September 21, 2009

உன்னைப் போல் ஒருவன்...



ஏற்கெனவே "வெட்னெஸ்டே" படத்தைத் திணறத் திணறப் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். எப்படி? சூயிங்கம் மெல்லும் போலீஸ் ஆஃபீசர், மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்... ரீமேக். என்ன ஒன்று, தமிழில் கொஞ்சம் அரசியல் சாயம் பூசியிருக்கிறார்கள்.


படத்தின் ஒன்லைன் சொன்னால் கூட படம் பார்க்கும் அந்த சுவாரஸ்யம் கெடக்கூடும் என்பதால், "நோ கதை".


சேட்டன் மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, இப்படி நிறைய "போது"களில் ரசிக்கவைக்கிறார். லட்சுமி - தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். நிறைய ஆங்கிலம் பேசுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி1 ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்.... கமலைப் பற்றி? நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? கமல் இதில் தனியாகத் தெரிவதற்கு எந்த வேலையும் செய்யவில்லை. இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.


இனி கிளைமாக்ஸ்! ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா பேசும் வசனத்தை விட ஒரு கிராமாவது அழுத்தம் குறைவாக இருந்த மாதிரி தோன்றியது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஹிந்தியில் இந்தப் பாத்திரத்தின் வயது. அதில் சுமார் அறுபது வயது சொல்லலாம். இதில் மிகக்குறைவு. தவிர கமலை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கமுடிகிறது. இரண்டாவது, நஸ்ருதீன் ஷா இந்தக் காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது பயம். உயிரோடு இருக்கவேண்டுமே என்ற சாமானியனின் பயம். தமிழில் அப்படியில்லை. அதனாலும் கமல் ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார். தவிர, ரேஷன் கடைகளில் புளுத்த அரிசி வாங்கும் சாமானியன் தோரணை கமலுக்கு இல்லை. அவர் பேசும் ஆங்கிலம் காரணமா எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்தியன் தாத்தாவோ அல்லது அவ்வை சண்முகியோ(உன்னைப் போல் ஒருத்தி?) இந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். Just Kidding... :)


ச்சும்மா!

படத்தை ஏ மற்றும் பி செண்டர்களை மட்டும் குறி வைத்து எடுத்திருப்பார்கள் போல. படம் நெடுக தமிழில் வசனங்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் வேகமாக போய் விடுகிறது. அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.


தீவிரவாதம் பற்றி கமல் அடிக்கும் லெக்சர்களுக்கெல்லாம் கைத்தட்டல் அள்ளுகிறது.


வசனங்கள் ஷார்ப். இசை ஒளிப்பதிவெல்லாம் உறுத்தாத அளவு. எடிட்டிங் கச்சிதம்.


உன்னைப்போல் ஒருவன் - கமல் கிரீடத்தில் இன்னொரு வைரம்.


பின்குறிப்பு : படத்தில் பாடல்களைத் திணிக்காமல், தனி ஆல்பமாக விட்டு படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்திருப்பது நல்ல முயற்சி. இனிமேல் இதுமாதிரி படங்களை எதிர்பார்க்கலாமா?

September 08, 2009

Global Warming : என்ன செய்யலாம்?


2012 என்று ஒரு படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீர்கள். 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் 2012ல் நிச்சயமாக உலகம் அழிந்துவிடும் என்று மிரட்டியிருப்பார்கள். நெருப்பு மழை பொழிவதாகவும், கடல் ஊருக்குள் நுழைவதாகவும் காட்டியிருப்பார்கள். இது 2012ல் நடக்கிறதோ இல்லையோ, சீக்கிரமாகவே நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. காரணம் Global Warming என்று சொல்லப்படுகிற உலக வெப்பமாதல் பிரச்சனை. வாகனங்கள், குளிர் சாதனப்பெட்டிகள் இவற்றிலிருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகள் வளிமண்டலத்தை மாசடையச் செய்வதுடன் அவற்றை வெப்பமாக்குகிறது என்பதெல்லாம் நமக்கு பால பாடம். அதனால், இந்தப் பிரச்சனைக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

1) காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்.

