June 24, 2009

அரட்டை : 24-06-09


1) வாதாடு மூரிலே
மாவேத மோதவே
மாலேரி மூடுதாவா

2) Was it a car or a Cat i Saw.

இந்த இரண்டு வாக்கியங்களின் சிறப்பு என்ன தெரிகிறதா?

{}

விளம்பரங்களில் இரண்டு வகை. முதல்வகை அந்த பொருளின் மதிப்பை எடுத்துக்கூறி அதனை வாங்க வைப்பது. அதன் போட்டியாளரை சண்டைக்கு இழுத்து மட்டம் தட்டி நாறடித்து எங்களுடையது தான் டாப்பு என்று விளம்பரம் செய்வது இரண்டாம் வகை. இதனை விளம்பரம் யுத்தம் எனலாம். அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்ட இரண்டு விளம்பரங்கள் இவை. ப்ளாக்பெர்ரி ஆப்பிளை வம்பிழுப்பதும், அதற்கு ஆப்பிள் பதில் ஆப்பு வைப்பதுமாக ஒரே ரணகளம்.

ப்ளாக்பெர்ரி ஆப்பிளை நோண்டுகிறது


திருப்பியடிக்கிறது ஆப்பிள்


சபாஷ் சரியான போட்டி!

{}

அலுவலகத்திலிருந்து கிளம்பவே இரவு பதினோரு மணியாகிவிடுகிறது.வீட்டிற்கு வர Cab கொடுத்துவிடுகிறார்கள். வேலை முடிந்து எவ்வளவு சலிப்புடன் கிளம்பினாலும், நல்ல பாடல்களாக ஒட விட்டு Cool anna! சொல்ல வைத்துவிடுவார் ட்ரைவர். இளையராஜா பாடல்களாக் ஒரு கலெக்ஷன் வைத்திருக்கிறார். ஒரு மழை நாள் இரவு. அசுரத்தனமான வேகம். "ராத்திரியில் பூத்திருக்கும்" பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. கேட்க கேட்க "சூப்பரா இருக்குண்ணா பாட்டு" என்றேன்.
"சும்மாவா சார்? சரக்கடிக்காமலே போதை ஏறுதே " என்றார் டிரைவர்.

ராகதேவன் ராகதேவன் தான்.

{}

மேலே சொன்ன இரு வாக்கியங்களும் பாலிண்ட்ரோம்கள் என சரியாக கண்டுபிடித்திருப்பீர்கள். முன்னாடி இருந்து படித்தாலும் பின்னாடி இருந்து படித்தாலும் ஒரே வாக்கியம் தான். தமிழில் இதற்கு மாலை மாற்று வகை என படித்ததாக ஞாபகம். திருஞானசம்பந்தர் இந்த வகையில் ஒரு பதிகமே பாடியிருக்கிறாரம்.

யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா

இப்படி ஆரம்பிக்கிறது அந்த பதிகம்.

ஆங்கிலத்தின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 17826 வார்த்தைகள் கொண்டதாம் (அடேங்கப்பா!)
A man, a plan, a cameo, Zena, Bird, Mocha, Prowel, a rave,
Uganda, Wait, a lobola, Argo, Goto, Koser, Ihab, Udall, a revocation,
Dunois, SECAM, Herse, Yetac, Sumatra, Benoit, a coverall, a dub, a
hire, Sokoto, Gogra, a lobo, Lati, a wadna, Guevara, Lew, Orpah,
Comdr, Ibanez, OEM, a canal, Panama!

June 19, 2009

ஆயிரத்தில் ஒருவன் - பாடல்கள்


செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாள் இருந்த படம். அப்போ இப்போ என ஒரு வழியாக பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடல்கள் - எனக்குப் பிடித்த வரிசையில்..

* பெம்மானே பேருலகின் பெருமானே. - பாம்பே ஜெயஸ்ரீ & ஸ்ரீனிவாஸ்

உயிரை உருக்கும் ரகம் என்பார்களே அந்த மாதிரி பாடல் இது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலுக்கு புதிய பரிமாணம். பஞ்சம், ப்ட்டினி வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சைப் பெருவுடையாரிடம் முறையிடுதல் போல் அமைக்கப்பட்டுள்ளது.

