May 31, 2009

நோ ஸ்மோக்கிங்!

இன்று (May 31) புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  மூச்சு வாங்குதலில் இருந்து மாரடைப்பு, புற்று நோய் ஆண்மைக்குறைவு வரை எராளமான விளைவுகள். புகைப்பவர் மட்டுமின்றி உடனிருப்பவரும் புகையால் பாதிக்கப்படுகிறார். புகைப்பவர்கள் அனைவருக்குமே அதன் விளைவுகள் தெரிந்திருந்தும், அந்த பழக்கத்தை விடமுடியாமல்/விரும்பாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.
{}
இன்று பதின் வயது சிறுவர்கள் கூட இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருவது கண்கூடு. அவர்களைப் பொறுத்தவரை இந்த பழக்கம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. சரி எது தவறு எது என்று புரியாத வயதில், தன் மனம் கவர்ந்த ஹீரோ சினிமாவில் புகைப்பது சாகசமாகத் தெரிகிறது. விளைவு? டீக்கடை சந்தில் ஒதுங்குகிறான். யதார்த்த சினிமா எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் சில புண்ணியவானகள் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருணை காட்டி புகையை திரையில் காட்டாமல் இருங்களேன்! 
{}
இளைஞர்களுக்கும் புகைப்பதில் ஏதோ ஒரு அலாதி இன்பம். யாரையோ வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டதாக ஒரு ஆனந்தம். "சும்மா!" என்று ஆரம்பித்து இன்று விட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு அது மன அழுத்தத்தின் வடிகால். மூளை செல்களைத் தளர்வடையச் செய்வதனால் ஒருவித ரிலாக்ஸான நிலையை அளிக்கும் நிக்கோட்டின் வேறு பல கொடூர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அது இல்லையென்றால் "காலை வேலை" கூட ஒழுங்காக நடைபெறாது.  அந்த அளவிற்கு உடம்பு அடிமையாகி போய்விடுகிறது! 
{}
ஒரு நாளைக்கு ஒன்று என்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட் என்பது வரை ஏகப்பட்ட வெரைட்டியில் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு புகையினால் ஏற்படும் தீங்குகளும், இறப்பு புள்ளி விவரங்களும் தெரிந்தே இருக்கின்றன. தெரிந்தும் விட முடியாமல் தவிக்கிறார்கள். ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும் என்பது என் கருத்து! 
{}
எது எப்படியோ புகையை விட்டொழித்து வருங்கால சந்ததிக்கு புகையில்லாக் காற்றை பரிசளிப்போம்!

May 24, 2009

கொலைவெறி எனப்படுவது யாதெனில்...

மைனருக்குக் கல்யாணம். மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டார். கல்யாணம் தூத்துக்குடியில் ஒரு வெள்ளிக்கிழமை வைத்திருந்தார்கள். அதனால் கல்யாணத்துக்குப் போய்விட்டு அப்படியே மூன்று நாள் எங்காவது என்சாய் பண்ணிவிட்டு வரலாம் என்று ஏற்பாடாயிற்று. ஒரு எட்டு பேருக்கு போக வர டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. எங்கெல்லாம் சுற்றலாம் என்று ஒரு டீம் ஆராய்ந்தது. அப்புறம் நிறைய நாள் இருந்ததாலோ என்னவோ ட்ரிப்பைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று டீலில் விட்டாயிற்று. 

எல்லாம் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது கார்த்திக் ஆரம்பிக்கும் வரை. ஒரு நாள் லன்ச் பிரேக்கில் தான் சொன்னான். "மச்சி ஒரு பத்து நாள் ஆஸ்திரேலியா போக வேண்டி வரும்டா!"
"டேய். என்னடா சொல்ற? ட்ரிப்புக்கு இன்னும் 15 நாள் தான் இருக்கு!" முத்து கேட்டான்.
"Don't Wrorry மச்சி. கண்டிப்பா நான் அதுக்குள்ள வந்துடுவேன்" - அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கார்த்திக். ஆனால் அப்போதே தெரிந்தது தலைவர் வர மாட்டார் என்று. 