இதன் மூலம் காகிதத் தயாரிப்பில் மூலப் பொருளான மரங்களைக் காக்க முடியும். தவிர காகித உற்பத்தியின் போது தேவைப்படுகிற எரிபொருளைச் சேமிக்க முடியும்.

2) வாகனப் பயன்பாடு.

* கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களா? நண்பர்களாக்ச் சேர்ந்து (CarPooling) வருவதன் மூலம் எரிபொருள்பயன்பாட்டைக் குறைக்கலாம்.

* 20 வினாடிகளுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஆஃப் செய்யலாம்.

3) குப்பைகள்

பேக் செய்வதற்கு குறைவான காகிதங்கள் அல்லது பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட பொருட்கள் வாங்குவதால் குப்பைகளை ஓரளவு குறைக்க முடியும்

4) ஷாப்பிங்

* ஷாப்பிங் லோக்கலாக வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். வண்டியை எடுக்கவேண்டாமல்லவா?
* பொருட்களை வாங்கிவிட்டு கேரிபேக் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். துணிப்பையை உபயோகிக்கலாம்.

5) மின்சாரம் சேமிப்பு

* சார்ஜர் போன்ற சாதனங்களை ஆஃப் செய்யாமல் விடாதீர்கள். நாம் அடிக்கடி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் மொபலை சார்ஜர் ஆஃப் செய்யாமல் அப்படியே எடுப்போம். அது வேண்டாம்.

* கணினித்திரையை தேவையில்லாத போது (ப்ரேக், மீட்டிங்... ) ஆஃப் செயவது.

6) மரம்

முடிந்தால் மரம் நடுங்கள். :)

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இது நடக்க வேண்டுமா?

A race begins in a single step! இது நாம் அனைவரும் ஒன்றாக ஓடியாக வேண்டிய ரேஸ். முதலடியை எடுத்துவைப்போம் வாருங்கள்!

September 06, 2009

உள்ளம் கேட்குமே...

நண்பர்கள் யாருமில்லாமல் வீக் எண்ட் கழிவது இதுதான் முதல்முறை. சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் ஊருக்குப் போயிருந்தார்கள்! போரடித்த சனிக்கிழமை மதியம் படம் ஏதாவது பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்க்கில் தேடியபோது "உள்ளம் கேட்குமே" கண்ணில் பட்டது. படத்தை போட்டுவிட்டு, பீட்ஸா ஹட்டை அழைத்து ஒரு சிக்கன் சுப்ரீமுடன் ஒரு பெப்சியும் ஆர்டர் செய்வதற்குள் லைலா பேச ஆரம்பித்திருந்தார். "அமெரிக்கா! உலகத்துல எல்லாருக்கும் இங்க வரணும்னு ஆசை இருக்கும். ஆனா நான் தவிர்க்க முடியாம தான் வந்தேன்." எனும்போதே படம் ஆரம்பித்துவிடுகிறது.