சோறில்லை சொட்டு மழை
நீரில்லை, கொங்கையிலும்
பாலில்லை கொன்றையோனே..

இந்த வரிகள் அவலத்தின் உச்சம்... இருபது முறையாவது கேட்டிருப்பேன் இதுவரை.

* தாய் தின்ற மண்ணே - விஜய் யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்.

இதுவும் அதே மாதிரி பாடல் போலத் தோன்றுகிறது. புலிக்கொடி பொறித்தவர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ என்றெல்லாம் வருகிறது. தமிழ்,தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கியிருக்கிறார்கள். ருத்ரவீணை, யாழ் போன்ற அரிய இசைக்கருவிகளையெல்லாம் தேடிப்பிடித்து உபயோகித்து இருப்பதாக செல்வராகவன் கூறியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில் வருவது ருத்ரவீணை இசை என் நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பாடலே, பாடுவீரோ தேவரே ? பரணி கலம்பகம் உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ? என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறது. ஆகா...

விஜய் யேசுதாஸ் தனியாக இதே பாடலை இன்னொரு முறை பாடியிருக்கிறார்.

* மாலை நேரம் - ஜி.வி. பிரகாஷ் & ஆண்ட்ரியா

எளிமையான கிடார் இசையுடன் ஆரம்பிக்கிறது. உடன் ஆண்ட்ரியாவின் சுகமான குரல். அழகான வரிகள். போகப் போக கிடாரின் ஆதிக்கம் கூடுகிறது. காதலைக் காதலிப்பவர்கள் இந்த பாடலையும் காதலிப்பார்கள்.

* உன் மேல ஆசை தான் - ஆண்ட்ரியா, தனுஷ் & ஐஸ்வர்யா தனுஷ்.

சர்வம் படத்தில் வருமே "அடடா வா அசத்தலாம்" என ஒரு பாட்டு? கிட்டதட்ட அதே மாதிரி இருக்கிறது. எனக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறதா இல்லை உண்மையிலேயே அப்படித்தானா என்று தெரியவில்லை. இந்த பாடலும் கேட்பதற்கு Bar Song போலத் தான் இருக்கிறது. ஹ்ம்ம்ம்ம்... படம் வரட்டும் பார்க்கலாம்.

* இந்த பாதை - ஜி.வி. பிரகாஷ்

தாலாட்டும் ரகம். ஜி.வி யின் குரலில் இளமை துள்ளுகிறது. கவலை இல்லாமல் திரியும் நாயகனுக்காக இந்த பாடல் இருக்கலாம். எழுதியது செல்வராகவனாம். நைஸ்.

* ஓ ஈசா - கார்த்திக், ஆண்ட்ரியா & பிக் நிக்.

கோவிந்தா கோவிந்தா டேக் மி ஹையர் கோவிந்தா என வழிபடுகிறார்கள். கடவுளையும் டிஸ்கோவுக்கு அழைத்துவந்துவிட்டார் ஜி.வி...:)

* Celebration of Life

தீம் மியூசிக்? அசத்தலான இசை. மிக மெலிதாக ஆரம்பித்து போகப் போக வேகம் கூட்டி இறுதியில் திரும்பவும் மெலிதாக முடிந்து போகிறது,

* The King Arrives.

ராஜா வருகிறார்...? :) பார்த்திபன் ஒரு ராஜா வேடத்தில் நடித்திருக்கிறாராம். அவருக்கான பிண்ணனி இசையாக இருக்குமோ ? கேட்க நன்றாக இருக்கிறது. காட்சியுடன் பார்த்தால் பிரம்மாண்டம் புரியலாம்.

பாடல்களை முதல் முறை அவசர அவசரமாக கேட்கும் போது அய்யோ பாவம் செல்வா என்று இருந்தது. ஆனால் திரும்பவும் வரிகளுடன் கேட்டபோது சட்டென பிடித்துப் போனது. தனுஷ் மாதிரி கேட்டா புடிக்காது. கேட்க கேட்கத் தான் பிடிக்கும் போல.