ரெண்டு நாள் கழித்து எலிசபெத் ஃபோன் செய்தார்கள்.  "மகேஷ், நான் லிஸ் (பேர ஷார்ட் பண்றாங்களாம்) பேசுறேன்." 
"சொல்லுங்க எலி"
"டேய், இந்த மந்த் நெறய லீவ் எடுத்துட்டேன்.. அதனால 22nd லீவ் கெடைக்காதுன்னு நெனைக்கிறேன். சாரிடா."  என்ன சொல்வதென தெரியாமல் "சரி விடுங்க எலி" என்று சொல்லி வைத்தேன். 

சரியாக கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னால் சிவா கூப்பிட்டான்.  "மகேஷ்,,, சிவா"
"ம். சொல்லு சிவா!"
"எனக்கு ஒடம்பு சரியில்லடா. ஊருக்குப் போய்ட்டு இருக்கேன். கல்யாணத்துக்கு வரமுடியுமான்னு தெரியல." 
"பரவாயில்ல சிவா. ஒடம்ப பார்த்துக்க." எல்லோரும் பிச்சுக்குவாங்களோ என்று லேசாக பயம் வர ஆரம்பித்தது. 

இருப்பவர்களையாவது கன்ஃபார்ம் செய்யணும் என்று நினைத்துகொண்டே ஸ்டாலினுக்கு ஃபோன் போட்டேன். "டேய் ஸ்டாலின். லீவ் கேட்டாச்சா"
"எதுக்குடா லீவ் ?" நிலைமயைப் புரிந்து கொள்ளாமல் கேட்டான் என் நண்பன். 
"%(#@?^&, கல்யாணத்துக்குடா. கல்யாணம் வர வெள்ளிக்கிழமை. "
"ஓ. நான் மறந்தே போயிட்டேன். இன்னிக்கு லீட் லீவ்ல இருக்காரு, மன்டே கேக்குறேன்டா."

குருவுக்கும் முத்துவுக்கும் ஏற்கெனவே லீவ் கிடைத்திருந்தது தெரியும். யுவராஜ் "டேய் கவலையே படாத. லீவ் கெடச்சாச்சுன்னு வச்சுக்க." என்று பாலை வார்த்தான்.

கிளம்புவதற்கு முதல் நாள், முத்து என் கேபினுக்கு வந்தான். "மச்சி, அம்மாக்கு ஒடம்பு சரியில்ல. அப்பா வேற ஊர்ல இல்ல.நான் இங்கயே இருக்கணும்டா!"
"டேய், நீயுமாடா?, யாருமே இல்லனா ட்ரிப் நல்லா இருக்காதுடா." 
"அதான் யுவா இருக்கான்ல. போய்ட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

சுத்தம்! நாலு பேர வச்சுக்கிட்டு என்ன பண்றது என்று நினைத்துக்கொண்டே, ஸ்டாலினை திரும்ப அழைத்தேன்.  "மச்சி, நாளை காலைல சொல்றேன்டா" என்றான்.   
"ஹ்ம்ம்ம்ம்" அரைமனதாக தொடர்பைத் துண்டித்தேன்.

அடுத்த நாள் வியாழக்கிழமை. இரவு எட்டு மணிக்கு தாம்பரத்தில் ட்ரெய்ன். அவனவன் ஆஃபீசில் இருந்து ரயில் நிலையத்திற்கு வந்துவிடுவதாக ஏற்பாடு.  

காலை பதினோரு மணி இருக்கும். ஸ்டாலினிடமிருந்து ஃபோன் வந்தது. "மச்சி, சாரிடா."
"டேய், வரலன்னு மட்டும் சொல்லிடாதடா!" கெஞ்சினேன் நான்.
"இல்ல மச்சி, லீவ் இல்லனு சொல்லிட்டாங்கடா. Production Support டீம்ல நான் மட்டும் தான் இருக்கேன். அதனால் முடியாதுன்னு சொல்லிட்டாங்க"
"போடா ^(!+$%&" கட் செய்தேன். 

மூன்று மணி.
"சரித்திரத்த ஒரு நிமிஷம் பாருங்க"  பில்லா பட தீம் மியூசிக் ரிங் டோனாய் அலறியது. அழைத்தது யுவராஜ்!
"மாப்பி, டீம்ல ஆடிட் இருக்குதுடா" என்றான்.
"என்னடா ஆடுது" என்று கேட்டேன் நான் நேரம் தெரியாமல். 
"டேய், எங்க டீமுக்கு நாளைக்கு ஆடிட்."
"சோ?"
"சோ, நான் இருக்கணும்"
என்னடா இப்படி பண்ணிட்ட என்ற என் கேள்விக்கு ஏதேதோ விளக்க்ம் சொன்னான்.