உடன் படித்த நண்பன் ஒருவன் திருமணத்திற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அதன்பின் ஃப்ளாஷ்பேக்கும் நடப்புமாக படம் தெளிந்த நீரோடையைப் போல பயணிக்கிறது. துள்ளித்திரியும் கல்லூரி வாழ்க்கையில் கேட்பதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை என்ற சிம்பிள் லாஜிக் தான் கதை. இரண்டு நாயகர்கள், மூன்று நாயகிகள். அவர்கள் யாருடைய காதலும் நிறைவேறாமல் போகிறது. இதை சோக வயலினெல்லாம் வாசிக்காமல் அழகாகச் கொல்லியிருப்பார் ஜீவா. வழக்கமான கதைகளில் சில பல சபதங்கள் நிறைவேறியிருக்கும். இங்கு ஜஸ்ட் லைக் தட் பிரிகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. ஷாம், ஆர்யா, லைலா, பூஜா, அசின் என படம் முழுக்க இளமைப்பட்டாளம். இதில் ஷாம், லைலா தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். லைலாவைப் ப‌ற்றிச் சொல்லியே ஆக‌ வேண்டும். சும்மாவே லூசு போல‌ இருப்பார். இந்த‌ப் பாத்திர‌த்தில் ந‌டிக்க சொல்லித்த‌ர‌வா வேண்டும்? அசத்தியிருப்பார். ஷாமிடம் காதலைச் சொல்லப்போகும் இடத்தில் அழுகையும் சிரிப்புமாக அதகளம் பண்ணியிருப்பார். அந்நியன் விக்ரம் போல. மற்றவர்களும் குறை சொல்லாத அளவுக்கு நடித்திருப்பார்கள்.


நட்பு, காதல், காமெடி, ஏமாற்றம், வலி எல்லாம் கலந்த ஒரு Stylish Movie இந்த படம். படத்தில் பாதிக்கும் மேல் சில ஆங்கில மற்றும் இந்திப் படங்களின் ( American Pie, Kuch Kuch Hota Hai) பாதிப்பு இருக்கும். ஆனாலும் சுஜாதாவின் எளிமையான வசனங்களோ, ஹாரீஸின் இனிமையான இசையோ, அழகான காட்சியமைப்புகளோ அல்லது கதை சொல்லப்பட்ட விதமோ... ஏதோ ஒன்று ரொம்பக் கவர்ந்துவிட்டது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஹாரீஸ். சொந்தச் சரக்கு என்று நம்புகிறேன். பாட்டுக்களும், பிண்னனி இசையும் அட்டகாசம். குறிப்பாக அந்த லைக்கோ லைமா! கல்யாண வீட்டில் ஒருவருக்குப் பூக்கும் காதலுக்கு இந்த இசைப் பிண்ணனி அபாரம். பாடல்களில் மழை மழையும், ஓ மனமேவும் என் All time Favs. யார் வந்தது யார் வந்தது... இந்த வரிகளை மறக்க முடியுமா என்ன?

படத்தில் சில பிடித்த காட்சிகள்:

1) ஆர்யா அம்மா, மணப்பெண்ணிடம் ஆர்யாவின் நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி. இது பிரியா என்று ஆரம்பிப்பார். "இதுல யாரு ஐரின்?" என்று மணப்பெண் கேட்பாள். அப்போது ஒரு மியூசிக் வருமே? அது.

2) ஷாம் அசினிடம் ப்ரபோஸ் பண்ணும் காட்சி. "காதல் ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயாமா இருக்கலாம். ஆனா நம்ம Culture ல கல்யாணம் ரெண்டு குடும்ப சம்பத்தப்பட்ட விஷயம்." அந்த வசனம்.

3) க்ளைமாக்ஸ் ஏர்போர்ட் காட்சி

4) அப்புறம் அந்த Farewell காட்சி.

இப்படி நிறைய காட்சிகள் படம் முழுக்க.

{}

இந்தப் படம் பல கல்லூரி நினைவுகளைக் கிளறி விட்டது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஆசிரியர்களைப் பகைத்துக்கொண்டது, நட்பா காதலா என்று தெரியாமலேயே முறிந்து போன ஒரு உறவு, கனமான சிலத் தருணங்களில் உடனிருந்த நண்பர்கள் என்று ஏதேதோ நினைவுகள். அன்று முழுவதும்.... "மறக்க நெனச்ச சில விஷயங்களை, காலம் திரும்பவும் நெனச்சுப் பார்க்க வைக்கும். அப்படி நெனச்சுப் பார்க்கும் போது சோகமான அந்த நினைவுகள் கூட சுகமானதா இருக்கும்." எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

இந்தப்படம் ஆகச்சிறந்த படம் கிடையாது. இசையும் உலகத்தரம் கொண்டதல்ல. ஆனால் உங்களுக்கு கொஞ்சம் ஃபீல் பண்ணப் பிடிக்குமென்றால், சொல்லாமல் போன காதலை நினைத்துப் பார்க்க இஷ்டம் என்றால், தொடர்பறுந்து போன நண்பர்களை நினைத்துப் பார்க்கப் பிடிக்குமென்றால் இந்தப் படம் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும். Try பண்ணிப் பாருங்கள்!!!