ஜி.வி பிரகாஷ் இந்த படத்துக்காக ஒன்றரை வருடம் பழங்காலத்து இசைக்கருவிகளைப் பற்றி ஆய்வு செய்தாராம். பாடல்களைக் கேட்கும் போது உழைப்பு தெரிகிறது. ஜி.வி இசைப் பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். வாழ்த்துக்கள் ஜி.வி!!

June 17, 2009

Angels & Demons


தேவதைகளும் சாத்தான்களும்... ???

போப் ஆண்டவர் திடீரென கொலை செய்யப்படுகிறார். புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் முக்கியஸ்தர்களான நான்கு கார்டினலகள் கடத்தப்படுகிறார்கள். இதே சமயத்தில், CERN ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்படும் ஆன்டி-மேட்டர் (கவனிக்க : Aunty matter இல்லை) just like that திருடப்படுகிறது. மூன்றுக்கும் காரணம் இலுமினாட்டி என்று சொல்லப்படுகிற ரகசிய அமைப்பு. ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு கார்டினலாகக் கொன்றுவிட்டு நள்ளிரவில் அந்த மேட்டரை வெடித்து வாடிகனையே அழிக்கப் போவதாக பயமுறுத்துகிறார்கள்.

இதனிடையே இலுமினாட்டி மர்மத்தை உடைக்க வரும் நாயகன் Prof. Robert Langdon மற்றும் ஆண்டி-மேட்டர் வயலைத் தொலைத்துவிட்டு நிற்கும் விஞ்ஞானி Vetra ஆகியோர் கார்டினல்களையும் வயலையும் சேர்த்துத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு வாடிகன் தேவாலயங்களில் உள்ள தேவதை சிற்பங்கள் வழிகாட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் மிகச் சரியாக கார்டினல் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு அந்த இடத்திற்குச் செல்கிறார்கள். இலுமினாட்டி மர்மத்தை அவிழ்க்க முடிந்ததா, வாடிகனை காப்பாற்ற முடிந்ததா என்பது பரபரப்பான மீதிக் கதை.

சும்மா சொல்லக்கூடாது. விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத கதை. உண்மையான இலுமினாட்டி யாரென்று தெரியும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது!
படத்தில் முக்கால்வாசி செட்டிங்காம்! பிரம்மிப்பாக இருக்கிறது. வாடிகனின் அழகைக் கண் முன்னே நிறுத்துகிறது.

டாம் ஹேங்க்ஸ்!!! மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ப்ரொஃபசராகக் கச்சிதமாக்ப் பொருந்துகிறார். கதாநாயகிகள் போல நீச்சலுடையில் அறிமுகமாகிறார்.:)

க்ரான்ட் மாஸ்டர், மேரி மேக்தலின், ப்ரையரி ஆஃப் சையன், ப்ளட் லைன், சிம்பல்ஸ் போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் டாவின்சி கோட் படமாக்கப்பட்ட விதத்தில் அதன் விறுவிறுப்பை இழந்திருந்தது. இங்கு இலுமினாட்டி என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார்கள்.

படம் நன்றாக இருக்கிறது என நான் சொன்னேன். நாவல் அளவுக்கு இல்லை என நண்பன் சொல்கிறான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

June 14, 2009

கவிஞர் தாமரைக்கு ஒரு கடிதம்


மதிப்புக்குரிய கவிஞர் தாமரைக்கு,

நலமா?

குமுதம் வெப் டி.வியில் தங்களது பேட்டியை பார்க்க நேர்ந்தது. ஈழப் பிரச்சனையில் தனது நியாயமான கருத்துக்களையும், ஆதங்கங்களையும் முன்வைத்திருந்தீர்கள். அதன் பின் கண்ணகி பிறந்த மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தீர்கள்.
அந்த கவிதை.

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம் படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம் நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

எவ்வளவு உக்கிரம் உங்கள் வார்த்தைகளில்? கவிதைகளைப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன். அனால் இதைக் கேட்டவுடன் ஒரு காரணம் தெரியாத நடுக்கம் தோன்றுகிறது. கோபம் என்பது வெறும் வார்த்தை. ரௌத்ரம் தெரிக்கிறது உங்கள் வார்த்தைகளில். அவ்வளவு தூரம் காயப்பட்டிருக்கிறோம். கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை உங்கள் வார்த்தைகளின் நிஜத்தை.