குருவும் நானும் தான். அவன் அப்படியே தாம்பரம் வந்துவிடுவான். ஆறரை மணிக்கு நானும் கிளம்பிவிட்டேன். ஏழரை மணிக்கு ஸ்டேஷனை அடைந்தேன் எனக்கு அங்கு ஏழரை காத்திருப்பது தெரியாமல்.  போனவுடன் குருவை கூப்பிட்டேன். கட் செய்தான். ஐந்து நிமிடம் கழித்து மெஸேஜ் வந்தது. "In Meetin da. Gt bak 2 u ltr. U carry On" 

இருந்த ஒரே நம்பிக்கையும் போய்விட்டது. இப்போது நான் தனியாக தூத்துக்குடி வரை போய்விட்டு அன்றைக்கே திரும்ப வேண்டும். ட்ரெய்ன் வேறு வந்துவிட்டது. அரை நிமிடம் யோசித்தேன். 

ஃபோனை எடுத்து டயல் செய்தேன். "மைனர், நான் மகேஷ்"
"சொல்றா"
"ஒரு Severe Production Issue, நான் இருந்தே ஆகணும்"
"()*&^$%())_( )_*)*&*&0-)_()**^^&%   #)$)$" மைனர் அர்ச்சிக்க ஆரம்பித்தபோது ட்ரெய்ன் என்னை விட்டுவிட்டு போய்க் கொண்டிருந்த்தது.

பின்குறிப்பு : ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவுடன் எல்லாம் ஊட்டி போய்ட்டு வரலாமா என்று நேற்று கார்த்திக் கேட்டான். (தலைவர் இன்னும் வரவில்லை)

May 12, 2009

நியூட்டனின் மூன்றாம் விதி



தன் காதலியைக் கொன்ற வில்லனை "இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்று டைம் சொல்லி சொல்லி பழிவாங்கும் கதாநாயகன், அதே அவகாசத்தில் நாயகனை கொல்லத்துடிக்கும் வில்லன் இவர்களுக்கு இடையே நடக்கும் விறு விறு ரேஸ் தான் படம். ரொம்ப நாளைக்கு அப்புறம் வேகமான திரைக்கதையுடன் கூடிய படம். டைட்டில் போடும் போதே எதிர்பார்ப்பை கிளப்பிவிடுகிறார்கள். படமும் அதை ஓரளவிற்கு பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு அசைவையும் திட்டம் போட்டு நகர்த்தும் நாயகன் வில்லனின் புகழையும் பலத்தையும் அழிக்க ஆரம்பிக்கிறான். அதை சாமர்த்தியமாக எதிர்கொள்கிறான் வில்லன். இப்படி படம் முழுக்க பரபரப்பு. முழுப்படமே கிளைமாக்ஸ் எனும்போது விறுவிறுப்புக்கு சொல்லவும் வேண்டுமா? 


எஸ்.ஜே.சூர்யாவிற்கு அருமையான வேடம். கர கர குரலிலேயே அசத்துகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். எதிரிக்கு சவால் விடுவதிலும், அவனிடம் மாட்டிக்கொள்ளும்போது பரிதவிப்பதிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதே சமயம் படம் ஆரம்பித்தவுடன் வரும் அந்த காண்டம் மெஷின் காமெடியில் அக்மார்க் எஸ்.ஜே.சூர்யாவைப் பார்க்கமுடிகிறது!  

ஆஹா பட நாயகன் ராஜீவ்கிருஷ்ணா தான் வில்லன். வில்லத்தனம் செய்வதிலும் , மரண பயத்தில் புலம்புவதாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். ஆனால் படம் நெடுக வாயை மட்டும் ஒரு மாதிரி கோணலாகவே வைத்திருக்கிறார். அது தான் ஏனென்று புரியவில்லை.

சாதாரண ஒரு கதைக்கு ஆங்கிலப் பட வேகத்திற்கு திரைக்கதை அமைத்த இயக்குனரை எப்படி எப்படியோ பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் இந்த மாதிரி ஒரு திரைக்கதைக்கு பாடல், ஃப்ளாஷ்பேக் என்று வேகத்தடை போட்டு மொக்கையாக்கியதற்காக அப்படியே அடக்கிகொள்ள வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே வரும் ஒருசில லாஜிக் சொதப்பல்களையும் தவிர்த்திருக்கலாம். 