டிஸ்கி : படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அதைச் சொல்லியெல்லாம் இந்தப் படத்தைப் பாழ் பண்ண விரும்பவில்லை...:)

September 03, 2009

12ம் வகுப்பு படிக்க ஒரு கோடி ரூபாய்!

அபியும் நானும் படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஷ்ராஜ் தன் குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றிருப்பார். அப்பொழுது பள்ளி முதல்வர் "நீங்க Non Refundable Caution Deposit ஒரு பத்தாயிரம் கட்டிடுங்க. அதுக்கப்புறம் ஒரு டெர்முக்கு ஆயிரத்து அறுனூறு ருபாய்" என ஆரம்பித்து அடுக்கிக்கொண்டே போவார். இன்று அனேகமாக எல்லா தனியார் பள்ளிகளும் இந்த ரீதியில் தான் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எல்லாம் சும்மா என்று சொல்லும் அளவுக்கெல்லாம் இந்தியாவில் பள்ளிகள் இருக்கின்றன தெரியுமா?

உதாரணத்துக்கு ஊட்டியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் கட்டண விவரங்கள்! (எல்லாம் ரூபாயில்)

பதிவுக்கட்டணம் - 10,000
அனுமதிக்கட்டணம் - 20,000
கேபிடல் மற்றும் வளர்ச்சிக்கட்டணம் - 30,000

இவை மூன்றும் ஒரு முறை செலுத்த வேண்டியது. திருப்பித்தரப்பட மாட்டாது! இனி பள்ளிக் கட்டணங்கள்

வகுப்பு ஒரு டெர்ம் வருடத்துக்கு( x 2) மொத்தமாக
1 முதல் 6 1,51,000 3,02,000 18,12,000
7 முதல் 10 2,33,500 4,67,000 18,68,000
11 & 12 3,50,000 7,00,000 14,00,000

மொத்தம் 50,80,000 ரூபாய். அரை கோடி!
இது தவிர, விடுதிக் கட்டணம், சாப்பாடு, போக்குவரத்து, பிறந்தநாள் கொண்டாட்ட செலவு, புத்தகம், சீருடை, நீச்சல், கராத்தே என டவுசர் கிழியும் அளவுக்கு செலவு! இதெல்லாம் சேர்த்து வருசம் ஒரு ரெண்டு லட்சமாவது செய்துவிடமாட்டார்கள்? ஆக பன்னிரெண்டுக்கும் 24 லட்சங்கள்! Caution Deposit ஒரு இரண்டு லட்சம். மொத்தமாக கிட்டத்தட்ட 75 லட்சம். பன்னிரென்டு வருடமும் கட்டண உயர்வு இல்லாமல் இருந்தால்! 10% வரை கட்டண உயர்வு இருக்கக்கூடும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறார்கள். இது இந்திய மாணவர்களுக்கு. வெளிநாடு வாழ் இந்தியக் குழந்தைகளுக்கு கட்டணம் இன்னும் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. ஒரு கோடி ரூபாய்.

