March 05, 2009

புற்றை இடித்தால் கனவில் பாம்பு வருமா?

பதிவர் வித்யா அவர்களின் பாம்பு சம்பந்தப்பட்ட இந்த இடுகையைப் பார்த்ததும் உன்மையிலேயே டரியல் ஆகிவிட்டது. சுவாரஸ்யமாக படித்துக்கொண்டு இருக்கும்போது பாம்பு படத்தை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.
இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இறுதி ஆண்டு படிக்கும்போது தேசிய அளவில் கருத்தரங்கு ஒன்றை நடத்த துறைத் தலைவர் அனுமதி கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். போஸ்டர் டிசைன் செய்வது, நிதி வசூலிப்பது, சுத்தம் செய்வது இப்படி நிறைய வேலைகள்.
நான் படித்தது சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில். எங்கள் கல்லூரியில் காலி இடத்திற்கு பஞ்சமே இல்லை (பெரியார் பல்கலைக்கழகம், இந்தியன் ஆயில் நிறுவனம் இவை போக ஒரு 200 ஏக்கர் தேறும்). அதனாலேயே புதர்கள் நிறைய உண்டு. அதோடு பாம்பு புற்றுகளும்... எங்கள் துறை கட்டிடம் முன்பு இருந்த வெட்டவெளியிலும் நான்கு புற்றுகள் இருந்தன. அந்த இடத்தையும் சுத்தம் செய்தாக வேண்டும். புற்று அருகில் செல்வதற்கே பயம். எங்கள் ஆசிரியர் வேறு "தூக்குங்கடா அந்த புத்த! " என்று ரம்யா கிருஷ்ணன் போல சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். வேறு வழியின்றி சூரப்புலிகள் நான்கு பேர் கையில் கடப்பாரை, மண்வெட்டிகளுடன் குல தெய்வங்களை வேண்டிக்கொண்டே களத்தில் இறங்கினோம். கடப்பாரையை புற்று மேல் இறக்கியதும் அந்த இடமே அதிர்ந்தது. அட, புற்று அவ்வளவு ஸ்ட்ராங்க். சரி, தண்ணீர் விட்டு கரைப்பது என்று பொதுக்குழு எல்லாம் கூட்டாமலேயே தீர்மானித்தோம். பைப் இழுத்து புற்றுக்குள் தண்ணீர் விட ஆரம்பித்தோம். தண்ணீர் விடுவதும் மண்வெட்டியில் வெட்டுவதுமாக புற்று கொஞ்சம் கரைந்தது. அப்போது தான் தலையை சிறிது மேலே தூக்கி பார்த்தார் நண்பர். பார்த்ததும் தெரிந்துவிட்டது நாகம் இல்லையென்று. அப்பாடா என்று இருந்தது. தலையை பார்த்ததும் கடப்பாரையை ஓங்கி ஒரு குத்து குத்தினேன். தலையை உள்ளே இழுத்துக்கொண்டது. அதற்கப்புறம் வேலை வேகமாக நடந்தது. புற்றும் சீக்கிரம் கரைய ஆரம்பித்தது. பாம்பும் தலையைத் தூக்கி பார்ப்பதும், உள்ளே இழுத்துக்கொள்வதுமாக இருந்தது. எங்களிடம் அடிபட்டு சாவதை விட தண்ணீரில் மூழ்கி செத்து தொலையலாம் என்று நினைத்தது போலும். விடுவோமா நாங்கள்? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வேலையைத் தொடர்ந்தோம்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த பாம்பு உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்தது. ஆகா.. சாரைப்பாம்பு. எப்படியும் ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும். சாரைப்பாம்பின் வேகம் அசாதாரணமானது. வெளியே வந்ததும் கிடைத்த சந்தில் ஓடப்பார்த்தது. அருகில் இருந்த ஜெயப்பிரதி, கையில் இருந்த மண்வெட்டியைத் திருப்பி அதன் தலையில் ஒரு போடு போட்டான். நானும் கோபாலும் கடப்பாரையால் ரெண்டு போட்டோம். சில வினாடிகளில் அசைவு நின்று விட்டது. உயிர் போய்விட்டதா என்று தெரியாததால் இன்னும் நாலு சாத்து சாத்தினோம். முடிந்தது அதன் கதை.
இவ்வளவு நேரம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் கிட்ட வந்து கதை பேசத் தொடங்கிவிட்டார்கள். எரிக்க வேண்டும், இல்லை.புதைத்தால் போதும் என்று (டேய்.. என்னங்கடா, நாட்டாமை படத்துல செத்துப் போன டீச்சருக்கு காரியம் பண்ற ஃபீல் கொடுக்கறீங்க? ). சரி கருமம் தொலையுது என்று எதிர்த்தாற்போல இருந்த டீக்கடையில் கொஞ்சம் பாலும் மஞ்சள் தூளும் வாங்கி, என் அழுக்கு கைக்குட்டையில் பாலை விட்டு மஞ்சள் தூளை தடவி, ஒரு ஐம்பது பைசாவை அதில் கட்டி பாம்பின் மேல் போட்டு கொள்ளிவைத்துவிட்டு எஸ்கேப்..... ஆச்சரியமாக மற்ற மூன்று புற்றுகளிலும் பாம்பே இல்லை. இவை எல்லாம் அந்த பாம்பின் கெஸ்ட் ஹவுஸ் போல...
அதற்கப்புறம் அங்கு இருந்த புதர்களையெலாம் அகற்றி சுத்தம் செய்து, மற்ற வேலைகளையெலாம் செய்து முடித்து பல்வேறு அரசியல் விளையாட்டுகளுடன் கருத்தரங்கு நடந்த கதையை சொன்னால், கல்லூரி இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்படுவேன்.