சாபம் பலிப்பதும் பலிக்காத்ததும் வேறு விஷயம். அனால் எங்கிருந்தோ வந்து நம் இனத்தை அழித்துக் கொண்டிருப்பவளுக்காக ஒன்றும் அறியாத அப்பாவிகளான மக்களைச் சபிக்க வேண்டாம். எத்தனையோ தமிழரல்லாத நண்பர்கள் நம் நிலைக்காக வருந்துகிறார்கள். பாவம் அவர்களால் வருந்தத் தான் முடிகிறது. நம்மாலும் அதைத்தானே செய்ய முடிகிறது? ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு அந்தச் சாபம் பலிக்கட்டும். தமிழனின் துயரத்தை அரசியலாக்கி லாபம் பார்த்த சுயநலவாதிகளுக்கு அந்த சாபம் பலிக்கட்டும். குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே. அதேபோல் அப்பாவிகள் எங்கிருந்தாலும் அப்பாவிகளே. துயரம் நம்மோடு போகட்டும்.

நம்பிக்கையுடன்,
ஒரு தமிழன்.

June 07, 2009

அரட்டை : 07-06-09

ஒரு கமெர்ஷியல் படம் எடுக்கலாமா? முதலில் நல்ல பெயரை செலெக்ட் பண்ணிக்குங்க. ஒரு வாட்டசாட்டமான ஹீரோவையும், லூசுத்தனமான ஹீரோயினையும் ரெடி பண்ணிக்குங்க. ஐந்து பாடல்களை எழுதிக்குங்க. ஒன்று அல்லது இரண்டு வில்லன்களை ரெடி பண்ணிக்குங்க.ஏதாவது ஒரு செண்டிமெண்ட் வரணும் படத்துல. அப்புறம் காட்டமான பன்ச் டயலாக்ஸும். அட்வைஸ் டயலாக்ஸும் எழுதிக்குங்க. இப்ப ஹீரோவும் வில்லனும் மோதிக்கணும். அதுக்கு ஒரு காரணம் வேண்டும். அந்த கருமாந்தரத்தையும் ரெடி பண்ணிக்குங்க. மறக்காம ஹீரோ , வில்லன் சேசிங் சீன் ஒன்று வைக்கணும். இப்ப எல்லா விஷயத்தையும் அங்கங்க ஃபிட் பண்ணனும். இப்பவே கதை டெம்ப்ளேட் ஒன்று உருவாகியிருக்கும். ஹீரோயினை மறந்துவிட்டோமே! கப்பித்தனமான ரொமான்ஸ் சீன்ஸ் கொஞ்சம் ரெடி பண்ணிக்கிட்டு அங்கங்க அட்டாச் பண்ணிக்குங்க. ஒவ்வொரு சீன்ஸ் முடியறப்பவும் தலா ஒரு பாடலை இணைக்கவும். முதல் பாதியில் நிறைய பன்ச் டயலாக்ஸ் வர மாதிரியும் பின் பாதியில் நிறைய அட்வைஸ் டயலாக் வர மாதிரியும் பார்த்துக்கவும். இப்ப மிச்சம் இருக்குறது காட்சியமைப்பு. பழைய மசாலா படத்துல எல்லாம் இருந்து ஒவ்வொரு சீன் எடுத்து சீன்ஸ் ரெடி பண்ணிக்குங்க. இப்ப சீன்ஸ் எல்லாம் ஒழுங்கா மாத்தி மாத்திப் போட்டு, கிளைமாக்சில் வில்லனை அழித்து/திருத்தி சுபம் போட்டால் படம் ரெடி.
ஒரு வேளை தோரணையையும் இப்படி தான் எடுத்திருப்பார்களோ?