மலைப்பாக இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்க ஒரு கோடி ரூபாயா ? அதுவும் நமது இந்தியாவிலா? நானறிய அரசுப்பள்ளியில் பன்னிரெண்டு வகுப்பு வரை படித்து முடிக்க பத்தாயிரத்துக்கு மேல் ஆகாது. அதுவே அதிகம். அது இல்லாமல் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் ஏராளம். ஆனால், இந்த பள்ளியில், முதல் வகுப்பைத் தாண்ட மூன்று லட்சம் ரூபாய்கள். (எனது பொறியியல் படிப்பின் முழுக் கட்டணத்தைப் போல் ஆறு மடங்கு). ஒரு புறம் ஆரம்பக்கல்வியைக் கூடத் தாண்ட முடியாத ஏழைக்குழந்தைகள். மறுபுறம் பள்ளிக்கல்விக்கே அரை கோடி செலவழிக்கும் ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிகள். இந்த ஏற்றத்தாழ்வு உண்மையிலேயே மலைக்க வைக்கிறது.

என்ன சொல்ல? பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்!

September 01, 2009

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்....

பதிவுலகத் தில்லாலங்கடி
எதிர் கவிதை ஏகாம்பரம்
பின்னூட்ட சுனாமி
அராஜக அலேக்ரா - நண்பர்
லவ்டேல் மேடிக்கு இன்று நிச்சயதார்த்தம்! (மாட்டிக்கிட்டாருடோய்!)

அவரும் அவர் தங்கமணி தமிழ்ச்செல்வியும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ தாறுமாறாக வாழ்த்துகிறோம்!

சும்மா சொல்லக் கூடாது. தலைவரு என்னமா ஃபீல் பண்றாரு....

சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...

ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!

மாம்ஸ்! நடக்கட்டும் நடக்கட்டும். வாழ்க வளமுடன்!

August 25, 2009

ஏன் இந்த கொலைவெறி?


தானைத்தலைவன், தென்னகம் தந்த மன்னவன், முகவை பெற்ற முத்து, அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்கள் அரசியல் சமூகப் பணி ஆற்றச் சென்றுவிட்டதால், தமிழ்த்திரையுலகமே வருத்தத்தில் உள்ளது. அந்த வருத்தத்தை முழுவதுமாகப் போக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் குறைக்க அண்ணன் சிவகிரி களமிறங்கியுள்ளது நேற்று தான் தெரியவந்துள்ளது. (நான் கொஞ்சம் லேட்டுங்கோ!).

ஸ்டார்ட் மீஜிக்!

வந்துட்டேன்.

அது வருது ஓடுங்க! அது எல்லாத்த விடவும் பெரிசா இருக்கு!

அய்யா சாமி, இது கொழந்த புள்ளங்க!

யோவ், ப்ளீஸ்யா, விட்டுடுயா..

அப்படியே என்கவுண்டர்ல போட்டுடுங்க.


நாங்க டெர்ரர்ல?

டிஸ்கி : டக்ளஸ், கார்க்கி போன்ற ரித்தீஷின் தீவிர‌ ரசிகர்களுக்கு உடனே சிவகிரியை ஏற்றுக்கொள்ள முடியாது தான்... ஆனால் வேறு வழியில்லை. எஙகளுக்கு ஒரு மாற்றம் தேவை.

இதயம் ஒரு கோயில்....


பெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக!

மாரடைப்பு சில காரணங்கள்?
* சீரற்ற உணவு முறை.
* புகைப்பழக்கம்
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
* மரபு ரீதியான காரணங்கள்!

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன?
45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.

சர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு?
இருக்கிறது! சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது?
ECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.

இதய நோய்கள் பரம்பரை வியாதிகளா?
ஆம்!

மாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா?
இல்லை! அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க!)

எந்த எண்ணெய் வகை சிறந்தது ? சூரியகாந்தி, ஆலிவ்.... ?
எதுவுமே நல்லதில்லை.

Junk Food - என்னென்ன?
பொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...

ஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே?
இது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன?
உடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.

எனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
கொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
சீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.

மாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன?
அவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.

மாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா?
நிச்சயமாக! மேலே சொன்ன பதிலே தான்!

வாக்கிங், ஜாகிங் எது சிறந்தது?
வாக்கிங்.