கொசுறு: எங்கள் துறையில் இருந்த ஆய்வக உதவியாளர் வேறு "இன்று உங்கள் கனவில் பாம்பு வரும்" என்று பயமுறுத்திவிட்டார். பாம்பு வந்தால் கூட பரவயில்லை. நாககன்னி கெட்டப்பில் இந்நாளைய ஸ்ரீப்ரியா வந்துவிட போகிறார் என்ற பயத்தில் தூங்கப் போனேன். நல்ல வேளையாக அன்றைய கனவில் அசின் வந்து ரட்சித்து அருளினார்!!!

March 04, 2009

அல்டாப்பு பஸ் ஸ்டாப்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான நிழற்கூடத்தைக் கட்டி உள்ளது. GPS முறையில் பேருந்துகளின் இருப்பிடம் அறியும் வசதி, சில்லறை மாற்றும் இயந்திரம், ISD வசதியுடன் கூடிய பொது தொலைபேசி, செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி, மின்விளக்குகள், இரண்டு மின்விசிறிகள், தூரத்தில் வரும் பேருந்துகளை பார்க்க Concave கண்ணாடி (குவி ஆடி தானே ?), கடிகாரம், வசதியான இருக்கைகள், வெப்பநிலை அறியும் வசதி மற்றும் இவற்றை எல்லாம் பாதுகாக்க காவலாளி என்று நிழற்கூடம் அமர்க்களப்படுகிறது. இதுபோல இன்னும் 500 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். நல்ல செய்தி.
இவை எல்லாம் கண்டிப்பாக பயணிகளுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒழுங்காக பராமரிக்க படவேண்டும், அவ்வளவு தான். முக்கியமாக மழை காலங்களில். சாதரணமாகவே அந்த இடத்தில் மழை பெய்தால் நிழற்கூடத்திற்கு பின்னால் இறக்கும் மைதானம் வரை சாரல் அடிக்கும். இப்போது இந்த இயந்திரங்கள் மேல் கண்டிப்பாக சாரல் விழும். காப்பாற்ற என்ன செய்ய போகிறார்களோ! இவ்வளவு செய்தவர்கள் இதைப் பற்றி யோசித்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
நண்பர் ஒருவர் இயந்திரத்தில் சில்லறை மாற்ற ஓரிரு முறை முயன்றிருக்கிறார். "No Stock" என்றே பதில் வந்ததாம்! இதெல்லாம் சரி செய்தால் மகிழ்ச்சி.
எப்படியோ... ஒரு நல்ல முயற்சியை நாமும் வாழ்த்துவோம்!!!

நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமே உடுக்கை அடித்துவிட்டது போல் திரியப்போகிறது. தலைவர்கள் கழகக் கண்மணிகளையும், ரத்தத்தின் ரத்தங்களையும் உணர்ச்சி பொங்கும் குரலில் கட்சிப்பணி செய்ய அழைப்பார்கள். இரண்டாம் நிலை கட்சிகள் கூட்டணி பிடிக்க அலையும். இவ்வளவு நாள் காணாமல் போன சில லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் "மக்கள் பிரச்சனைகள் தீர எங்களுக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூப்பாடு போடும். ஒருவருக்கொருவர் மற்ற கட்சியினர் மேல் புகார் சேற்றை வாரி இறைப்பார்கள். காவிரி பிரச்சனை, இட ஒதுக்கீடு பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, தேசிய பாதுகாப்பு பிரச்சனை இவற்றை எல்லாம் தீர்க்கப்போகிறோம் என்று கூசாமல் பொய் சொல்வார்கள். பிரியாணிக்குள் தங்க காசு வைத்து தருவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு ஒரு குளிர்சாதன பெட்டி தருவோம் என்று வாக்குறுதி வெளியிடுவார்கள். தேர்தல் முடிந்த பின் இவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு என்று பெருமை பேசுவார்கள். இப்படி நிறைய....
எல்லாம் சரி, வாக்காளர்கள் பாடு தான் திண்டாட்டம். ஓட்டு புதிதாக முளைத்த தன் ஜாதிக்கட்சிக்கா, மனம் கவர்ந்த நடிகன் "வாய்ஸ்" கொடுக்கும் கட்சிக்கா, கண்மூடித்தனமாக இவ்வளவு நாள் ஓட்டு போட்டுக்கொண்டிருந்த முதுபெரும் கட்சிக்கா அல்லது வாக்குப்பதிவு நாளன்று பிரியாணியும் கட்டிங்கும் கொடுத்த கட்சிக்கா என்று குழம்ப போகிறான். ஒரே கொள்கை உடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது எல்லாம் பழைய பேஷன். இப்போது பேரம் படிந்தால் கூட்டணி ரெடி. ஒரே கூட்டணியில் கொள்கை முரண் உள்ள கட்சிகள் இருக்க முடியும். போதாக்குறைக்கு ஜாதி கட்சிகள் வேறு. ஓட்டளிப்பது எல்லாம் இப்போது இடியாப்ப சிக்கல் ஆகிவிட்டது. குழப்பம் வர தானே செய்யும்?
பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்று நம்பி தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு போடுகிறோம். அந்த பிரச்சனைகளை பத்திரமாக வைத்திருந்தது அடுத்த தேர்தலுக்கு அதே பிரச்சனைகளை முன்வைத்து ஓட்டு கேட்பார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஒரே ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. "நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!"

February 25, 2009

அழகுக்குட்டி செல்லங்கள்.

குழந்தைகள் என்றாலே அழகு. அதிலும் அவர்கள் ஆடினால்....

மின்னஞ்சலில் வந்த இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த வாண்டு ஆடும் ஆட்டத்தை பாருங்கள். எந்த நடிகை ஆடும் ஆட்டத்தை பார்த்ததோ!


அழுதுகொண்டே ஆடினாலும் தாளம் தப்பாமல் ஆடுவேன்.