{}

எங்களுக்கு ஒரு கொடூர பழக்கம் இருக்கிறது. எங்களுக்கு என்றால் நான், ரவி, செந்தில், ரிஸ்வான்,முத்து மீனா மற்றும் சௌம்யா. கம்பெனி பஸ்சில் கடைசி மூன்று வரிசைகளைக் கைப்பற்றிக் கொண்டு டைம் பாஸ் செய்கிறோம் பேர்வழி என பாடிக் கொண்டு வருவோம். உண்மையில் பாடுகிறோம் என்ற பெயரில் பாடல்களைக் கொலை செய்வோம். இதனாலேயே பஸ் கிளம்பியவுடன் எல்லோரும் ஹெட்செட் எடுத்து மாட்டிகொண்டுவிடுவர்கள். (என்றைக்கு கம்ப்ளெய்ன்ட் செய்யப் போகிறார்களோ!)
அன்று ஜூன் இரண்டு.
நான் சொன்னேன். "மச்சி இன்னிக்கு ராஜா சார் பர்த்டே டா!"
"அதுக்கு?" முத்து கேட்டான்.
"இன்னிக்கு முழுக்க ராஜா சார் பாட்டு தான் பாடறோம். அவருக்கு மரியாதை பண்ற மாதிரி இருக்கும்ல? "
"டேய். அவர் பாட்ட நீ பாடம இருந்தாலே அவருக்கு பண்ற மரியாதை டா... இன்னிக்காவது அவர விட்ரு"
"^&&)*&*^%%^$"

{}

ஊருக்குப் போயிருந்த போது பாட்டி வேறெந்த சேனலையும் மாற்ற விடாததால் கலைஞர் டி.வியையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஏதோ வைர நெஞ்சம் சீரியலாம். யாரோ யாரையோ கொலை செய்துவிட்டார்களாம். அந்த பழி நாயகியின் கணவன் மேல் விழுந்துவிட்டதாம் (இங்கு ஒரு விஷயம். சீரியலில் நாயகியின் புருஷன் எல்லாம் நாயகன் அல்ல. சினிமாவில் விஜயசாந்தி படத்தில் ஒரு புருஷன் வருவானே, அது மாதிரி டம்மி தான்.) அதனால் இவள் வாழ்க்கையே பாழாகிவிட்டதாம். நாம் தான் உதவி செய்து அவனையும் அவளையும் காப்பாற்ற வேண்டுமாம் (என்ன எழவு இது?). ஒவ்வொரு பிரேக்கிலும் நாயகி வந்து அழுதுகொண்டிருந்தாள்.
பாட்டியிடம் கேட்டேன். "எப்படிம்மா இதையெல்லாம் பாக்குறீங்க?"
"அந்த நாடகத்துலயும் உன்ன மாதிரி தான் கண்ணு.... அவனுக்கும் அம்மா இல்ல.. Bla bla bla"
எப்படியாவது தங்கள் வாழ்க்கையுடன் ரிலேட் செய்து விடுகிறார்கள். அதன் பின் அந்த சீரியல் போரடிப்பதுமில்லை. மறப்பதுமில்லை.

{}

மீரா குமார். இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் (நாயகி?). படித்தவர். சமூக நல ஆர்வலர். வழக்கறிஞர். மகிழ்ச்சி. ஆனால் குரல் மட்டும் மிகவும் மென்மையாக இருக்கிறது. தினமும் அமளி துமளி நடக்கும் லோக் சபாவில் ஆளுமையான குரல் இல்லாமல் எப்படி குப்பை கொட்டப்போகிறார் என்று பார்ப்போம். வாழ்த்துக்கள்!!!

June 02, 2009

விகடனுக்கு நன்றி!

என்னுடைய நோ ஸ்மோக்கிங் இடுகையை குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி நன்றி நன்றி! 

தகவலைத் தெரிவித்த முனைவர் சே.கல்பனா அவர்களுக்கும் மிக்க நன்றி....:)

பள்ளி மாணவர் தலைவன்

வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தம் வீசும் பக்கங்கள் பள்ளி நாட்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள்..  எத்த்னையோ நினைவுகள்..அவற்றில் SPL ஆக இருந்த காலங்கள் மறக்க முடியாதவை. 

