எட்டு மீட்டராக இருந்திருக்கும்!!!) 
(2) பிரமிடு முழுமைப்படுத்தப்படாமலேயே இருந்திருக்கக் கூடும்.


அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம் : 



மறுபடியும் எகிப்து. அலெக்சாண்ட்ரியா மத்தியத்தரைக் கடலின் ஒரு துறைமுக நகரம். இதன் தாழ்வான நீர்ப்பரப்பு அடிக்கடி கப்பல் விபத்துக்களை ஏற்படுத்தியது. அதனைத் தவிர்க்க கி.மு 299ல் ஃபாரோஸ் தீவில் கட்டப்பட்டது. பகலில் சூரிய ஒளியையும், இரவில் தீ வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாபெரும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டது. கி.பி ஆயிரத்து முன்னூறுகளில் அடுத்தடுத்த நில நடுக்கங்களால் சிதிலமடைந்த இந்த கலங்கரைவிளக்கம், இருந்த வரை மூன்றாவது உயரமான கட்டிடமாக இருந்தது(135 மீ). கட்டப்பட்ட கலங்க்கரை விளக்கங்களிலேயே உயரமானதும் கூட. 

பாபிலோன் தொங்கும் தோட்டம் 



கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது இந்தத் தோட்டம் நோயாளி மனைவியின் சுகவாசத்திற்காகக் கட்டப்பட்டதாம் இந்தத் தோட்டம். நீரூற்று எல்லாம் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனாலும், இப்படியொரு இடமே இல்லை, இது கவிதைகளில் புனையப்பட்ட இடம் என்றும் சிலர் சொல்வார்கள். இந்த இடத்தைப் பற்றி பலமான ஆதாரங்கள் ஏதும் இல்லாததே காரணம்.

சீயஸ் சிலை ஒலிம்பியா:



கிரீஸ் நாட்டில் கி.மு 466  456ல் கட்டப்பட்ட இந்த சிலை 13 மீ உயரம் கொண்டது தந்தம் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது இந்த சிலை. ஹோமரின் இலியட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்ததாக இதன் சிற்பி சொன்னாராம். கண்ணால் காண்பதே பெரும் புண்ணியமாகக் கருதப்பட்ட இந்த சிலை கி.பி நான்காம் நூற்றாண்டில் தீக்கிரையாக்கப்பட்டது.


ஆர்ட்டிமிஸ் கோவில்



ஆர்ட்டிமிஸ் ஒரு கிரேக்கப் பெண் தெய்வம்.  இயற்கைக்கான தெய்வம். இந்த தெய்வத்திற்காக துருக்கியில் கட்டப்பட்டது தான் இந்த கோவில். கி.மு 550 ல் முடிந்த இந்த கோவில் கி.மு 356 லியே அழிக்கப்பட்டது. 115 மீ நீளம், 55 மீ அகலம் 18 மீ உயரம் கொண்டிருந்த இந்தக் கோவில் அந்நாளைய கிரேக்கக் கட்டடங்களில் மிகப்பெரியதாகும். 


மாசோலஸ் கல்லறை





கி.மு 353 ல் அப்போதைய துருக்கியில் பெர்சிய பேரரசன் மாசோலசுக்காகக் கட்டப்பட்ட மாபெரும் கல்லறை. 105 மீ நீளம், 242 மீ அகலம், 43 மீ உயரம் கொண்டிருந்தது.  கி.பி 14 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் அழிந்து போனது. (Mausoleum - Great Tomb)


கொலோசஸ் சிலை

கிரேக்க சூரியக் கடவுள் ஹீலியஸுக்காக கி.மு 305 இல் ரோட்ஸ் தீவில் கட்டப்பட்டது இந்த சிலை. 33 மீ உயரம் கொண்டது. கிமு 226 லேயே நிலநடுக்கத்தால் அழிந்து போனது. மிகக் குறைந்த நாட்கள் இருந்த அதிசயம் இதுதான். 


{}


இந்த இல்லாத அதிசயங்களை வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார் மேத்யூ ரெய்லி. தலைப்பு -  “Seven Ancient Wonders”. 


ஒரு Treasure Hunt கதை. பிரமிட் கேப்ஸ்டோன் ஏழாகப் பிரிக்கப்பட்டு ஆறு அதிசயங்களிலும், அந்த கேப்ஸ்டோனின் கேப்ஸ்டோன் (ஸ்ஸ்ஸபா) அலெக்ஸாண்டர் கல்லறையிலும் மறைத்து வைக்கப்பட்டதாம். நிற்க, நான்காயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு சூரிய நிகழ்வின் போது இந்த கேப்ஸ்டோன் துண்டுகளை பிரமிட் மீது பொருத்தி பூஜை (?) செய்தால் பேரழிவு தடுக்கப்படும். அதே சமயம் அப்படி செய்யும் நாடு ஆய்ரம் வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும். இந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, தீவிரவாதிகள் என இரு குழுக்கள் ஈடுபடுகின்றன. மூன்றாவதாக நம்ம ஹீரோ ஜாக் வெஸ்ட் (ஆஸி) தலைமையில் ஏழு சிறு நாடுகளும் தேடுகின்றன. எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை. 