February 23, 2009

த நா 07 அல - 4777


நானா படேகர், ஜான் ஆப்ரகாம் நடித்த "Taxi No 9211" என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் தான் இந்த படம் (ஹிந்தியிலேயே ஒரு ஆங்கில படத்தை தழுவி தான் எடுத்தார்கள் என்று கேள்வி!). நானா படேகர் நடித்த பாத்திரத்தில் பசுபதி. அவர் மனைவியாக சிம்ரன். ஜான் ஆப்ரகாம்க்கு பதில் "அஞ்சாதே" அஜ்மல். அவர் காதலியாக மீனாக்ஷி.முதலில் வழக்கமான நாயகன்-நாயகி டூயட், அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது, டான்ஸ் ஆட வெளிநாட்டுக்கு போவது என்று போர் அடிக்காமல் இருந்ததற்காகவே டைரக்டருக்கு ஒரு "ஜே" போட்டு விடலாம். இனி சுருக்கம். பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன். பணக்காரர்களால் தான் வாழ முடியவில்லை என்று நினைக்கும் ஒரு டாக்ஸி டிரைவர். இருவரும் சந்திக்கிறார்கள். அதிலிருந்து அன்று இரவு வரை நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். சில இடங்களில் சுவாரஸ்யமாக. சில இடங்களில் மொக்கையாக. பசுபதி, சிம்ரன் ஆகியோர் நன்றாக நடித்து இருந்தார்கள், வழக்கம்போல. அஜ்மல் ஸ்மார்ட் ஆக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மீனாக்ஷி விஜய் பட நாயகியை விட குறைவான காட்சிகளிலேயே வருகிறார். பசுபதி பாத்திரம் கொஞ்சம் ஓவரோ? என்ன தான் பணக்காரர்களால் மேல் வெறுப்பு இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கா போவர்கள்? அதுவும் இரண்டு முறை. அப்புறம் அந்த கார் சண்டை. காரிலேயே குத்துச்சண்டை போடுவார்கள் போல! அதுசரி, இந்த படத்திற்கு எதற்கு பாட்டு? ரெண்டு நாயகர்களுக்கும் பாட்டு வைத்து படத்தை இழுத்துவிட்டார்கள். விஜய் ஆண்டனி சார், நீங்கள் போட்டிருக்கும் பாடல்கள் நெஞ்சாங்கூட்டில் நிற்கவில்லை. ஆத்திசூடியை இப்படியா குதறி வைப்பது? 
பத்திரத்தை கிழித்து சுவற்றில் ஒட்டியிருந்ததை பார்த்ததுமே முடிவை ஊகிக்க முடிகிறது. நல்ல, வித்தியாசமான கதையை தொய்வான திரைக்கதை மூலம் வீணடித்துவிட்டர்கள். இடைவேளைக்கு அப்புறம் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாமி அடித்த கமெண்ட்கள் கூட படத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது. 

படத்தில் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி அம்சவல்லி! அட நம்ம பூஜாவை சொன்னேன். அவரும் கொஞ்சூண்டு வருகிறார். அவ்ளோதான்!  

த நா 07 அல - 4777 - சவாரி கிடைக்கும்.

February 22, 2009

இசைப்புயலுக்கு இரண்டு விருதுகள்!!!

"எல்லா புகழும் இறைவனுக்கே!" திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் தான் இவை. இந்தியத் திரைத்துறையின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டு இவ்வாறு சொன்னார். அதுவும் ஒன்றுக்கு இரண்டு விருதுகள். ஒரு தமிழனாக உடல் சிலிர்த்தே போய்விட்டது. ஆனால் இந்த விருது ரஹ்மானுக்கு தாமதமாக கிடைத்தது என்றே சொல்லலாம். ஒரு "ரோஜா" ஒரு "இருவர்" ஒரு "உயிரே".... போகட்டும். வாழ்த்துக்கள் ரஹ்மான்!!!