மன உளைச்சலைக் குறைக்க என்ன வழி?
எல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)

இதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை?
* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.
* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன ?)
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.
* புகைப்பழக்கதை விட்டொழித்தல்
* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.

பத்திரமா பாத்துக்கங்க!

டிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்!

டிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

August 22, 2009

எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும்


ரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே! இனி வரப்போகும் படங்களையும் ஒரு மாதிரி எதிர்பார்த்து வைப்போம். ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?

1) எந்திரன்

சூப்பர் ஸ்டார் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும்! ஆனால் நான் எதிர்பார்ப்பது சுஜாதாவுக்காக. பாவம் மனிதர் ஆனந்த தாண்டவத்தில தான் மொக்கைவாங்கிட்டார். இதிலாவது அவரை கௌரவியுங்கள்!

2) உன்னைப் போல் ஒருவன்

வெட்னெஸ்டே என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம். உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங்.

3) அசோகவனம்

விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடிக்கும் படம். ஏதோ இராமாயணக் கதையாம். எப்படியும் இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்போகிறார். "குரு" போல! எனக்கு சுவாரஸ்யமில்லை. ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன்.

4) ஆயிரத்தில் ஒருவன்

வரும், ஆனால் வராது டைப் படம் இது. கொஞ்ச நாள் போனா மறந்தே போயிடும் செல்வா... சீக்கிரம் இறக்குங்க! பாவம் கார்த்தி! சோழ நாடு, தாய்தின்ற மண் என பாடல்கள் ஆவலைத் தூண்டுகின்றன. பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன்.

5) கோவா

வெங்கட் பிரபு இயக்கம். ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். வெங்கட் ஹாட்ரிக் அடிப்பாரா என்று பார்ப்போம்.

6) சுல்தான் தி வாரியர்

அனிமேஷன் படமாம். அதுவும் முப்பரிமாணத்தில். இந்த நுட்பத்தில் இந்தியர்கள் எந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று பார்ப்போமே!

7) சென்னையில் ஒரு மழைக்காலம்

இது வருமா வராதா என்று கௌதமுக்குத் தான் வெளிச்சம். ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கௌதமுக்காக வெயிட்டிங்!

8) மதராஸப்பட்டினம்

ஏதோ பீரியட் படம் போல இருக்கிறது ஸ்டில்சைப் பார்த்தால். டைரக்டர் விஜய். "பொய் சொல்லப் போறோம்" எடுத்தாரே அவர் தான். எதற்காக என்று தெரியாமலேயே கன்னா பின்னாவென எதிர்பார்க்கிறேன்.

9) அங்காடித் தெரு

வெயில் படம் மூலமாக ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர். இந்த படத்தில் என்ன கதைக்களம் என்று பார்ப்போம்.

10) நான் அவன் இல்லை 2


ஹி ஹி ஹி!

இந்த பத்துப் படங்கள் மட்டுமல்லாது, தளபதியின் வேட்டைக்காரன் (இதுவாவது கை கொடுக்குமா?) மற்றும் சின்னத் தளபதியின் "கண்டேன் காதலை (ஜப் வி மெட்டின் தமிழ்)" படத்தையும் வழி மேல விழி வைத்துக் காத்திருக்கிறேன்!

கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்.

August 19, 2009

என்னைக் கொன்னுடுங்க!

மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது? ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.

"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.

"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது." த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.

பெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், "க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க!" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

****

இது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.

எல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா? கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது? யார் அதை முடிவு செய்வது? யார் பரிந்துரைக்கலாம்? அவரை நம்பமுடியுமா? பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா? நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க! கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா?

கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது?

August 10, 2009

கதை கதையாம்...

"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்!" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். "ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல? அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம்! அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல!" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். "பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா?" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் "அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.

கந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். "சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.

இது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் "பிதுக்கா பிதுக்கான்னு" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது? க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More