பிண்ணனி இசை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரும் இசை அசத்தல் ரகம். ஆனால் வில்லன் வரும்போதெல்லாம் ஓர் அம்மணி வயிற்று வலியால் அவதிப்படுவது போல கத்திக் கத்திக் கடுப்பேற்றுகிறார். பாடல்கள் சுமார் ரகம். காதல் தண்டோரா மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுவும் அந்த பாடல் காதலியின் கல்லறைக்கருகில் நிற்கும் காதலன், அவளை நினைத்துப் பார்ர்கும்போது ஆரம்பிக்கிறது. கர்மம்டா சாமி! 

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுக்க திரையை விட்டு கண்கள் அகலாமல் கட்டிப்போடுகிறார்கள். 

மொத்தத்தில் படத்தின் முதல் இருபது நிமிடங்களையும், பாடல்களையும் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் படம் பட்டாசு! சேர்த்துப் பார்த்தால் நமுத்துப் போன பட்டாசு :( 


கொசுறு: படத்தின் நாயகி? அவரே கொசுறு போல தான் இருக்கிறார். தள தள தக்காளிகளை ரசிக்கும் தமிழனிடத்தில் ஒரு அவரைக்காயை கொண்டு வந்து நிறுத்தினால் போணியாகுமா? சரி நடிப்பாவது வருகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. Spoof மூவி பார்க்கும் உணர்வு  தான் கிடைக்கிறது இவரைப் பார்த்தால். அவர் அழும்போதும், பயப்படும்போதும் சிரிப்பு வருது சார்! வேறு ஆளா கிடைக்கவில்லை? நாயகிகளுக்குமா Recession?

May 09, 2009

கலைஞரின் கதி என்ன?

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இல்லை, இருந்தா நல்லா இருக்கும் என்ற தசாவதாரம் டைப் அறிக்கைகள் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞரை வறுத்து எடுக்கும் அம்மாவும் காங்கிரஸ் பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. 

கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது. அதை, திடீர் ஈழத்து நாயகி அவதாரம் எடுத்த அம்மா பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, அழகாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். கலைஞர் எதிர்ப்பு வாக்குகள் வேறு அம்மாவுக்கு விழும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணங்களால் இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு குறைவான தொகுதிகள் கிடைத்து, அ.தி.மு.கவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு அம்மா தயவு தேவைப்படலாம். அப்போது காங்கிரஸ் காற்று திசை மாறி வீசக்கூடும். தமிழ்க்குடிதாங்கி அய்யா வேறு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என சூசகமாகக் கூறி புளியைக் கரைத்து வருகிறார். அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இதுவும் சாத்தியமே! 

எது எப்படியோ! இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கலைஞரின் நிலை தான் பரிதாபத்திற்குள்ளாகப் போகிறது. காங்கிரஸ் என்ற அரசனை நம்பி தமிழ்நாடு என்ற புருஷனை கைவிட்டது போல... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை - இது கலைஞர் சொன்னது தான். அந்த வார்த்தைகள் அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலையில் இருக்கிறது. 

கூட்டணி விசுவாசம் காட்டிய கலைஞருக்கு பதில் மரியாதை செய்யுமா காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

May 03, 2009

பசங்க - பட்டைய கெளப்புறாங்க!


இரத்தத்தையும், இடுப்புச்சதையையும் நம்பாமல் பிள்ளைப்பருவ சுகதுக்கங்களை மட்டுமே படமாக்கத்துணிந்த இயக்குனர் பாண்டிராஜ், தயாரித்த இயக்குனர் சசிகுமார் ஆகியோருக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான சில்லுவண்டித்தனமான மோதல்கள் தான் படத்தின் கதை. அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். 

ஜீவா, பக்கடா, குட்டி மணி ஆகிய மூவரும் உள்ளூர் தாதாக்கள். மூவரும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். இவர்களுக்கு பயந்து போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவிற்கு டெரரான ஆட்கள். "இவர்களை அடக்க ஒருவன் வராமலா போய்டுவான்? " என்று ஒரு பெருசு சொல்லும்போது நாயகன் (அன்புக்கரசு I.A.S -  I.A.S ஆகணுமாம்! )  அறிமுகம், அதுவும் வேட்டையாடு விளையாடு ரேஞ்சில் ஒரு அறிமுகப் பாடலுடன்! பக்கத்து ஊரிலிருந்து ஜீவாவின் எதிர் வீட்டிற்கு குடிவரும் குடும்பத்தின் மூத்த பையன். 