இனி நிறைய தமிழ் படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிந்து பைரவி சுகாசினியை சொல்ல சொன்னால் "தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு" என்பார். :)

February 20, 2009

நடிகர் விஜய்யிடம் வில்லு படம் பற்றி நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

10) காமெடி பண்றேன் பேர்வழினு கோவை தமிழை கொலை பண்றீங்களே அத எப்போ நிறுத்துவீங்க?

9) இந்த படத்துலயும் ஓபனிங் சாங் மத்த படங்கள் மாதிரியே இருக்கே, அது எப்படிங்க முடியுது?

8) ஒரு வில்லன Water Scooter ல கடத்திட்டு வருவீங்க. ஒரு Dive அடிச்சு Boat கீழ போவீங்க. வெளிய வந்ததும் Water Scooter மட்டும் அங்கேயே நிக்கும். ஆனா தொரத்திட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க. அது ஏனுங்க?

7) நடுகடல்ல நின்னுட்டு நீந்திக்கிட்டு இருப்பீங்க. வில்லன அடிக்கறதுக்கு எதையோ எடுக்குற மாதிரி காட்டுவாங்க. ஆனா அது கடல் அடியில கிடக்கும். எப்படிங்க எடுத்தீங்க? உங்களுக்கு அவ்ளோ பெரிய கையா?

6) சோளக்கொல்லை பொம்மை மாதிரி Intro Scene வச்சா நல்லா இருக்கும் அப்படின்னு கப்பித்தனமான ஐடியா யார் கொடுத்தா?

5) மானாட மயிலாடிக்கொண்டு இருந்த பழம்பெரும் நடிகை குஷ்புவை படத்துல ஆட வச்சு கூட எங்கள கடுப்படிக்கலாம்னு எப்படி தோனுச்சு?

4) எல்லா சண்டைகாட்சிகளிலும் சட்டை காலரை கடிச்சுகிறீங்களே அது ஏனுங்க?

3) மீசைய கொஞ்சமா முறுக்கி விட்டா அப்பா விஜய் ஆய்ட்றீங்க. ஆனா யாருக்கும் உங்கள அடையாளம் தெரியறது இல்ல. உங்க அம்மா ரஞ்சிதாவ பார்த்த உடனே நீங்க யாருன்னு கண்டுபுடிசுட்றாங்க. அது எப்படிங்க?

2) லொள்ளு சபா, பதிவுலகம் இப்படி எல்லா இடத்துலயும் உங்கள கலாய்க்கறாங்களே. ஆனா அதுக்கெல்லாம் கவலையே படாம அதே மாதிரி படம் நடிக்கிறீங்களே இதுக்கெல்லாம் உங்க அப்பா உசுப்பேத்தி விடறது தான் காரணமா?

1) Ok. Jokes Apart. எப்ப "படம்" நடிக்க போறீங்க?

February 13, 2009

"தல" & "தளபதி".... தாங்க முடியலடா சாமி.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

நீங்க மட்டும் தானா? நாங்களும் செய்வோம்ல!

செம்ம காமெடி சார் நீங்க!!!

January 25, 2009

என்னை தெரியுமா?