படித்துப்பாருங்கள!!! 

November 04, 2009

ஊட்டி மலை ப்யூட்டி.

சோம்பலான ஒரு வியாழக்கிழமை மதியம். கேஃப்டீரியாவில் உட்கார்ந்து கொண்டு அலுவலக அப்சரஸ்களை சுவாரஸ்யமின்றி பார்த்துக் கொண்டிருக்கையில் ரகு கேட்டான் "மச்சி, ஊட்டி ட்ரிப் போலாமா?" 
"ஊட்டி போர்டா, எத்தனை வாட்டி பார்க்கிறது?" தலையைத் திருப்பாமல் பதில் சொன்னான் சரவணன். 
"இல்ல மச்சி, நார்மலா பார்க்கிற இடம் வேண்டாம், காட்டுக்குள்ள போலாம், ட்ரெக் மாதிரி...  முக்குர்த்தி பார்க், வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், போர்த்திமண்ட் அணை... இப்படி வித்தியாசமா இருக்கும்."


இப்படித் தான் தொடங்கியது எங்கள் சரித்திரப் புகழ் பெற்ற பயணம். பத்து பேர் போவது என்று முடிவாகி, டிக்கெட், தங்குமிடம் ஆகியவை ரிசர்வ் செய்யப்பட்டன. 


மங்களகரமான ஒரு சனிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்தை அடைந்தோம். அங்கிருந்து ஊட்டிக்கு அந்த பொம்மை ரயிலில் போவது என ஏற்பாடு. உட‌ன் பயணம் செய்த‌வ‌ர்க‌ள் பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ர்கள். ரயிலில் ஏறி உட்கார்ந்த‌வுட‌ன் ஆர‌ம்பித்த‌து எங்க‌ள் க‌ச்சேரி.  பாடுகிறோம் என்ற‌ பெய‌ரில் ஹை டெசிபலில் கத்தி அவ‌ர்க‌ளை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம். ஊட்டியில் இறங்கிய அவர்கள் ஒரு வித விரோதப் பார்வையுடனே விலகிச் சென்றார்கள்.

ஊட்டியில் ந‌வ‌ம்ப‌ர் மாத‌க் குளிர், வாவ்..... மறுநாள் தான் காட்டுக்குள் போவதற்கு அனுமதி வாங்கியிருந்தோம் என்பதாலும், சனிக்கிழமை வேறு எங்கும் போக நேரம் இல்லாததாலும் பைக்காரா, நைன்த் மைல், பைன் காடுகள் ஆகியவை பார்ப்பது என முடிவானது. "நாட்டாமை ப‌ட‌த்தில், கொட்ட‌ பாக்கு பாட‌லில் குஷ்பூ ஓடி வ‌ரும் புண்ணிய‌ஸ்த‌லம் இது" என்று நைன்த் மைலை அறிமுக‌ப் ப‌டுத்தினார் ட்ரைவ‌ர் (வாழ்க!). இது ரோஜா கிளைமாக்சில் அர்விந்த்சாமி வரும் இடம், இது ஷாருக் ஒரு படத்தில் கோல்ஃப் விளையாடும் இடம், இது சூப்பர்ஸ்டார் வாலிபால் ஆடிய இடம் என வழியெங்கும் சினிமா புராணம். 





அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் காட்டுக்கு. ஜீப் ஒன்று ரெடியாக இருந்தது. கூட வந்த கைடு ஊட்டி பற்றியும், தோடர்களைப் பற்றியும் நிறைய சொன்னார். வழியில் தோடர் இனத்தைச் சார்ந்த ஒருவரைச் சந்தித்தோம். எங்கோ அவசரமாய் சென்று கொண்டிருந்தவரை கொஞ்சம் போர் பண்ணிவிட்டு மேலே தொடர்ந்தோம். இன்னும் கொஞ்சம் காட்டுக்குள் போனதும் சிம்பன்ஸி குரங்குகள் தென்பட்டன. உள்ளே செல்லச் செல்ல அருமையான வியூ. உங்களிடம் கொஞ்சம் நல்ல கேமராவும், நிறைய கிரியேட்டிவியும் இருந்தால் சரியான தீனி.