SPL - School Pupil Leader, பள்ளி மாணவர் தலைவன். பெயர் தான் கெத்து. ஆனா செம கடியான போஸ்ட். நான் பத்தாம் வகுப்பு படித்த போது, தேர்தல் எதுவும் வேண்டாம், இவனே இருக்கட்டும் என்று தலைமையாசிரியர் சபித்து விட்டுப் போய்விட்டார். தேர்தல் வந்தால் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு நோட், புத்தகங்களில் ஓட்ட லேபிள் கொடுத்தாவது ஜெயித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த எதிர்க்கட்சி முகாமில் பெரிய ஏமாற்றம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் செய்ய வேண்டியிருந்த வேலைகள் அப்படி! 

முக்கியமான வேலை ப்ரேயர் நடத்த வேண்டும். பெரிய ராணுவ வீரன் போல மார்ச்பாஸ்ட் செய்து கொண்டு போய், ஆசிரியரை அழைத்து வந்து கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, உறுதிமொழி கூறி, தினம் ஒரு குறள் சொல்லி, நாட்டுப்பண் பாடி.... ஏறு வெயிலில் நின்று தாவு தீர்ந்துவிடும்.  தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு கேசட் இருக்கும். ஆனால் பவர் கட் என்றால் முடிந்தது கதை. ஏதாவது குறள் சொல்லவேண்டும். அந்த நேரத்துக்கு எது தோன்றுகிறதோ அதை சொல்லி சமாளிக்க வேண்டும். நிறைய நாள் "அகர முதல" வையும் "கற்க கசடற" வையும் வைத்து ஒட்டியிருக்கிறேன். பிரேயருக்கு தமிழாசிரியர் வந்தால் அந்த இடத்திலேயே திட்டு கிடைக்கும் "வேறு ஏதும் தெரியாதா?" என்று.. தினம் தினம் நடக்கும் அவஸ்தை இது.

அடுத்தது பள்ளியை அமைதியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு. நாம் சொன்னால் ஒரு பயலும் கேட்க மாட்டான். சொன்னதற்காகவே சத்தம் போடும் நல்ல உள்ளங்கள் இருப்பார்கள். ஒரு முறை ஆசிரியர் வராததால் மொத்த வகுப்பும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு வந்த தலைமை, SPL ஐ அழைத்து வா என சொல்ல, யம தூதுவன் போல ஒருத்தன் வந்தான். நானும் நம்பி போனேன். ஒன்றும் பேசவில்லை. தலையைப் பிடித்து அழுத்தி குனிய வைத்தார். முதுகில் இரண்டு அறை கொடுத்தார். அப்புறம் தான் பேசவே ஆரம்பித்தார். "ஏண்டா இவங்க எல்லாம் இப்படி சத்தம் போடுறாங்க?" என்றார். அவமானம் பிடுங்கித் தின்ன ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன். இப்படி அவங்க வீட்டு மாடு பால் கறக்கலனா கூட அடி வாங்க வேண்டியிருக்கும். இது அவ்வப்போதைய அவஸ்தை!

ஏதாவது சுற்றறிக்கை வந்தால், அதை ஒவ்வொரு வகுப்பாக எடுத்துச் சென்று படித்துக் காட்ட வேண்டும். இந்த கடியான வேலையை கருத்தாக நான் செய்ய காரணம் 7-ஆ வகுப்பு... இந்த வகுப்பில் தான் தாரகேஸ்வரி டீச்சர் இருப்பார்கள். :) அப்புறம் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர் கூட்டம் நடக்கும். ஆலோசனை செய்வார்களோ இல்லையோ, கிலோ கணக்கில் கறி வாங்கி மொக்குவார்கள். அதையும் நாம் தான் போய் வாங்கி வர வேண்டியிருக்கும். சாப்பிட போற சமயத்துல மட்டும் "நீ போய் கிளாஸ் பாத்துக்க" என்று வகையாக கழட்டி விட்டுவிடுவார்கள்.

சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் வகுப்பறைகளை அல்ங்கரித்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்கு பரிசளிக்கும் பழக்கம் எங்கள் பள்ளியில் உண்டு. அந்த வருடம் ஆறாம் வகுப்பில் ஒரு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசும் கொடுத்தார்கள். அது சுழற்கோப்பை. கொடுத்து அரை மணியில் திரும்ப பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரிசை வாங்கிய அந்த வகுப்பு லீடர் இது தெரியாமல் எஸ்கேப் ஆகியிருந்தார். பிறகு? சைக்கிளில் துரத்திச் சென்று வாய்க்கால் மேட்டிற்கு அருகில் அவனை பிடித்து வாங்கி வர வேண்டியதாக போனது. 

இப்படி நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் எல்லாமும் செய்து கொண்டு படிக்க முடிந்தது. தினம் தினம் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க மனம் விரும்பியது. ஏதோ ஒன்று சலிப்படையவிடாமல் செய்தது. அது தான் பள்ளிப்பருவம். Good Old Days!

டிஸ்கி : நேற்று ஃபோன் செய்த என் பள்ளி நண்பன் அருள் "என்னடா SPL..." என்று ஆரம்பித்தான். பின் ரொம்ப நேரம் அரட்டை. என் பால்ய நினைவுகளை மீட்டெடுத்த அவனுக்கு நன்றி!

June 01, 2009

ஜன கண மன...

மல்லியம்மன் துர்க்கம்... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைக் கிராமம். அந்த கிராமத்தை அடைய ஒரு 8. கி.மீ மலையேற வேண்டியிருக்கும். மின்சாரம், சாலை வசதி எதுவும் இல்லாத ஒரு கிராமம்.  மாதம் ஒரு முறை மட்டுமே நடக்கும் ஆரம்பப் பள்ளி வன அலுவலர்களுக்கும், காவலர்களுக்கும் விருந்தினர் இல்லம்.

இருளில் மூழ்கிப் போயிருந்த அந்த கிராமத்தில், இன்று சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்ப்ட்டுள்ளன. பள்ளிக்கூடம் தொடர்ந்து நடக்க ஆவன செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பின்கண்ட செய்தியுடன் கூடிய பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. 

அது தவிர, அங்கு வசிக்கும் சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் விநியோகிப்பட்டுள்ளன. இவற்றை செய்தது, அரசோ அரசியல் கட்சியோ அல்ல. மென்பொருள் துறையச் சேர்ந்த தன்னார்வலர்கள். 

தங்களால் ஆன பணத்தை வைத்து மாதா மாத்ம் இயன்ற வரை நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.  தெருவிளக்கு அமைத்தது பற்றி அவர்கள் கூறுகையில் "கிராம எல்லையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கால் யானை உள்ளே நுழைவது தவிர்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்" என்கிறார்கள்.
  
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தானே உண்மையான சந்தோஷம்? மற்றவர்களுக்கு, இயன்ற உதவிகளைச் செய்து சந்தோஷப்படுத்தும் இந்த ஊர், பெயர் அறியாத நண்பர்களை நாமும் வாழ்த்துவோம்!  வாழ்த்துக்கள்!!! 

May 31, 2009

அரட்டை : 01-06-09

ஒரு அனுபவம்

தாத்தாவிற்கு பேஸ் மேக்கர் ஆபரேஷனுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தோம். ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. ஆனால் இந்த பணியாளர்கள்... "இங்கு சிகிச்சைகள் அனைத்தும் இலவசம். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்" என்று கண்ணில் படும் இடத்தில் எல்லாம் எழுதியிருந்தும் 'நான் அதை செய்தேன், இதை செய்தேன் .. கொஞ்சம் கவனியுங்க" என்று நிற்கிறார்கள். கொடுக்காமல் இருக்கத் தோன்றவில்லை. நம் தாத்தாவைப் பார்த்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தாலா அல்லது ஒழுங்க்காக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற பயத்தினாலா என்று தெரியவில்லை.