50 First Dates படம் பார்த்து இருக்கிறீர்களா ? குல்பி பிகர் Drew Barrymore நடித்த படம். ஒரு கார் விபத்தில் அம்னீஷியாவால் பாதிக்கப்படுவார். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் முதல் நாள் நடந்தது மறந்து விடும். அதே கதை. Barrymore க்கு பதில் நாயகன் மனோஜ். (தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் கலை வாரிசு). க்ரைம், த்ரில்லர் எல்லாம் சேர்த்து குருமா வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். மனோஜ் கன்னம் குழி விழ சிரிக்கிறார். படம் முழுக்க புஜ பலம் காட்டுகிறார். நாயகனின் சித்தப்பாவாக வரும் நாசர் பொசுக் என்று செத்து போகிறார். கொலைப்பழி நாயகன் மீதே விழுகிறது. யார் கொலை செய்தார்கள் என்பதே மீதிக் கதை. யார் செய்தார்கள் என தெரியும் போது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. நாயகிகளாக சினேகா உல்லல் மற்றும் ரியாசென். சினேகா உல்லல் ஐஸ்வர்யா ராய் ஐ ரீ-மிக்ஸ் செய்த மாதிரி இருக்கிறார். வழக்கை விசாரிக்கும் IPS அதிகாரி அவர். விசாரணைக்கு மனோஜ் ஐ கூடவே கூட்டி கொண்டு அலைகிறார். காமெடிக்கு பிரமானந்தம் மற்றும் சுனில். அவர்களை விட மனோஜ் மேல். ஒரு சண்டை காட்சியில் ஆதி விஜய் ஐ கலாய்க்கும் போது தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது. பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. தண்ணி கருத்திருச்சு ரீ-மிக்ஸ் ஆட வைக்கிறது. ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. படத்தில் இன்னொரு நல்ல விஷயம் Dressings. குறைவாக இருப்பதால் சொல்லவில்லை, அழகாக இருக்கிறது. ஆனால் படத்தில் எதோ ஒன்று குறைகிற மாதிரியே இருக்கிறது. காட்சிகள் பல ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாமல் தொங்குகின்றன. திரைக்கதையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். மொத்தத்தில் சுமார் ரகம் . அதுவே வேறு எதுவும் டிக்கெட் கிடைக்காமல் டைம் பாஸ் செய்தே ஆக வேண்டும் என்று இந்த படத்துக்கு போனால் "நல்லா தான் இருக்கு" என்று மனசை தேற்றிக்கொள்ளலாம்.

August 26, 2008

ஏற்காடு பயணம்

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைத்ததும் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினோம் ஏற்காட்டிற்கு. பேருந்து மற்றும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு செய்துவிட்டிருந்தோம். மூன்று நாள் ஏற்காட்டில் என்ன செய்ய போகிறோம் என்ற கவலை Clifton Inn புண்ணியத்தில் தீர்ந்தது (பாதி நேரம் அறையில் தண்ணீர் வராமல் அடைந்து கிடந்தால் எப்படி வெளியே போவதாம்? ).
அறைக்குப் போய்ச் சேர்ந்ததே வெள்ளி மதியம் தான். குளித்து சாப்பிட்டு விட்டு Sight seeing கிளம்பினோம். முதலில் சென்றது சேர்வராயன் கோயில்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5300அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் தான் சேர்வராயன் குன்றுகளிலே உயரமான இடம். இங்கு இருப்பது குகை கோயில். இந்த குகை கர்நாடகாவில் இருக்கும் தலைக்காவிரி வரை செல்வதாக சொல்கிறார்கள். இந்த மலையைச் சுற்றி இருக்கும் சுமார் 50 மலைக் கிராமங்களுக்கு இது தான் காவல் தெய்வம். ஆண்டு தோறும் மே மாதம் இங்கு விழா நடைபெறுகிறது.

தரிசனம் முடிந்து அங்கிருக்கும் View Point வந்தால் ஒரே பனி மூட்டம். இங்கிருந்து பார்த்தால் மேட்டூர் அணை தெரியும் என்றார்கள். பார்க்க முடியவில்லை. அருகில் ஓர் பெரிய சமவெளி. வாகனங்களில் பாடலை ஒலிக்க விட்டு பலர் ஆடிக்கொண்டிருந்தனர்.

கீழே வரும் வழியில் ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. மிகச்சிறிய ஆனால் மிக அழகான கோயில். அம்மன் சிலை ஒரே கல்லால் ஆனது. விஜயதசமி இங்கு விசேஷம்.