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போதே அன்புவுக்கும் ஜீவாவுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. ஜீவாவை வீழ்த்திவிடுகிறான் அன்பு. அதனால் அன்புவை தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாகவே நினைக்கிறார்கள் ஜீவா & கோவால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்கள். நிரம்பவும் டென்ஷனாகிறான் ஜீவா(இது அவரே சொல்றதுங்க!).போதாக்குறைக்கு ஜீவாவின் அத்தை மகள் மனோன்மணி அன்புவுடன் தோழியாகிவிடுகிறாள். கேட்கவும் வேண்டுமா? கூடத்திரியும் குட்டி ஸ்ரீமன்கள் வேறு (இப்ப இவர் தானே வில்லனுக்கு சைடு? ) ஜீவாவை ஏத்திவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் பயபுள்ள வன்மம் வைத்துக்கொண்டே திரிகிறது. 

இவர்களின் ரகளை குடும்பச்சண்டையாக மாறுகிறது. இதனிடையே வில்லனின்(?) அக்காவும், நாயகனின் சித்தப்பாவும் காதலிக்கிறார்கள். இறுதி வரை இரண்டு வானரக்கூட்டங்களும் அடித்துக்கொள்கின்றன. கடைசியாக ஒன்று சேர்ந்து, இரு குடும்பங்களும் ராசியாகி, காதல் கைகூடி சுபம். முதல் பாதி முழுக்க பிள்ளைகளின் சேட்டைகளைச் சொன்ன இயக்குனர், பின் பாதியில் நாம் புரிந்து கொள்ளாத அவர்களின் வலியையும் தொட்டுச் செல்கிறார். அதனால் பெரியவகளுக்கும் இருக்கு ஆப்பு.

நாயகனைப் பழிவாங்க, கருநாக்கு கொண்ட மாணவனிடம் காசு கொடுத்து சாபம் விடச் சொல்வது, தேனை அவன் தலையில் தேய்க்க முயல்வது,  ஐம்பது ஸ்டாம்ப் பந்தயமாக வைப்பது, போட்டி போட்டுக்கொண்டு படிப்பது, மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் என எண்ணுவது என்று பள்ளிக்கால நினைவுகளை எழுப்புகிறார் இயக்குனர். எனக்கு பாடம்சொல்லித்தந்த மாரிமுத்து சாரும், சாந்தஜோதி டீச்சரும், உடன் படித்த அழகுதுரையும், தாமரைச்செல்வியும் நினைவுக்கு வருகிறார்கள். 

படத்தின் ஊடே வரும் அந்த காதல், ஒரு அழகிய மெலடி. வில்லனின் அக்கா சோபிக்கண்ணுவாக சரோஜா பட புகழ் வேகா. நாயகனின் சித்தப்பா மீனாட்சி சுந்தரமாக விமல். இருவரும் அழகாகச் செய்திருக்கிறார்கள். பெரியவர்கள் ஓகே ரகம்.

படத்தில் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பாடியிருக்கிறார்கள். மற்றபடி பாடல்களும் பிண்ணனி இசையும் சுமார் ரகம். சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு ரொம்ப எதிர்பார்த்தோம் ஜேம்ஸ் சார்! ஒளிப்பதிவு,  மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் உறுத்தாத வகையில் இருந்தன. உண்மையில் அவற்றை கவனிக்க நேரம் கொடுத்திருக்கமாட்டார் இயக்குனர்.

இறுதிக்காட்சி ஊகிக்கக்கூடியதாக இருந்தது, டாக்டர் "ஏதாவது பேசுங்க" என்றதும் அரங்கத்தில் எல்லோரும் கைத்தட்ட ஆரம்பித்துவிட்டார்கள். :) மருத்துவமனையில் ஒரு ஊரே நின்று கைத்தட்டிகொண்டிருக்கும். அடப்பாவிங்களா! சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு காட்சியும் அமர்க்களம்.

ஜீவா, பக்கடா, குட்டி மணி, அன்பு, மனோன்மணி, மங்களம் (அப்பத்தா) ஆகிய "பசங்க"ளுக்கு அன்பு முத்தங்கள். (வேகாவையும் பசங்க லிஸ்ட்ல சேர்த்துக்கலாமே? ப்ளீஸ்...) இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மீண்டும் பாராட்டுக்கள்!

ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் நினவுகளை தூசி தட்டி எடுக்கும் கதைகள் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்தவகையில் இதுவும் ஒருவெற்றிப்படம். 

படங்கள் நன்றி : Indiaglitz

May 01, 2009

பத்மஸ்ரீ விவேக்


குரு என் ஆளு - மாதவன், அப்பாஸ், விவேக், மம்தா மோகன்தாஸ், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்த படம். இந்த படத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இந்த படத்தின் இடம்பெற்ற விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் துணுக்குறச் செய்தன. முக்கால்வாசி படத்தில் சரோஜாதேவி கெட்டப், ஸ்ரேயா கெட்டப் என்று பெண் வேடமிட்டு நடித்திருப்பார். ஆண் வேடம், பெண் வேடம் இரண்டிலும் இரட்டை அர்த்த வசனங்களில் புகுந்து விளையாடியிருப்பார். பெண் வேடமிட்டுருந்ததையே பார்க்க முடியவில்லை. அதில் அந்த மாதிரி வசனங்கள் வேறு! படிக்காதவன் படத்திலும் இதே போல தான். ஆரம்ப காட்சிகளில் ஒழுங்காக நடித்துவிட்டு இறுதிக்காட்சியில் எல்லாவற்றையும் மொத்தமாக போட்டு உடைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் ஆரம்பம் முதலே ஒரே மாதிரி தான். இவருடன் சேர்ந்து சிரிப்பு காட்ட சோனா, ஷர்மிலி என்று இருவர். கேட்கவும் வேண்டுமா? போதாக்குறைக்கு இறுதியாக மெசேஜ் வேறு. "ஒரு பொண்ண காதலிக்கறதுக்கு முன்னாடி, அவ மொதல்ல பொண்ணானு தெரிஞ்சிக்குங்க". முடியல... :( ஒரு அளவு வேண்டாமா ?

மின்னலே, ரன், சாமி, காதல் சடுகுடு போன்ற தரமான காமெடிகளைத் தந்தவரிடமிருந்து இந்த மாதிரி வருவது சகிக்க முடியவில்லை. நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது "என்னங்க இது, பத்மஸ்ரீ விருது வாங்கினவர் இப்படியா நடிப்பது?"  என்ற பேச்சு வந்தது. அவர் சினிமாத்துறையச் சேர்ந்தவர். "அவரை சொல்லி என்ன செய்வது? அவருக்கு வாய்க்கும் வேடங்கள் அப்படி" என்றார்.உண்மையாகத் தான் தோன்றியது. என்ன தான் தன் காமெடி ட்ராக்கை தானே எழுதிக்கொண்டாலும் இயக்குனர் ஒத்துக்கொள்ள வேண்டும். தவிர இயக்குனர்கள் எழுதும் ட்ராக் அவ்வாறு இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு நடிக்க முடியாது என்று சொன்னால் அதை செய்ய இன்னொருவர் காத்திருப்பார். வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்ய? 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு திறமையான கலைஞனை வீணடிக்கிறது கோலிவுட். அதே சமயம், விவேக்கும் வடிவேலுவுடனான போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு தரமான காமெடிகளைத் தர முன்வரவேண்டும். பார்க்கலாம்! 

April 28, 2009

நன்றி நன்றி நன்றி!!!

இன்று யதேச்சையாக மின்னஞ்சல் பார்த்த போது தான் இரண்டு பின்னூட்டங்கள் வந்திருப்பது தெரிந்தது. யாரது நம்ம பதிவுக்கு இவ்வளவு நாள் கழித்து பின்னூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே மின்னஞ்சலைத் திறந்தேன். ஆனந்த அதிர்ச்சி(கள்)! 


பதிவர் லவ்டேல் மேடி அவர்கள் தனது பட்டாம்பூச்சி விருதினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "என்னையும் நம்பி..." வசனம் தான் நினைவுக்கு வந்தது. லவ்டேல் மேடி அவர்களுக்கு நன்றி. 

அடுத்த பின்னூட்டம் கிருஷ்ண பிரபு அவர்களிடமிருந்து. வலைச்சரத்தில் அறிமுகப் பதிவராக என் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றார். ஆம்! பதிவர் அப்பாவி முரு அவர்கள் தனக்குப் பிடித்த பதிவுகளில் ஒன்றாக் எனது பதிவையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அப்பாவி முரு அவர்களுக்கு நன்றி.