ஒரு நெகிழ்ச்சி

போன முறை ஊருக்குப் போயிருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டுப் பசுவிற்கு பேறு காலம். அம்மாவும் நானும் கூடவே இருந்தோம். பசுவிற்கு முதல் பிரசவம் என்பதால் என்ன செய்வதென்று அதற்குத் தெரியவில்லை. வலியெடுத்தால் உந்தித் தள்ளுவதற்கு பதில் காலை மட்டும் உதைத்துக் கொண்டிருந்தது. படுக்காமால் நின்று கொண்டேயிருந்தது. முக்கால் மணி நேரமாகியும் கன்று வெளியே வந்தபாடில்லை. அம்மாவிற்கு பயம் வந்துவிட்டது. மாட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால்? ஒரு மாடு இறந்ததற்காக பத்து நாள் அழுது கொண்டிருந்தவர்கள் என் அம்மா. 
அதன் பிறகு என் பெரியப்பா வந்து லாவகமாக கன்றை இழுத்து வெளியே எடுக்க - சுகப்பிரசவம். உடனே அம்மா "பேத்தி பிறந்திருக்கா" என்று ஆனந்தக் கூச்சல்! 

ஒரு முடிவு

இந்த வார மொட்டை மாடி கூட்டத்தில் (எங்கள் வீட்டில் -கிழக்கு பதிப்பகத்தில் அல்ல) பின் நவீனத்துவத்தைப் பற்றி ஏனோ பேச்சு எழுந்தது. அந்த பதத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம் அவ்வளவு தான். அது என்ன என்று நடந்த விவாதத்தை வெளியே சொன்னால் பின் நவீனத்துவவாதிகள் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள். என்னென்னவோ பேசி கடைசியாக "ஒரு எழவும் புரியாமல் இருந்தால் அது பின் நவீனத்துவம்" என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. 

ஒரு புகைப்படம்

இது எங்கள் வயல். நெல் பயிரிட்டிருந்த போது எடுத்தது. அந்த பருவத்தில் ஊர் முழுக்க இப்படி தான். ரம்மியமாக இல்லை?

நோ ஸ்மோக்கிங்!

இன்று (May 31) புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  மூச்சு வாங்குதலில் இருந்து மாரடைப்பு, புற்று நோய் ஆண்மைக்குறைவு வரை எராளமான விளைவுகள். புகைப்பவர் மட்டுமின்றி உடனிருப்பவரும் புகையால் பாதிக்கப்படுகிறார். புகைப்பவர்கள் அனைவருக்குமே அதன் விளைவுகள் தெரிந்திருந்தும், அந்த பழக்கத்தை விடமுடியாமல்/விரும்பாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.
{}
இன்று பதின் வயது சிறுவர்கள் கூட இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருவது கண்கூடு. அவர்களைப் பொறுத்தவரை இந்த பழக்கம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. சரி எது தவறு எது என்று புரியாத வயதில், தன் மனம் கவர்ந்த ஹீரோ சினிமாவில் புகைப்பது சாகசமாகத் தெரிகிறது. விளைவு? டீக்கடை சந்தில் ஒதுங்குகிறான். யதார்த்த சினிமா எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் சில புண்ணியவானகள் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருணை காட்டி புகையை திரையில் காட்டாமல் இருங்களேன்! 
{}
இளைஞர்களுக்கும் புகைப்பதில் ஏதோ ஒரு அலாதி இன்பம். யாரையோ வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டதாக ஒரு ஆனந்தம். "சும்மா!" என்று ஆரம்பித்து இன்று விட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு அது மன அழுத்தத்தின் வடிகால். மூளை செல்களைத் தளர்வடையச் செய்வதனால் ஒருவித ரிலாக்ஸான நிலையை அளிக்கும் நிக்கோட்டின் வேறு பல கொடூர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அது இல்லையென்றால் "காலை வேலை" கூட ஒழுங்காக நடைபெறாது.  அந்த அளவிற்கு உடம்பு அடிமையாகி போய்விடுகிறது! 
{}
ஒரு நாளைக்கு ஒன்று என்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட் என்பது வரை ஏகப்பட்ட வெரைட்டியில் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு புகையினால் ஏற்படும் தீங்குகளும், இறப்பு புள்ளி விவரங்களும் தெரிந்தே இருக்கின்றன. தெரிந்தும் விட முடியாமல் தவிக்கிறார்கள். ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும் என்பது என் கருத்து! 
{}
எது எப்படியோ புகையை விட்டொழித்து வருங்கால சந்ததிக்கு புகையில்லாக் காற்றை பரிசளிப்போம்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More