பின்பு நேரே பகோடா பாயிண்ட் போனோம். அங்கிருந்து அரூர்,கிருஷ்ணகிரி பகுதிகளைப் பார்க்கலாம். இங்கு பிரமிட் வடிவில் அடுக்கபட்டிருக்கும் கல்கள் பலவற்றை காணலாம். இதன் மூலம் தான் இதற்கு பகோடா பாயிண்ட் என்று பெயர் வந்தது என்று அங்கிருந்த ஒரு டீக்கடைகாரர் சொன்னார். அங்கே சிறிது நேரம் கழித்துவிட்டு அறைக்கு திரும்பினோம்.
அடுத்த நாள் தான் பிரச்சனையே. காலையில் சுமார் மூன்று மணி நேரம் தண்ணீர் வரவில்லை. Service ம் சரி இல்லை. இந்த Hotel வேண்டாம் என்று காலி செய்து விட்டு வேறு Hotel பார்த்து தங்கினோம். இதற்குள் பாதி நாள் ஓடி போனது. மதியமாகக் கிளம்பினோம் அருவிக்கு. சுமார் 2 கி.மீ வரை காரில் சென்று பின் ஒரு கி.மீ கீழிறங்க வேண்டும். மிகவும் சரிவான ஒற்றையடி பாதை. ஒரு புறம் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் முள் வேலி. மறு புறம் மலைச் சரிவு. வழுக்கினால் பிடித்துக்கொள்ள கூட எதுவும் இல்லை. கைகளை ஊன்றி தான் இறங்க வேண்டும். ஒரு வழியாக இறங்கி அருவியைச் சென்றடைந்தோம். அருவியைக் கண்டதும் வந்த களைப்பெல்லாம் ஓடியே போனது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பருவ மழைக்கு பிறகு சென்றால் அருவியில் நிறைய தண்ணீர் இருக்கும். ஒரு மணி நேர குளியலுக்கு பிறகு மேலேற ஆரம்பித்தோம். மேலே வருவது கீழிறங்குவதை விட சிரமமாக இருந்தது. கால்கள் இரண்டும் சரியான வலி. கஷ்டப்பட்டு மேலே வந்து சேர்ந்தோம்.
அறைக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஏரிக்கு கிளம்பினோம். போய்ச் சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. படகு சவாரி செல்ல முடியவில்லை. ஏரியின் நடுவில் சிறு தீவும் அதனுள் ஒரு பூங்காவும் இருக்கின்றன. ஏரியின் அருகில் அண்ணா பூங்காவும், அதன் கரையில் மற்றொரு பூங்காவும் இருக்கின்றன. எல்லாம் பார்த்து விட்டு, இரவு உணவுக்கு வாங்க வேண்டியதெல்லாம்(!) வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றடைந்தோம். 9 மணி வாக்கில் மழை ஆரம்பித்தது. Balcony யில் உட்கார்ந்து கொண்டு, இருளையும் மழையையும் ரசித்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மூன்றாம் நாள் காலையில் Ladies Seat, Gents Seat, Children's Seat. Rose Garden ஆகியவற்றிற்கு விசிட் அடித்தோம். இவை எல்லாம் அருமையான View Points. சேலம் நகரின் அழகையும், பனி மூடாமல் இருந்தால் காவிரி ஆற்றையும் ( Telescope ) பார்த்து ரசிக்கலாம். Rose Garden இல் சிறிது ஓய்வு எடுத்து விட்டு அறைக்கு திரும்பினோம். ஏற்காட்டைப் பிரிய மனம் இன்றி பிரியாவிடை கொடுத்துவிட்டு சேலம் கிளம்பினோம். வரும் வழியில் முதல் நாள் மழையில் முளைத்துவிட்டிருந்த பல திடீர் அருவிகள் கண்ணுக்கு விருந்தளித்தன. அடுத்த நாள் ஆரம்பிக்க போகும் இயந்திர வாழ்கையை எண்ணிக் கொண்டே, மூன்று நாள் அனுபவித்த சொர்க்கத்தை விட்டு கீழிறங்கினோம். :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More