இவர்களின் அங்கீகாரங்கள் மேலும் (ஒழுங்காக..:) ) எழுத உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

விருதளித்த லவ்டேல் மேடி,  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அப்பாவி முரு, தெரியப்படுத்திய கிருஷ்ண பிரபு ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசித்தும், பின்னூட்டியும் ஊக்கமளித்த அனைத்து நல்லியதயங்களுக்கும் எனது நன்றிகள்!

{}

சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. அதுவும் அங்கீகாரத்துடன் கூடிய சந்தோஷத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால், இந்த பட்டாம்பூச்சி விருதையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நண்பர் தமிழ்ப்பறவை அவர்களுடன்.

April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

April 22, 2009

பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் :)))

என் அண்ணன் மகள் திவ்யஸ்ரீயும், மாமா மகள் ஜீவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திவ்யாவிடம் "கண்ணு, ஜீவிகா அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்" என்றேன். திவ்யா முத்தம் கொடுக்கப்போகும்போது, ஜீவிகாவும் அவளைத் தான் சொல்கிறேன் என்று எண்ணிக்கொண்டு முத்தம் கொடுக்கப் போக... இந்த அழகிய காட்சியை நீங்களேபாருங்களேன்.


 

கொசுறு: 

ஜீவிகா மேடம் கரும்பு சாப்டறாங்க.



பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்!

வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் அலுவலகத்திலிருந்து பொன்னுசாமிக்கு (சோழிங்கநல்லூர்) போய் சாப்பிடுவது வழக்கம். அப்படி போன வாரம் சென்று திரும்பும் போது வழியில் கண்ட ஒரு காட்சி மனதை உருக்கியது. ஒரு உணகவகத்தின் பெயர்ப் பலகையை கையில் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார் அதன் காவலாளி. எப்படியும் அவருக்கு அறுபது வயதிற்கும் மேலிருக்கும். சென்னையின் வெயிலைப் பற்றி வேறு சொல்லவே தேவையில்லை. அந்த உச்சி வெயிலில் பெயர்ப்பலகையை கையில் ஏந்தியபடி வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார் பெரியவர். பெயர்பலகையைக் கூட பொருத்த துப்பில்லாத அந்த கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் தான் என்று மனதார சபித்துகொண்டே வந்தோம்!

{}
 
நேற்று நண்பன் பரணிக்கு பிறந்த நாள். கொண்டாட்டங்கள் (?) அனைத்தும் வழமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அஹிம்சை முறையில் நடந்து முடிந்தன.  எங்கள் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு என தனி வரைமுறைகள் இருக்கின்றன. பிறந்தநாள் கொண்டாடுபவனை கை கால்களை பின்புறம் கட்டி மண்ணில் போட்டு உதைக்க வேண்டும். உள்ளாடை நீங்கலாக மற்ற அனைத்தையும் கழற்றிவிட்டு அடி போட வேண்டும். துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் உட்பட கையில் கிடைக்கும் திரவங்கள் அனைத்தையும் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள். கிட்டத்தட்ட இப்படி இருக்கும் 
 


இப்படி வழமையான நெறிமுறைகளை மீறி, சுய முரண்பாடுகளுடன் (எங்களுக்கு) கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவை பின் நவீனத்துவ பிறந்தநாள் என்றே கருதுகிறோம். :)

நோ நோ! இதுக்கெல்லாம் எதுக்கு கட்டைய தூக்குறீங்க? 

{}
மரியாதை திரைப்படத்தின் இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுதோன்றியது.

{}

நியூட்டனோட தங்கமணி ஒருநாள் அவர்கிட்ட கேட்டாங்களாம் "ஏங்க, நான் எப்படி இருக்கேன்?" அப்படின்னு.

அதுக்கு அவர் சொன்னாராம்.  Tan C / Sin C

தங்க்ஸ்: அப்படின்னா ?

நியூட்டன் : Tan C / Sin C     =    (Sin C / Cos C)  / Sin C =   1/Cos C = Sec C

செக்சி!!!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 

குறிப்பு : எஸ் எம் எஸ்ஸில் வந்தது. திரிகோணவியல் அறிந்திராத நண்பர்கள் மன்னிக்க!

*****

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More