ஜீப் சுமார் இருபது கி.மீக்களை விழுங்கியிருந்தது. முதலில் சென்றது பார்சன்ஸ் பள்ளத்தாக்கு அணை. இது முக்குர்த்தி பீக்குக்கு அருகில் உள்ளது. ஆளரவம் ஏதுமின்றி தண்ணீரின் சலசலப்பும், பறவைகளின் சத்தமும் கொஞ்சம் குளிருமாக ரம்மியமாக இருந்தது அணை. உண்மையில் ரோஜா கிளைமாக்ஸ் இங்கு தான் எடுக்கப்பட்டது என்றார் ட்ரைவர்!
"அப்ப நேத்து சொன்னது?"
"அப்படித்தான் சொல்வோம் டூரிஸ்ட் கிட்ட" - வாரினார்.
அணையில் நடந்து அக்கரைக்குச் சென்ற‌போது ஜீப் சுற்றிக்கொண்டு வந்திருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் பயணித்ததில் முக்குர்த்தி தேசிய பூங்கா செக்போஸ்ட்டுக்கு அருகில் வந்திருந்தோம். நேராக செக்போஸ்ட் போகாமல் போர்த்திமந்த் அணைக்கு விடப்பட்டது வண்டி. மந்து என்பது தோடர்களின் வாழ்விடம். காலனி மாதிரி. போர்த்திமந்து என்பது ஒரு காலனியின் பெயர்.

அங்கிருந்து செக்போஸ்ட் வரை ஜீப்பில் பயணம். அதன்பின் நடராஜா சர்வீஸ் தான். ட்ரெக் என்றவுடன், கரடுமுரடான காட்டுப் பாதை என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். ஓரளவுக்கு நல்ல பாதை தான். காட்டுக்குள் ஒரு எட்டு கி.மீ நடக்க வேண்டும் அவ்வளவுதான். பாதி தூர‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌வுடன் முன்ன‌ர் பார்த்த போர்த்தி அணையை மேலிருந்து பார்க்க‌ முடிந்த‌து. 





அருமையான வ்யூ. அங்கிருந்த ஒரு பூவைக்காட்டி "குறிஞ்சிப் பூ" என்றார் கைடு. பார்க்க அப்படித்தான் தெரிந்தாலும் நம்பத் தயக்கமாக இருந்தது. (அர்விந்த்சாமி மேட்டர்?)


இன்னும் கொஞ்ச தூரம் மலையேறினால் புல்வெளிப் பிரதேசம் ஆரம்பிக்கிறது. வின்டோஸ் வால்பேப்பரில் இருக்குமே ஒரு மலை? இரண்டு கி.மீ தூரத்துக்கு அதே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? 





காட்டுத்தீயைத் தடுக்க தீக்கோடுகள் என்று ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மலை மேல் பாதை போட்டது மாதிரி வெட்டியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் இருந்து தீ வந்தாலும் அந்தப் பிளவுடன் நின்றுவிடும். 

வழியில் வரையாடுகள், மான்கள் தென்பட்டன. கேமராவைக் கையில் எடுக்கும் முன் விர்ர்ர்ர்ர்ர்ர்.....குவியல் குவியலாக யானை சாணங்கள் இருந்தன. யானைப் பாதம், புலி தோண்டிய பள்ளம் என்று என்னென்னவோ காட்டினார். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

மேலும் கொஞ்சம் நடந்து வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட்டை அடைந்தோம். 

இது கொஞ்சம் வில்லங்கமான இடம். தமிழகத்தின் தண்ணீரை சேகரித்து கேரளாவுக்குள் போக விடாமல் தமிழகத்துக்குள்ளேயே திருப்பிவிடுகிறார்களாம். (தெரிஞ்சவங்க கன்ஃபார்ம் பண்ணுங்க ப்ளீஸ்). கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது இளைப்பாறி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். மீண்டும் ஒரு எட்டு கி.மீ.


செக்போஸ்ட் அருகில் வரும்போது வன இலாக்கா அலுவலர்கள் இரண்டு பேர் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். "சீக்கிரம் போய்டுங்க, ஒத்த யானை சுத்திகிட்டிருக்கு" (அடப்பாவிங்களா!). அங்கிருந்து கிளம்பிய வண்டி நேரே மேட்டுப்பாளையத்தில் தான் வந்து நின்றது. :)


ஒரே ஒரு நாள் தான் என்றாலும் முழுக்க முழுக்க இயற்கையோடு உலவியது நல்ல அனுபவமாக இருந்தது.


வித்தியாசமான அனுபவம் வேண்டுபவர்கள், நடக்க விரும்புவர்கள், ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் இந்தக் காடு. Have Fun! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More